இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரி
கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை
…………………..
இலங்கை , இலங்காபுரி, ஈழம், நாகதீபம், லங்காதுவீபம், செரண்டீப், தம்பப்பண்ணி, தப்ரபேன், மணிபல்லவம் எனப் பெயர் பல சொல்லி நம் தாயைப் போற்றிட “தேன் வந்து பாயுது காதினிலே”.
எங்கு சென்றாலும் நம் நாட்டின் இயற்கை வளங்களை எண்ணாது, வியாக்காது இருக்க முடியாது என்னும் அளவு இயற்கை தெய்வத்தின் ஆசீர்வாதங்களை பெற்ற அழகிய தீவாக இலங்கை மிளிர்கிறது. நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து சென்றாலும் நம் உயிர் நாட்டின் உணர்வுகள் ஓட்டிக்கொண்டே தான் இருக்கும்.
“நமதலை நினதடி மேல் வைத்தோம் நமதுயிரே தாயே !”
நீர்வளமும், நிலவளமும், கலை வளமும், கல்வி வளமும், துறைமுகமும், வணிகமும் சரித்திரமும் , புராணமும் கொண்ட நம் இலங்கைத் திருநாட்டின் கோடி வளங்களை எண்ணி எண்ணி உளச் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வேளை , இதை அப்படியே இயலாக்கி, இசை கோர்த்து, நாட்டியம் ஆடினால் என்ன என்று ஆவல் பிறந்தது. காண்பதனைத்தையும் கலையாகிப் பார்க்கும் என் உள்ளத்தைக் கண்டு நகைத்து விட்டு , வழமை போல் என் கற்பனைகளுக்கு அன்புச்சிறகு தந்து உயர பறக்க விடும் இசைமேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவிற்கு அழைப்பு விடுத்தேன்.
இச்செய்தி கேட்ட மறு கணமே
” இயற்கை எழில் கொஞ்சும் லங்காபுரி ” என்று ஆபோகி ராகத்தில் பாடினார்.
“தேன் வந்து பாயுது காதினிலே.
ஆஹா அதே தான் ஐயா, தொடர்வோம் இதனை வர்ணம் ஆக்குவோம் என்றேன்.
”ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே- புய
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர் தம்சேனைக்
கடலினிலே உயர்நாடு”
என்று பாரத மாதாவிற்கும், தன் தாய் நாட்டிற்கும் கவி கொட்டிய பாரதி உதிரமல்லவா ? நம் இலங்கை திருநாட்டின் புகழை பாரதியின் கொள்ளுப்பெயரன் பாடித் தருவது இன்பவரமல்லவா என எண்ணினேன். பணி தொடர்ந்தோம்.
வர்ணம் என்பது நடனக் கச்சேரியின் உயிர் போன்றது . அவ்வுருப்படியில் நம் உயிர் நாட்டின் பெருமைகளைச் சொல்வது மிகப் பொருத்தமாகவும் இருந்தது. இந்த உருப்படி அமைப்பில் பாடலோடு ஜதிகளும் அமையும். முதலாவது ஜதி மூன்று காலத்தில் அமைவது வழக்கம். நம் தாய் நாட்டுக்கு காலந்தோறும் வழங்கப்பட்ட பெயர்களை வரிசைப்படுத்தி புத்தாக்கமாக இந்த ஜதியினை அமைத்தோம்.
பல்லவியும் திரிகால ஜதியும் புதுவித வேகத்தை உள்ளத்தில் விதைத்தது கண்டு , அடுத்த வரி என்ன வேண்டும் பட்டு என்று கேட்டார் பாரதி ஐயா .
சாஸ்திரமும், மருத்துவமும், இசையும், பெரும் படையும் என ராஜ்ஜியம் நடத்திய ராவணன் நம் அடையாளம் அல்லவா. விசுவகர்மாவால் குபேரனுக்காக அமைக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம் அவன் தம்பி ராவணனால் கைப்பற்றப்பட்டது எனக் கூறி தசமாமுகனின் புகழ் பாட ஆரம்பித்தேன். ” தசக்ரீவன் ” என்ற நாட்டிய நாடகத்தை பல்லாண்டுகளுக்கு முன் உருவாக்கும் போது ஏற்பட்ட ராவணக் காதலை எண்ணி சில நொடிகள் தொலைவதற்குள் ,
” புயம் ஆர் கொற்றவன் சோதரன்
குபேரன் தன்னுடை ராஜ்ஜியம் தான் பறித்தாண்டான்
மயல் விழியால் குழலி தனை மணந்தான்
விற்பனன் பண்டிதன் சிவனருள் தொண்டன் ராவணன் “
என காம்போதியில் பாடியும் முடித்துவிட்டார் பாரதி ஐயா.
திடமாவுறைகிறான் திருக்கேதீச்சரத்தான் நாட்டிய நாடகத்தை தயாரித்து வழங்கும் போது நம் நாட்டின் புராணோத்தமத்தினை உணரும் பாக்கியம் கிடைத்தது. இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களையும், அருணகிரி மொழி வந்த கதிர்காம ஸ்தலத்தையும் உலகறியும். இதுவே இவ்வர்ணத்தின் அனுபல்லவியாக அமைந்தது.
அத்தோடு புத்த நெறியின் புனிதம் பரவிய நாடு என்பதையும் அனுபல்லவியில் சண்முகப்ரியா, வகுளாபரணம் ராகங்களில் அமைத்தார்.
நயமும் , நகைப்பும், நாகரிகமும் நலமும் நிறைவும் நிகழ்ந்த நாடாக இருந்த புண்ணிய பூமியில் ஏற்பட்ட பேதமும் பிளவும்,பகைமையும், துயரமும், அழிவும், யுத்தமும் இவ்வர்ணத்தின் நடுப்பகுதியான முத்தாயீஸ்வரத்தில் மிக அற்புதமாக இசையமைத்தார். வியந்திருந்தேன். கனத்தது இதயம்.
ஓவியம், காவியம், தமிழர்களின் கூத்துக்கலை , மலைகள், தேயிலைத் தோட்டம் , நீர்வீழ்ச்சி , ரத்தினக்கல், கடல், துறைமுகம், களிமண், செம்மண், ஆறுகள் எனக் குவிந்திடும் கோடி வளங்களை சரணப் பகுதியில் சிட்டையிட்டு வழங்கினார்.
சுத்தசாவேரி, மலையமாருதம், காபி என சரமாரியாக வந்து நனைத்த இசையில் தோய்ந்திருந்த வேளை , ஆஹா என்றொரு குரல் கேட்டது. நாட்டின் பெருமையைப் பாடும் போது உணர்வூறி உயிரிசை வழங்கி தானே ரசித்துக்கொண்டிருந்தார். மீண்டும் சொல்கிறேன், பாரதி உதிரமல்லவா ?
நாட்டின் வளங்களையும், வரலாற்றினையும், நடந்த செய்திகளையும் மட்டும் சொன்னால் போதுமா ? இந்த வளங்களை பேணிக்காத்திட , எதிர் கால சந்ததிக்கு விட்டுச் செல்ல , ஒரு நாடு வான் புகழ் பெற , இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டாமா? என்று அவரே கேட்டு விட்டு வர்ணத்தின் நிறைவினை எழுதினார்.
” ஆஹா என்ன வரங்கள்? என்ன பெருமைகள் ? மிளிர்கின்ற உயிர் நாடு
மங்கா புகழும் நீங்கா சிறப்பும் நிலைத்தே நிலவிடும் இனிய நாடு
ஒன்றாய் முடிவெடுப்போம் , நன்றாய் இனி நடப்போம்,
நின்றே இதை முடிப்போம், பேதம் இனியில்லை என்போமே ,
நாட்டு நலம் வீட்டு நலம் பேணுவோமே
எங்கள் நாடு என்றே போற்றி வாழ்வோமே !
எங்கள் நாடு லங்காபுரி என்போமே ! “
ஹமீர் ராகத்தில் இவ்வரிகளை பாடினார். நல்லதொரு நாட்டினின் பெருமையைப் பாட அற்புதமான இசையை இப்படைப்பு அருளியதென எண்ணி நிறைவு கொண்ட அவரது கண்களைக் கண்டேன். என் விழிநீர் வழிந்தது.
இந்த உருப்படியை 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அமைத்தோம். அந்தக் கால கட்டத்தில் நம் நாடு இருந்த நிலையினை நாம் மறந்தாலும் சரித்திரம் மறக்காது. நம் தாய் நாட்டின் சிறப்பினை உலகறியச் செய்வது நம் கடன் !
1,044 total views, 3 views today