நெடுஞ்சுடர்

வாசிக்கும் போது அடிக்கடி இந்த அம்மாவா என்று
ஆசையோடு முகத்தை அட்டையில் பார்க்க வைக்கும்

-மாதவி-யேர்மனி
ஒரு தாய் என்பவள், கல்லிலோ, மரத்திலோ, செதுக்கிய சிலை அல்ல. தாயானவள் தங்கத்தில் உருக்கி வார்த்த சிலை. தங்கம் தன் வடிவத்தை முழுமையாக இழந்து சிலையாவது போல், ஒரு பெண் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி தன் வடிவத்தை இழந்து உலப்பிலா ஆனந்தமாய் ஒரு தாய் ஆகின்றாள். அதனால்தான் எந்தப் பெண்ணும் தாயானதும் அல்லது தாய்க்கு நிகரானதும், ஒரு தனியழகு பெறுகிறாள். நெடுஞ்சுடர் நூலை வாசிக்கும் போது அந்த அழகை இந்தத் தாய் மீதும் கண்டேன். துன்பத்தை எதிர்கொள்ளும் விதம், அதற்கான மனவுறுதி, துன்பத்திலும் அழகைக்க காணவைத்தது.

இங்கு அமரர் சிவா தியாகராஜா அவர்களது வரலாற்றைப் படிக்கும் போது, ஒரு தாயாக, எனது தாயாக, எமது தாயாக பல இடங்களில் முகம் காட்டுவதைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் ஒரு தாய், தங்களது தாய் என்பதற்கும் அப்பால், வாசிப்பவர் எல்லோருக்கும் தாயாக உணரும் வண்ணம், எழுத்துகள் அந்நியப்படாது எழுதப்பட்டுள்ளன.வாசிக்கும் வாசகர்கள் யாவரும் தமது தாய் தம் கைக்குள் புன்னகையுடன் பூத்திருப்பதாக உணர்வர்.

நூலை வாசிக்கும் போது, இடையிடையே வாசிப்பதை நிறுத்தி, முன் அட்டையில் இருக்கும், தாயின் புன்னகையைப் பார்ப்பதும், மீண்டும், நெஞ்சைத் தொடும் தாயின் செயலை வாசிக்கும் வேளை அல்லது ஒரு துன்பத்தை தாங்கியவண்ணம் வாழ்வைத் தாங்கி செல்லும் இடங்களை, வாசித்துக் கடக்கும் வேளை மீண்டும் முன்னட்டையைத் திருப்பி தாயின் முகம் பார்க்க வைக்கும் வண்ணம், முன்னட்டையும், எழுத்தோட்டமும் அமைந்திருப்பதைக் காணலாம். இதற்காக முன்னட்டையை வடிவமைத்த பேரன் துமிலன் செல்வகுமாரனையும், உள்ளடக்கத்தை உள்ளம் தொடத் தொகுத்த மகள்மார் சந்திரவதனா செல்வகுமாரன், சந்திரா இரவீந்திரன் அவர்களையும் பாராட்டவே வேண்டும்.

இந்த நூலில் ஒரு சில இடங்களை மட்டும் தருகிறேன். வாசிக்கும் போது சிவா தியாகராஜா அவர்கள் யாருடையதோ அம்மா என்ற எண்ணம் மாறி, ஒவ்வொருவரும் உங்கள் அம்மாவாகவே உணர்வீர்கள்.

‘எங்கள் வீட்டுக் குசினிக்குள் சமையல் மேடையின் அருகே ஒரு பச்சைப் பெட்டகம் இருக்கிறது. சமைத்த உணவுகளை, அதற்குள்தான் அம்மா, பூனை, நாய், கோழி… எதுவும் தீண்டிவிடாது பத்திரப்படுத்தி வைப்பா. அந்தப் பெட்டகம் எப்போதும் எனது சிம்மாசனமாகவே இருந்தது. பாடசாலைக் காலங்களில் அதன் மேல் இருந்துதான் அம்மா சமைக்கும் பொரியல்களையும் கரியல்களையும் ஆவி பறக்கப் பறக்க எடுத்துச் சுவைத்தபடி அம்மாவோடு கதையளந்து கொண்டிருப்பேன். கர்ப்பமாகிய பின் கூட அம்மா சமைக்கும் போது அந்தப் பெட்டகத்தின் மேல் தான் இருப்பேன். அம்மா சுடச்சுடச் சோறு சமைத்து, கீரையைக் கடைந்து, எல்லோரும் வர முன்னரே ‘சாப்பிடு, கீரை பிள்ளைக்கு நல்லது’ என்று சொல்லித் தருவா. அம்மா எனக்குச் செய்தவை எண்ணிலடங்காதவை. சொல்லித் தீராதவை. அதையெல்லாம் திருப்பி அம்மாவுக்குச் செய்வதற்கு அம்மா இன்னும் எத்தனையோ காலங்கள் என்னோடு வாழ்ந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள்.

