” இலங்காபுரி “
கலாசூரி திவ்யா சுஜேன் இலங்கை.
ஞானத்திலே பர மோனத்திலே — உயர்
மானத்திலே அன்ன தானத்திலே,
கானத்திலே அமு தாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு
ஒவ்வொருவர் உள்ளத்துடிப்பிலும் நாட்டுப்பற்றினைத் தூண்டி விட்டவர் பாரதி. தேசநேசனாய் அவனாற்றிய கவியிலெல்லாம் தாய்மண்ணின் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். கண்கள் கவ்வக் கவ்வக் காதல் மேலெழும் கவி வரிகள். நம் திருநாட்டினை மதிக்கவும், புகழவும், வியக்கவும், விழிக்கவும் கற்றுத் தரும் கவி வரிகள். வெறும் மொழியல்ல , உயிர் தீண்டும் புனிதம் அவை.
பற்றுக் கொண்ட நாட்டின் மீது பக்தி கொண்டு பாரதி பாடிய பாடல்களை , பாரதி மீது பக்தி கொண்டு பாடி வியந்ததன் பயனாய் மலர்ந்தது ” இலங்காபுரி ” பாரத நாட்டிய மார்க்கம்.
நம் தாய்நாடான ஈழத் திருநாட்டினை கருப்பொருளாகக் கொண்டு பரத நாட்டிய மார்க்கத்தினை ஆக்கும் எண்ணம் விழைந்தது. இப்பிறப்பில் யான் பெற்ற பெரு வரமாய் எண்ணத் துணை நின்றார் என் ஐயன் பாரதியின் கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி ஐயா.
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நிறை வான்மணி லங்கா நறுஞ்சோலை கொள் லங்கா என நமது தேசிய கீதம் பரத மார்க்க உருப்படியின் முதல் அங்கமான புஷ்பாஞ்சலியில் அழகுற இணைந்து ஜொலித்தது.நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் அமைந்திருந்த இலங்கை தேசிய கீத புஷ்பாஞ்சலியை தொடர்ந்து அலாரிப்பு அமைந்திருந்தது.
இறைவன் அருளும் பொழுதுகள் அனைத்தும் அதிசயம் நிறைந்தன. அனுபவிப்பவர்க்கு மட்டுமே அப்புரிதல் உண்டு. அதனால் தான் ” இத்தரைமீதினில் அமர சுகம் காணலாம் ” என்று உறுதியாகச் சொல்லியிருப்பார் பாரதி.
அவ்வாறு ஒரு அதிசய கணத்தில் உருவானதே இந்த அலாரிப்பு. இலங்கையைப் பற்றிய மார்க்கம் என்பதால் இலங்கையோடு பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் என்னுள் இழையோடி இருந்தது. அதனால் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களையும், இருபத்தைந்து மாவட்டங்களையும் கருத்தில் கொண்டு 9,5 எண்கள் மீது நாட்டம் வந்தது. 9,5 இரண்டும் பஞ்ச ஜாதிகளில் அடங்கும். தாளம் சார்ந்த விடயங்களில் பஞ்ச ஜாதி என்பது மிக முக்கிமானது.
எனவே 9ூ5 ஸ்ரீ 14 என்ற எண்ணில் அலாரிப்பு அமையப்பெற்றது. இலங்கையின் தேசியக் கொடியில் வாள் ஏந்திய சிங்கம் ஜெயம் கொண்டு திகழ்வதற்கு இணங்க , 108 தாளங்களில் ஒன்றான சிம்மலீலா தாளத்தில் 9,5 சங்கீர்ணம் , கண்டம் என்ற சொற்கட்டு அளவில் அலாரிப்பு அருவியாய் கொட்டியது. படைப்பிற்கு நன்றி கூறிக் கொண்டு எண்ணமதில் தோன்றிய அலாரிப்பை பக்குவமாய் குறித்து வைத்துக்கொண்டேன்.இவ்வாறாக இலங்காபுரி மார்க்கத்தின் முதல் உருப்படி அமையப்பெற்றது.
அதனை அடுத்து இலங்காபுரி வர்ணம் அமையப்பெற்றது. இதில் இலங்கையின் இயற்க்கை வளங்கள், மலையகம், தேயிலைத்தோட்டம், நீர்வீழ்ச்சி , கனிமங்கள், துறைமுகங்கள், செம்மண், சிகிரியா, தமிழர் தம் கூத்துக்கலை , ஆட்சி செய்த மன்னர்களில் மாண்புறு ராவணேஸ்வரன், பஞ்ச ஈஸ்வரங்கள், கதிர்காமம் என இலங்கையின் பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டு புராண, நவீன விடயங்கள் எனப் பலவகையான சஞ்சாரிகள் அமையப்பெற்றது. இலங்கை முழுவதையும் சுற்றிப்பார்த்த அனுபவம் இந்த வர்ணத்தினைப் பார்த்தால் கிடைத்துவிடும்.
தொடர்ந்து மகாகவி யின் தேரும் திங்களும், ( இவ்வுருப்படியின் விளக்கம் முந்தைய வெற்றிமணி பத்திரிகையில் எழுதியுள்ளேன் ), ஈழத்து சைவத் தமிழர் நெஞ்சள்ளும் நல்லூர் முருகனின் திருவிழா காலத்தில் இலங்காபுரி மார்க்கம் அரங்கேற்றுவதை மனதிருத்தி யோகர் சுவாமி அருளிய நல்லூர் முருகன் நற்சிந்தனை எனப் பல்வேறு சுவாரசியங்கள் சேர்ந்து கொண்டன.
கலைகளினூடாக நம் தாய் திருநாட்டின் புகழை பாடி ஆடி மகிழ என்ன புண்ணியம் செய்தோமோ ? எட்டுத் திக்கும் சென்று கொணர்ந்த கலைத்தேனில் ஊறி உருவான நம் இலங்காபுரி மார்க்கம் எட்டு திக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை , இலங்கையின் புகழை பரப்பிட வேண்டுமெனப் பிரார்த்தித்து
நம தலை நினதடி மேல் வைத்தோமே நமதுயிரே தாயே
583 total views, 6 views today