எமது உடலுக்கு வயதாகி விட்டதா? அல்லது எமக்கு வயதாகி விட்டதா?
- நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் – அவுஸ்ரேலியா
ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் எம்மில் சிலர் வயதானாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் உடல் மட்டும் வயதானவர் என்று கூற முடியும்.
ஒரு வயதான இளைஞரை பாடசாலை வாசலில் சந்தித்தேன். பேரனை வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்தார். 10 வயதான பேரன் பாடசாலை விட்டு வந்ததும் தாத்தாவைப் பார்த்து, Hi Tom என அழைத்தான். ஆமாம்; பேரன் தாத்தாவை அப்படித் தான் அழைத்தான். தாத்தா என அழைப்பது அவருக்குப் பிடிக்காத விஷயமாம். அப்படி அழைப்பதால் தான் வயதாகி விட்டதாக உணர்கிராறாம். அதனால் வயதாகி விட்டதாக உணர்ந்தாலே ‘கிழம் தட்டி விடும்.’ அதனால் பேரன் தன்னைப் பேர் சொல்லி அழைப்பதே மேல் என்றார் இந்த மனதால் இளைஞரானவர்.
அவரது மனோபாவத்தை இரசித்தேன். இப்பொழுது எமது கீழைத்தேயக் கலாசாரத்தை எண்ணிப் பார்த்தேன். பிரம்மச்சாரியம், அதையடுத்து இல்லறம் பின் வானப்பிரஸ்தவம் இறுதியாக சன்னியாசம். ஆமாம் இல்லறத்தில் குழந்தைகளைப் பெற்று முறையாக வளர்த்து ஆளாக்கி விட்டால் சன்னியாசத்தை நோக்கி, கடவுளைச் சிந்தித்து, தியானம் பூஜை இவற்றில் ஈடுபட்டு, மோட்ச வழிக்கு புண்ணியம் தேடுவதே நம் இலக்காகி விடும். இந்தச் சிந்தனையில் நம்மவர் முழுமையாக ஈடுபடா விட்டாலும் அந்த “வயதானாலும் மனதில் இளமையாக இருக்கும்” இளைஞர் போல் சிந்திப்பது கிடையாது. ஏதோ வாழ்ந்து முடித்து விட்டோம். இனிமேல் நமக்கு என்ன? நல்ல படியாகப் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற வகையில் பேசுவதை நாம் அடிக்கடி கேட்டுள்ளோம்.
எனக்குத் தெரிந்த ஒரு 65 வயது மதிக்கக் கூடிய அம்மையார், “ கார்த்திகா, இந்த உடம்பு இனிமேல் warranty முடிந்து போன car மாதிரித் தான். அப்பப்போ இதற்கு Repair செய்து தான் ஓட வேண்டும். இதற்கு என்ன spare parts வாங்கிப் போட முடியுமா?” என்றார்.
உடலுக்கு வயதாகி விட்டால் இயற்கையாக உடல் இளமையில் இருந்தது போல வளைந்து கொடுக்காது. தசை நார்கள் தளர்ந்து விடும். வியாதி ஏதாவது வந்தால் குணப்படுத்த நாளாகும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் உடலைச் சீராக வைத்திருக்க முடியும். நாம் வயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால், வயோதிபத்தால் வரும் உடல் உபாதைகளைக் குறைக்க முடியும்.
சர்வதேச வயோதிபருக்கான சிகிச்சை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 90 வயதிற்கு மேற்பட்டவரை வைத்து ஆராய்ந்ததில் உடற்பயிற்சி மூலம் அவர்கள் முந்தி இருந்த நிலையில் இருந்து முன்னேறி உள்ளதாக அறிவித்திருக்கிறது.