காலையில் நாங்கள் எழும்பும் போது அம்மா ஆட்டுப்பால் தேநீரை நுரைபொங்க ஆற்றிக் கொண்டிருப்பா. அதற்கு முன்னரே தனது வேலைகளை முடித்து காலைக் கருக்கலுக்குள்ளேயே ஆட்டில் பால் கறந்து, காய்ச்சி, தேநீர் தயாரித்திருப்பா. நாங்கள் எட்டுப் பிள்ளைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள், தேவைகள், விருப்பங்கள். அந்தத் தேநீரில் கூட எனக்கு பாலின் ஆடை வந்தால் பிடிக்காது. அண்ணனுக்கு ஆடைதான் விருப்பம். தம்பி பார்த்திபனுக்கு பொட்டுக் கிளாசுக்குள் தான் தேநீர் வேண்டும். வேறெதிலும் குடிக்க மாட்டான். அப்படியான எங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட அம்மா தயங்கியதேயில்லை. எங்கள் எல்லோரது விருப்பங்களுக்குமேற்ப தேநீரை ஊற்றித் தருவா. காலைச் சாப்பாடு முடிய பாடசாலைக்குப் போய் விடுவோம். மதியம் வீட்டுக்கு வரும் போது சுடச்சுடச் சோறு, கறிகள், பொரியல்… என்று சாப்பாடு அமர்க்களமாக இருக்கும். அம்மாவின் சமையலுக்கு அப்படியொரு வாசனையும் சுவையும் இருக்கும். அவைகளை நினைத்தால் இப்போதும் வாயூறும்.

நான் அம்மாவிடம் போகும் பெரும்பாலான பொழுதுகளில் அம்மாவின் நெஞ்சில் ஏதாவதொரு புத்தகம் விரித்த படி கவுண்டோ அல்லது ஐபட் திறந்த படியோ இருக்க அம்மா ஆழ்ந்து உறங்கிப் போயிருப்பா. அம்மாவின் தலைமாட்டில் வெற்றிமணி, மண் சஞ்சிகையில் தொடங்கி புதிது புதிதாக வெளிவந்த ஈழத்து நூல்கள் பலவும் இருக்கும். கட்டிலினருகில், சிறிய அலுமாரியின் மேற்தட்டில், இடைத்தட்டில், மேசையில், சைட்போர்ட்டில்… என்று எல்லா இடங்களிலும் புத்தகங்கள் இருக்கும்.
சந்திரவதனா (மகள்)

‘இராணுவம் எம்மைச் சூழ்ந்திருந்த அந்தக் காலங்கள் எத்தனை பயங்கரமானவை! அந்த இக்கட்டான காலத்திலும் தனியாளாக நின்று எங்கள் குடும்பத்தை மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்காக அயராது உழைத்துக் கொண்டிருந்த ஏராளம் இளைஞர்கள் யுவதிகளையும் பாதுகாப்பதற்காக அம்மா செய்தபணிகள் அளப்பரியவை. அப்போது அம்மாவுக்கிருந்த மனத்தைரியமும் செயற்திறனும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை.

1985,1986 தம்பி பரதன் (மாவீரன் மொறிஸ்) ஒரு தடவை தன் தோழர்கள் இருவரோடு வீட்டுக்கு வந்திருந்த போது பருத்தித்துறை ஹாபர் முகாமிலிருந்து ‘ஷெல்’ வீச்சு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் பங்கருக்குள் குதித்து விட்டோம். அம்மாவும் பரதனும் தோழர்களும் எங்கள் வீட்டுப்பெரியவிறாந்தாவின் விளிம்பில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஷெல்’ அடி ஓரளவு குறைந்த பின்னர் நாங்கள் வெளியே வந்து ‘உங்களொருவருக்கும் பயமேயில்லையா?’ கேட்டோம். அதற்கு பரதன் ‘அம்மாவுக்குப் பக்கத்தில் இருக்கிறவரை எங்களுக்கு எந்தப்பயமும் இல்லை’ என்றான் புன்னகையோடு.

‘ஏன்டா? ஷெல் இங்கை வந்து விழுந்தால் என்னாகும் சொல்லு பாப்பம்?’ அதற்கும் அவன் சிரித்தவாறே ‘அதெல்லாம் அம்மாவை விட்டு வெகுதூரத்தில் இருக்கும் போதுதான். அம்மாவுக்குப் பக்கத்திலை இருந்தால் ஒண்டும் கிட்ட வராது. அம்மா செய்யிற புண்ணியங்கள் எங்களைக் காத்திடும்’ என்றான். அவன் சொன்ன அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையானவை’ அதைப் பல சந்தர்ப்பங்களில் யோசித்திருக்கிறேன்.’

-சந்திரா இரவிந்திரன் (மகள்)

‘எனக்கு நினைவு தெரிந்து நான் அப்பம்மாவைப் பார்த்ததும் பழகியதுமான முதல் ஞாபகம் 1989இல் பரதன் சித்தப்பா மாவீரனாக மரணித்த சில நாட்களுக்குப் பிறகே… அப்பொழுது எனக்கு ஐந்து வயது.

இந்திய இராணுவத்தினது கண்களுக்குள் விரல்களை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த ஹீரோ மொறிஸ் அவர்களுடைய வீரச்சாவு அது! என்னுடைய பரதன்சித்தப்பாவின் வீரமரணம் அது!

நாங்கள் அச்சமயம் வற்றாப்பளையில் இருந்தோம். மரணச்சடங்கிற்கு உடனே போக முடியாதளவு கெடுபிடிகள். ஊரடங்குச் சட்டம். ஓரிரு நாட்கள் கழித்துத்தான் அப்பாவும் நானும் பருத்தித்துறைக்கு பஸ்ஸில் போனோம். பருத்தித்துறை பஸ்ஸ்ராண்டக்கு அப்பாவின் பல நண்பர்கள் வந்தார்கள். ‘உங்கடை வீட்டுப்பக்கம் போகேலாது. திருநாவுக்கரசு மாஸ்ரர் வீட்டிலை தான் எல்லாரும் நிக்கினம். சத்தம் போடக் கூடாது. சத்தமாய் அழக்கூடாது.

அப்பா கேட்டார்: ‘டீழனல குடுத்தவங்களோ? ஆர் போய் எடுத்தது..?’ ‘அம்மா தான் போய் எடுத்தவ..’ அப்பா உடனேயே கத்தியழத் தொடங்கி விட்டார் ‘ஊஸ்… மெதுவா! அழாதையுங்கோ..!’ அப்பாவின் நண்பர்கள் அப்பாவின் அழுகையைக் கட்டுப்படுத்தி, எங்களை ஊருக்குள் கூட்டிக் கொண்டு போனார்கள்.

ஒரு சிறிய இரும்புக்கேற்றைத் திறந்து உள்ளே போனோம். யாரோ உள்ளிருந்து ரோர்ச் அடித்து, ‘யாரது..?’ என்றார்கள். ‘நான் ராஜன். உள்ளை வரலாமோ..?’ என்றார் அப்பா. அடுத்தகணமே அப்பம்மா அழுதபடி ஓடி வந்தா. அவதான் என் அப்பம்மாவாக இருக்குமென்று எனக்கு உடனேயே விளங்கி விட்டது. அப்பம்மா கொஞ்ச நேரம் அப்பாவைத் தன்னுடைய நெஞ்சில் சாய்த்து வைத்து நிறையச் சொல்லிக் கொண்டிருந்தா. அவவின் இருகண்களும் கண்ணீரால் நிரம்பியிருந்தன. ‘நீ கவனம் ராஜன்! உன்ரை பிள்ளையள் கவனம்! நீயேன் இவ்வளவு தூரம் வந்தனி? அதுவும் உவனையும் கூட்டிக்கொண்டு?’

நான் அவவைப் பார்த்துச் சிரித்தேன். அந்தக்கவலை நிறைந்த தருணத்திலும் அவ என்னைப் பார்த்துச் சிரித்தா. ‘என்னப்பு?’ என்று கேட்டா. வார்த்தைக்கு வார்த்தை ‘அப்பு…அப்பு…’ என்று பரிவோடு அழைத்தா. என்னை அள்ளி அணைத்துத் தூக்கினா. முத்தம் கொடுத்தா. ‘அட… உன்ரை அப்பன் அழுறான் எண்டு யோசிச்சதிலை உன்னை நான் யோசிக்கேல்லை…’ என்றா. அவவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.’
-ஜனகன்.பிரேமராஜன் (பேரன்)
வாசிக்கும் போது வெற்றிமணியில் தாயின் முகத்தைப் பார்த்து, பார்த்து, வாசிக்க வைக்கிறதா. அப்படி வாசித்தால் உங்கள் தாயும் உங்களோடு இருப்பதாகவே எண்ணிக் கொள்ளுங்கள்.

1,025 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *