ஒரு ராணியைப் போல…
கவிதா லட்சுமி நோர்வே
நான் ஒன்றும் அத்தனை நடைப்பிரியை இல்லை. நடனத்தைத் தவிர வேறு எதற்காகவும் உடம்பை அசைக்க விரும்பும் ஆள் இல்லை. அப்பப்போ நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க நோர்வேயில் உள்ள சில மலை உச்சிகளுக்குச் சென்றுள்ளேன். அந்தப் பயணங்கள்கூட நடனம் சார்ந்து இருப்பது வழமை. 😜
இந்த நெடிய பயணத்தைத் தொடங்குமுன் சில நாட்கள் மட்டும் ஓரிரு மணித்தியாலங்கள் வரை அப்பப்போ நடந்துள்ளேன். ஏறத்தாழ எட்டில் இருந்து பத்துக் கிலோ எடை உள்ள முதுகுப்பொதியுடன் ஜூன் இருபத்தி நான்காம் திகதி தொடங்கிய இந்தப் பயணம், 300 கிலோமீற்றர் தாண்டி நேற்று இனிது முடிந்தது. எக்காரணம் கொண்டும் இடையில் வாகனம் எடுப்பதோ, முதுகுப் பொதியை யாரிடமும் கொடுத்து அனுப்புவதோ இல்லை என்ற முடிவோடு தான் கிளம்பினேன்.
தினமும் கடல், காடு, மலை, ஓடை, வாகனப் பாதை, கிராமம், நகரம், தோட்டங்கள், வயல்வெளிகள் என்று பலவிதமான இயற்கை வனப்புகளுடனும், புதியபுதிய மனிதர்களுடனும் நடந்தது பெரும் அநுபவம்.
இந்த நீண்ட பயணம் போர்த்துக்கல்லிற் தொடங்கி ஸ்பெயினில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேவாலயத்தில் நிறைவு பெறுகிறது. இந்தத் தேவாலயம் பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.
நேற்றைய தினம் 28 கிலோ மீற்றர்கள் நடந்து பயணத்தை நிறைவு செய்தோம். இப்பயணத்தின் தொலைவு மொத்தமாக 300க்கும் அதிகமான கிலோமீற்றர்கள்.
இப்பாத யாத்திரையை நிறைவு செய்தது என்னளவில் பெரும் சாதனையே!
நடன அரங்கங்கள் மூலம் கிடைத்த அனுபவங்கள், படித்துப் பெற்ற சான்றிதழ்கள் மூலம் கிடைத்த இன்பம் என்பவை வேறு, இந்தப் பயணத்தின் பின் கிடைத்த சான்றிதழின் இன்பமும் மன நிறைவும் வேறு. இந்த உணர்வை அனுபவத்திற்தான் கண்டடைய முடியும்.
சில வருடங்களுக்கு முன், பெரும் ஓவியர் ஒருவர் என்னை ஒரு ராணியைப் போல ஓவியம் வரைந்து எனக்குப் பரிசளித்தார். அந்த ஓவியம் அளவிற் பெரியது என்பதாலும் அதில் உள்ள ராணி போன்ற தோரணையும் அந்த ஓவியத்தை வீட்டில் மாட்டி வைக்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அதனால் இன்றுவரை அந்த ஓவியம் சுருட்டப்பட்டு எனது அறையின் ஒரு மூலையில் இருக்கின்றது. இச் சாதனையின் பின் ஒரு ராணியைப் போன்ற அந்த ஓவியத்தைச் சுவரில் மாட்டி வைக்க மனம் துணிந்திருக்கிறது. வீட்டிற்கு போனவுடன் ஓவியத்தைச் சுவரில் மாட்டி வைப்பதாக உத்தேசம்.
பயணங்கள் இனிது, பாத யாத்திரைகள் அதனிலும் இனிது.அடுத்த இதழில்…..
863 total views, 9 views today