உங்கள் உடல் இடம் தரும் அளவுக்கான பயிற்சி போதும் என இந் நிறுவனம் கூறுகிறது. இங்கு Linda McDonald கூறுவதைக் கேழுங்கள். இவர் பல வருடங்களாக இடுப்பு நோவால் பாதிக்கப்பட்டதால் இறுதியில் சத்திர சிகிச்சையை அவரது முள்ளந்தண்டில் செய்ய வேண்டி ஏற்பட்டதாம். இதன் பின் இவரால் நன்றாக நடமாட முடியாமல் போய் விட்டது. நடமாட முடியாமல் போனதையடுத்து நடமாடாமல் இருப்பவரைத் தாக்கும் வியாதிகளான இரத்த அழுத்தம், அளவுக்கு மீறிய உடற்பருமன், இதைத் தொடர்ந்து Diabetes யாவற்றாலும் பாதிக்கப்பட்டார்.
இவர் உடல் நோவைத் தீர்க்க ’Living Longer; Living Stronger’ அதாவது ‘சுகத்துடன் நீண்ட ஆயுள்’ என அரசால் நடத்தப்பட்ட மையத்திற்குச் சென்றார். “இந்த மையத்திற்கு நான் மிகுந்த மனக் கிலேசத்துடன் வந்தேன். பயிற்சியாளர் கூறியவற்றைச் செய்ய எனக்குச் சிறிது நாட்கள் பிடித்தது. நான் முன்பு எனக்கு இருந்த கூச்சம் பயத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். பயிற்சியாளரும் எனது இடுப்பிலும் முதுகிலும் அழுத்தாத படி பயிற்சியை ஆரம்பித்தார்.
சில மாதங்களில் நான் இதன் பலனைக் கண்டேன். எனது உயர் இரத்த அழுத்தம் வலுவாகக் குறைந்தது. நான் இப்பொழுது நிறைந்த உடல் உறுதியுடனும் சுறுசுறுப்பாகவும் உலாவி வருகிறேன். உடற்பயிற்சி மூலம் எனது உடல் நன்றாகத் தேறி உள்ளது. நிறைந்த சக்தியைப் பெற்றவளாக இருக்கிறேன். முன்பு நான் இப்படி இருக்கவில்லை. மொத்தத்தில் எனது வாழ்க்கை சுகத்துடனும் இன்பகரமாகவும் இருக்கிறது” என்கிறார்.
சீன மொழியில், ’உடல் உழைப்பிற்கு நாம் பயப்படக் கூடாது. உழைக்காத உடலைக் கண்டு தான் பயப்பட வேண்டும்; அதுவே நோய் நொடி குடி கொள்ளும் இடம்’ என்று ஒரு பழமொழி உண்டு. இதனால் தான் போலும் சீனர்கள் இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் பொது மைதானங்களில் அவர்கள் உடற்பயிற்சி செய்வதைக் காண முடிகிறது. கூட்டம் கூட்டமாக நின்று அவர்கள் பயிற்சி செய்வதே அழகு தான். உற்றுப் பார்த்தால் 60களைத் தாண்டியவர்களாகத் தான் அவர்கள் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் கலாசாரம்.
மேலும் சீனாவை அரசர் ஆண்டு வந்த காலத்திலே, குறிப்பிட்ட ஒரு வட்டாரம் ஒரு வைத்தியரின் பொறுப்பில் இருக்குமாம். அந்த வட்டாரத்தில் வசிப்பவர்களின் உடல் நிலையைப் பராமரிப்பது அந்த வைத்தியரின் பொறுப்பு. அங்கு உள்ளவர்கள் நோய் நொடியால் பாதிக்கப்படாமல் வைத்தியர் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வட்டாரத்தில் பலர் நோயால் பாதிக்கப்பட்டால் வைத்தியருக்குச் சம்மள உயர்வு கிடைக்காதாம்.
இதே போன்று பிற்பட்ட காலத்திலும் வைத்தியர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படது. இவர்களுக்கு Bear Foot Doctor எனப் பெயர். இங்கு இந்த Doctorகள் குறிப்பிட்ட இடை வெளியில் வீடு வீடாக வந்து யாவரும் சுக பலத்துடன் இருக்கிறார்களா என பரிசோதித்துச் செல்வார்கள். சிறு சிறு உபாதைகளும் உடனடியாகக் கவனிக்கப்படும். இதனால் மக்கள் நோய்களினால் மிகவும் பாதிக்கப்பட பின் வைத்தியசாலையை நோக்கி ஓட வேண்டி வராது.
549 total views, 3 views today