கொண்டாட்டங்கள் மனிதர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.
-கௌசி- ஜெர்மனி
சித்திரை மாதத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகின்றார்கள். இம்மாதத்தின் முதல்நாள் முட்டாள்கள் தினமும் கொண்டாடப்படுகின்றது. இங்கு ஏமாற்றத்துடன் ஆரம்பிக்கப்படும் இம்மாதம் கேலியையும், கிண்டலையும் ஏமாற்றத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
ஆனால்,புதுவருடம் என்று தமிழர்கள் கொண்டாடுகின்ற இவ்வருடப்பிறப்பு தனியே கொண்டாட்டத்திற்கு மட்டுமே உரிய நாளாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்கு வட்சப்பிலும் முகநூலிலும் வாழ்த்துச் சொல்லும் நாளாக மட்டுமே காணப்படுகின்றது. இது ஒருபுறம் இருக்க இப்போது திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழர்கள் ஆண்டு என்று சொல்லப்பட்டுத் தமிழர்கள் ஏற்று நடக்கின்றனர். கிரிகோரியன் ஆண்டு 2023 ஆம் ஆண்டை 2054 என்கிறது. அதேபோல் எம்முடைய வள்ளுவர் ஆண்டும் 31 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கின்றது.
தமிழ் பஞ்சாங்கத்தின்படி தை 14 ஐத் தமிழர்கள் தை 1 என்கின்றார்கள். இது என்ன இடியப்பச் சிக்கல். யார் என்ன சொன்னாலும் தைமாதம் முதலாம் திகதி வெடிக் கொழுத்தி, வானவேடிக்கைகள் காட்டி, வைன் போத்தலை உடைத்துக் கையிலே வைன் கிளாஸை வைத்துக் கொண்டு ஹெப்பி நியூ இயர் சொல்லுகின்றவர்களும் தமிழர்கள்தான். தைப்பொங்கல் புதுவருடம் என்று கொண்டாடுபவர்களும்; தமிழர்கள்தான். சித்திரைப் புத்தாண்டை வழுக்கு மரம் ஏறிக் கொண்டாடுபவர்களும் தமிழர்கள் தான்.
சங்க இலக்கியங்களிலுள்ள நெடுநெல்வாடையில் நக்கீரர்
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
என்று பாடியுள்ளார். திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேஷ ராசி தொடங்கி மற்ற ராசிகளில் சென்று திரியும் சூரியன் என்று எழுதப்பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் மேஷ ராசியையே முதல் ராசியாக கருதினர். எனவே மேஷ ராசியில் சூரியன் திரியும் மாதம் சித்திரை, ஆகவே அதுவே சங்ககால மக்களின் முதல் மாதமாகச் சொல்லப்பட்டது. ~~சித்தர்களின் ஜோதிட வருஷாதி|| என்ற நூலிலும் சித்திரைதான் முதல் மாதம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
மலைபடுகடாம் என்னும் நூலில் தலைநாள் பூத்த தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” எனவும், சிறுபாணாற்றுப்படையில் தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்” என இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தமிழ்த்
தெய்வம் திகழும் திருநாட்டில்,
இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின்
ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.
என நாமக்கல் கவிஞரும் சித்திரையில் புத்தாண்டு என்று பாடியுள்ளார்கள். இவ்வாறு; இலக்கிய மாந்தரால் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளதை இலக்கியங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
1912 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியிலும் சித்திரை முதல்நாள் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்திலே இந்த ஏப்ரல் முதலாம் திகதி வித்தியாசமான ஆடைகளை அணிந்து தாந்தோன்றித் தனமாகத் திரிவார்களாம். ஒவ்வொருவரும் மற்றவர்களை ஒரு பொய்யை மெய் என்று நம்ப வைத்து கேலிக்கைகளைச் செய்து மகிழ்வார்களாம். ஜெர்மனியில் மாசி மாதத்திலே கார்னிவல் கொண்டாட்டம் நடத்தப்படும். அதில் விதம் விதமான ஆடைகள் அணிந்து தம்மைத் தாமே ஏமாற்றி மனிதனை மிருகமாகவும் பேயாகவும், பைத்தியமாகவும் இப்படிப் பலவகையில் பாவனை பண்ணி ஆடைகள் அணிந்து கொண்டாடுவார்கள். மனிதன் புதிதுபுதிதாகத் தன்னை மாற்றிப் பார்ப்பதில் விருப்புடையவன். இதில் வரலாற்று ஆசிரியர்களும் தம்முடைய உழைப்பைப் போடுகின்றார்கள். அவர்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகளாய் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அன்றைய ரோமானியர்களும் சித்திரை முதலாம் திகதியை புத்தாண்டு தினமாக பரிசுப் பொருள்கள் கொடுத்து மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கின்றார்கள். ஐரோப்பாவிலும் 16 ஆம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதலாம் நாள்தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பின்தான் ஜனவரி முதலாம் நாள் புத்தாண்டு தினமாக, மாற்றப்பட்டது. தொடர்ந்து சித்திரையை புத்தாண்டு தினமாகக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் என்று கூறி முட்டாள்கள் தினம் ஆரம்பிக்கப்பட்டது.
பிரான்சிலே ஏப்ரல் மீன்கள் என்று கேலி செய்பவர்களைக் காணலாம். மீன் வடிவத்தை காகிதத்தில் வெட்டி தம்முடைய நண்பர்களின் முதுகிலே ஒட்டி விடுவார்கள். இவர்களைக் காண்பவர்கள் ஏப்ரல் மீன்கள் என்று கேலி பண்ணுவார்கள். இவ்வாறு ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது.
எந்த நாளாக இருந்தாலும் கொண்டாட்டங்கள் மனிதர்களைப் புத்;துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது. நாம் சித்திரை 14 ஆம் திகதி, தை முதலாம் திகதி, தை 14 ஆம் திகதி என்று மூன்று தினங்களையும் புதுவருடம் என்று கொண்டாடுவோம். பூமியே சுற்றும் திசையை மாற்றப் போகிறதாம். சூரியனும் பூமியை விட்டு தூரம் போகிறதாம். எல்லாம் தலைகீழாகும் போது இருக்கும் வரை கொண்டாட்டங்கள்தான் மிஞ்சப் போகிறது. அனுபவிப்போம்;.
1,054 total views, 3 views today