காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?

காதுக் குடுமி அகற்றுதல். எப்பொழுது? எவ்வாறு?
டாக்டர்.எம்.முருகானந்தன்

கண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்.
“குளிச்சுப் போட்டு வந்தவனின்ரை காதுக் குடுமியை எடுப்பம் என்று இயர் பட்சை வைத்தபோது ஆட்டிவிட்டான். குத்திப் போட்டுது போலக் கிடக்கு” என்றாள் அம்மா.

பையனின் காதைப் பரிசோதித்தேன்.
வன்முறைப் பாதிப்பிற்கு ஆளான அளுத்ஹம நகரின் அவலக் கோலம்போல குருதி படர்ந்த குடுமி கிடந்தது. இங்கு வன்முறையை உபயோகித்தது இன வன்முறையாளர்கள் அல்ல. சொந்தத் தாய்தான். காதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தது வன்முறைபோல் ஆகிவிட்டது.

காதுக் குடுமியை மட்டுமின்றி, குளிக்கும்போதும் தலை முழுகும் போதும் காதிற்குள் போன நீரையும் எடுக்க வேண்டும் என்றெண்ணி, காதைக் கிண்ட முனையும் “18ம் நூற்றாண்டு தாய் தந்தையார்கள்” இன்றும் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்.

காதிற்குள் போன நீர் தானாகவே வெளியே வந்துவிடும். அல்லது சற்று நேரம் செல்ல தானகவே உலர்ந்துவிடும் என்பதை இந்த விஞ்ஞான யுகத்திலும் இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

காதுக்குடுமி
எமது காதிலுள்ள சுரப்பிகளால் காதுக்குடுமி சுரக்கிறது. தூசி, மற்றும் சிறு அந்நியப் பொருட்கள் காதினுள் செல்லாது தடுப்பதற்கானது இது என நம்பப்படுகிறது. தொற்று நோய்கள் காதுச் சருமத்தில் ஏற்படாமல் காக்கவும் செய்கிறது. இது பொதுவாக காய்ந்து உதிர்ந்து தானாகவே வெளியேறிவிடும்.

எல்லோருக்கும்தான் காதில் இவ்வாறு சுரக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அது காய்ந்து கட்டியாகி இறுகிவிடுகிறது.

இதற்குக் காரணங்கள் சில.
சிலரது காதின் சருமம் சொர சொரப்பாக இருந்து அதிகம் உதிர்ந்து குடுமியிடன் சேர்ந்து இறுகக் கூடும். அல்லது சிலரது காதின் அமைப்பு வளைவானதாக இருந்தால் இது வெளியேறுவது தடைப்படக் கூடும்.

சிலர் பட்ஸ் போட்டு எடுக்க முயலும்போது குடுமி வெளியே வருவதற்குப் பதிலாக மேலும் உட்புறமாகத் தள்ளுப்படுவதும் உண்டு. காலப்போக்கில் இவை சேர்ந்து இறுகிவிடலாம்.

சுமார் 100 போரில் 6 பேருக்கு காதில் குடுமி இறுகி அடைத்துவிடுவதாகத் தரவுகள் சொல்கின்றன. குச்சி, சட்டைப் பின், காது கிண்டி, பஞ்சுத் துண்டு எனப் பலவற்றைத் தேவையின்றி உபயோகித்து ஆபத்தை வாங்குபவர்கள் பலர். காதுக் குடுமிப் பிரச்சனை, காதுவலி, காதில் கிருமித் தொற்று, சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளோடு வருபவர்களில் பலர் இவற்றைப் பயன்படுத்தி காதைக் கிண்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.
மருத்துவரைக் காண வேண்டுமா?
காதிற்குள் குடுமி இருந்தாலும் பலருக்கும் எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தபோதும் அது அதிகமாக இருந்தால், அல்லது காய்ந்து இறுகி செவிக்குழாயை அடைத்திருந்தால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படக் கூடும. உதாரணமாக காது அடைத்துக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்படக் கூடும். சிலருக்கு காது கேட்பது மந்தமாகவும் கூடும். ஒரு சிலருக்கு தலைச் சுற்று ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காதினுள் கிணு கிணுவென ஏதாவது சத்தம் ஏற்படலாம். காதில் அரிப்பு ஏற்படவும் வாயப்புண்டு;. இருந்தபோதும் சாதாரண காது அடைப்பு இருந்தால் மருத்துவரிடம் உடனடியயாக ஓட வேண்டியதில்லை. ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது மருத்துவரை நாடுங்கள். கடுமையான தலைச்சுற்று, உங்களைச் சூழ இருப்பவை கடுமையாகச் சுழல்வது போன்ற உணர்வு ஏற்பட்டால். வழமைபோல நடக்க முடியாது சமநிலை பாதிபுற்றால் காய்ச்சலும், கடுமையான வாந்தியும் சேர்ந்து வந்தால். திடீரென காது கேட்காமல் அடைத்துக் கொண்டால் அக்கறை எடுத்து மருத்துவரைக் காண வேண்டும். நீங்கள் சொல்வதைக் கேட்டும், காதை பளிச்சிடும் வெளிச்சததிலும், அதற்குரிய கருவிகள் (otoscope) கொண்டும் பரிசோதித்து உங்கள் காதில் உள்ள பிரச்சனை காதுக்குடுமிதானா அல்லது கிருமித் தொற்று, அந்நியப் பொருட்களா அல்லது வேறு நோய்களா என்று கண்டறிவார். காதுக் குடுமியை அகற்றல் ஒருவரது காதுக் குடுமியானது மிக அதிகமாகமோ மிக இறுக்கமான பாறை போலவோ அல்லாது மெதுமையானதாக இருந்தால் அதைத் தானே அகற்ற முடியும். இருந்தபோதும் செவிப் பறையில் துவாரம் உள்ளவர்கள், காதால் நீர் வடிபவர்கள், காதில் கிருமித் தொற்று உள்ளவர்கள் அவ்வாறு தாங்களே அகற்ற முயல்வது ஆகாது.

எவ்வாறு அகற்றுவது?

இயர் பட்ஸ், குச்சி சட்டைப் பின், காது கிண்டி போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். உள்ளங்கையில் சற்று நீரை எடுத்து அதைக் காதிற்குள் விடவேண்டும். பின்னர் தலையைச் சரிக்க உள்ளே விட்ட நீரானது குடுமியைக் கரைத்துக் கொண்டு வெளியே வந்தவிடும். இவ்வாறு சில தினங்களுக்கு குளிக்கும்போது செய்து வர காதுக் குடுமி அகன்றுவிடும். குடுமி சற்று இறுக்கமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லண்ணெயில் சில துளிகளை ஒரு சில தினங்களுக்கு குறிப்பட்ட காதில் விட்டுவர அவை இளகி வெளியேறும். பேபி ஓயில், கிளிசரீன் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவது உண்டு.

காதுக் குடுமியை இளக வைக்கும் மருந்துகள்

பல விதமான மருந்துகள் கிடைக்கின்றன. பெரும்பாலன அரச மருத்துவ மனைகளிலும் பல தனியார் மருத்துவர்களும்Sodium bicarbonate ear drops துளி மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது விலை மலிவானது. இலகுவில் தயாரிக்கக் கூடியது. பொதுவாகப் பாதுகாப்பானது. காது சற்று வரண்டது போன்ற உணர்வு சிலரில் ஏற்படலாம். அது தானாகவே மாறிவிடும். உபயோகிக்க ஆரம்பித்த காது குடுமி கரையும் மருந்து குப்பிகளை 4 வாரங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம். அகற்றிவிடவும். Waxol, Molcer, Cerumol போன்ற விலை உயர்;ந்த குடுமி இளக்கி மருந்துகளும் (இலங்கையில் கிடைக்கினறன.) எவ்வாறு உபயோகிப்பது தினமும் எத்தனை தடவைகள் விட வேண்டும், தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு விட வேண்டும் என்பவை பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். துளி மருந்துகளுடன் வரும் ஆலோசனைக் குறிப்புகளையும் கவனமாகப் படிக்கவும். மருந்து விட ஆரம்பிக்க முன்னர் உங்கள் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்த மறக்காதீர்கள். உங்களால் உங்களுக்கே துளிகளை விடுவது சிரமமாக இருந்தால் மற்றொருவரின் உதவியைப் பெறுங்கள். மருந்து விட வேண்டிய காதானது மேற்புறம் பார்க்குமாறு கட்டிலில் சரிந்து படுங்கள். காதுமடலை சற்று முற்புறமாக இழுத்தால் காதுக் குழாய் நோரகி துளி மருந்து விடுவதற்கு வசதியாக இருக்கும். 3-4 துளிகளை விடவும். காது மருந்தால் நிறைந்துவிடும். துளி மருந்துப் போத்தலின் முனை காதில் படாதவாறு மருந்தை விடுவது அவசியம். இல்லையேல் காது மடலில் உள்ள கிருமிகளால் மருந்து மாசடைந்து தொடர்ந்து உபயோகிக்க முடியாது போய்விடும். தலையை திருப்பாது 5 முதல் 10 நிமிடங்களுக்கு அந்த நிலையிலேயே படுத்திருந்தால் மருந்து காதிலிருந்து வெளியே சிந்தாது உள்ளேயே தேங்கி நின்று குடுமியை கரைத்துவிடும். நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மேலதிக மருந்து தானாகவே காதிலிருந்து வெளியேறிவிடும். மற்றைய காதிலும் குடுமி இருந்தால் இதைப் போல அதிலும் மருந்தை விடவும். பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு இவ்வாறு மருந்தை காதினுள் விட குடுமி கரைந்து வெளியேறிவிடும். ஆயினும் மருந்தை காதினுள் அவ்வாறு விட்டும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில் மருத்துவரைச் சந்திக்கவும். மிகுந்து இருப்பதை வெளியே எடுப்பதாக எண்ணி இயர் பட்சை காதினுள் வைத்து சுத்தப்படுத்த முயலாதீர்கள். அது வெனிளேநாது மிகுந்து இருப்பதை மேலும் உள்ளே தள்ளி நிலைமையை மோசமாக்கிவிடும். குடுமிக்கென மருந்து விட்ட காதினுள் அழுக்குகள் படர்ந்திருந்தால் சற்று தண்ணீரை காதினுள் விட்டு பின்னர் தலையை மறுபுறம் சரிக்க அவை அகன்றுவிடும். வெளிப்புறக் காதை சுத்தமான துணியினால் துடைத்து சுத்தப்படுத்தலாம்.

1,304 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *