இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.
மாணிக்கவாசகர் வைத்திலிங்கம்
இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.இக்கால செய்தியை சுருக்கமாக தர முனைகிறேன்.
காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. காப்பிப் பயிராகும் நிலங்களை என்ன செய்வது என்ற பிரச்னை தோன்றியது. இதற்கு விடை தேயிலைப் பயிர் என்று முடிவு செய்யப்பட்டது. 1867-இல் ஹேவாஹெட்டையில் உள்ள ஊல்கந்தை என்ற இடத்தில் ஜேம்ஸ் டெயிலர் என்பவர் 50 ஏக்கர் நிலத்தில் வெற்றிகரமாகத் தேயிலையை உற்பத்தி செய்தார். இதனைத் தொடர்ந்து படிப்படியாக இலங்கையின் மலைப்பகுதி “லிப்டன்’ கம்பெனியின் தேயிலைத் தோட்டமாக மாற்றமடைந்தது.
1870- ஆம் ஆண்டு வாக்கில் பணப்பயிர்த் தோட்டங்களில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது.
காப்பிப்பயிர் வீழ்ச்சி அடைந்தவுடன் தமிழர்களைக் கணிசமாக விரட்டிய இலங்கை அரசும் துரைமார்களும் மீண்டும் தமிழ்நாட்டுக் கூலிகளைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர். இந்தியா இலங்கைக்கு வடக்குப் பக்க மாக இருந்ததேசம்.அதனால் அங்கிருந்து வந்த மக்களை வடக்குத் தேசத்தவர் என்று அழைக்கலாயினர். நாளடைவில் வடக்குத தேயர் என்று மருவி வடக்கத்தையர் என்று மாறி விட்டது. இந்த நேரம் தோணி என்கின்ற படகில் மூலம் தெலுங்கரும் கன்னடரும் களவாக வேலைக்கு வந்தார்கள் .இவர்களை கள்ளத்தோணி என்றழைத்தார்கள். இது ஒரு பழிச்சொல்லாகிவிட்டது
1911- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி,அந்த ஆண்டில் மலையகத் தமிழர்களே (5,30,983) ஏனைய தமிழர்களைவிட (5,28,024) எண்ணிக்கையில் அதிகம் இருந்தனர். தமிழகத்து ஏழைக் கூலி விவசாயிகளை இலங்கைக்குக் கூட்டம் கூட்டமாகக் குடியேற வைத்துவிட்டகாரணத்தால் சிங்களவர் பயந்தனர் .வெறுப்புக் கொண்டனர் .தாங்கள் ஒதுக்கப்பட்டு விடுவோம் என்றே நினைத்தனர் .அந்த நேரம் உயர் பதவிகளில் தமிழர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். தேயிலை தோட்டங்களில் ஆள் சேகரிப்போர் தமிழ்நாட்டின் செல்வாக்குப் பெற்றவர்கள் .அதாவது துரைமார்களின் அடிமைகளான இந்தக் கூலி விவசாயிகளைத் தமிழ்நாட்டிலிருந்து திரட்டியவர்கள் அந்தந்தக் கிராமத்தில் செல்வாக்குள்ளவர்களாக இருந்தவர்கள்தான். இவர்கள் கங்காணி என்று அழைக்கப்பட்டனர். இலங்கைக்கு மனிதக் கூட்டத்தை ஏற்றுமதி செய்யும் பொறுப்புடன், ஏற்றுமதி செய்யப்பட்ட மனிதப் பட்டாளத்தை மேய்த்து, கண்காணிப்பதால் இவர்களுக்கு கண்காணி-கங்காணி என்ற பெயர் ஏற்பட்டது..
இப்படித் திரட்டப்பட்ட தொழிலாளர் கோஷ்டி இந்த கங்காணியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. தலைமைக் கங்காணி அல்லது பெரிய கங்காணி சில சில்லறைக் கங்காணிகளை இப்பணியில் தனது ஏஜெண்டுகளாக வைத்திருப்பார். பெரிய கங்காணியின் வரையறையில்லாத அதிகாரமும், அவர்கள் இழைத்த அடக்குமுறைச் சுரண்டல் அட்டூழியங்களும், மனித நாகரிகத்திற்கே சவால் விடும் காட்டுமிராண்டித்தனமானவை ஆகும்.
தமிழ்நாட்டில் தனது கிராமத்தைவிட்டுப் புறப்படும் முன்னர் தான் பட்ட கடனைத் தீர்ப்பதற்காகவும், பிரயாணத்துக்கான செலவுக்காகவும் கங்காணியிடம் ஆரம்பத்தில் கடன் வாங்க நேர்ந்தது. இவ்வாறு தமிழகத்தை விட்டுப் புறப்படும்போதே இவர்கள் பெரிய கங்காணிக்குக் கடன்காரராயினர்! இந்த மீளாக் கடன் அவர்களைச் சுரண்டும் ஆயுதமாகப் பெரிய கங்காணியால் பயன்படுத்தப்பட்டது. இத்துடன், தோட்டத்தில் வேலைக்குச் சென்றபிறகு திருமணம், ஈமச்சடங்கு, பூப்பெய்தும் வைபவங்கள் எனப் பல காரணங்களுக்காக இத்தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் பெரிய கங்காணியிடம் கடன் வாங்கினர். இதைவிட, கங்காணிக்குச் சொந்தமான மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள் தோட்டத்தில் இருந்தன. அந்தக் கடையில்தான், அவர் கூறும் விலைக்குத்தான் பொருட்களை வாங்கவேண்டும். இந்தக் கடனும் பழைய கடனுடன் சேர்ந்து மிகப் பெரிய சுமையை இவர்கள் தோளில் ஏற்றியது.
இத்துடன் தோட்டத்துரையிடமிருந்து தனது தொழிலாளர் கோஷ்டிக்குரிய மொத்த சம்பளத்தையும், பெரிய கங்காணிதான் வாங்குவார். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியினரையே இவ்வாறு கூலி வேலைக்கு அழைத்துச் சென்றிருந்தால், அவர்களது கல்வி அறிவின்மையைப் பயன்படுத்தி, வெள்ளைக் கம்பளி வாங்கிய கணக்கு, கருப்புக் கம்பளி வாங்கிய கணக்கு என்று கள்ளக்கணக்கு எழுதி அவர்களது சம்பளப் பணம் முழுவதையும், தன்னிடம் வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியுமாக வரவு வைத்துக் கொள்ளுவார். இதனால் சம்பளப் பணத்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் கண்ணிலேயே காணாமல், வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட இழிந்த வாழ்க்கை, இவர்களுக்கு அளிக்கப்பட்ட முன்வினைப் பயன் என்று தங்களையே சமாதானம் செய்து கொண்டு இயந்திரமாக வாழ்க்கையில் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.தோட்டத்தில் வேலை செய்யும்போது வேலைப் பளுவும், வாழ்க்கைச் சுமையும் தெரியாமல் இருக்க இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி மதுபானமும், மனதை நெகிழ வைக்கும் பாட்டுக்களும்தான்.
இவர்கள் துயரங்களில் இருந்து தப்பிக்க விரும்பினாலும், இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும், சட்டமோ, கங்காணியோ, துரைமாரோ ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டார்கள்… மலையக மக்களின் இன்னல்களைக் கண்டு, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதாபிமான இயக்கங்களும், தனி நபர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். இதன் விளைவாக 1912-இல் மருத்துவ வசதிச் சட்டமும், 1920-இல் கல்விக்கான சட்டமும், 1921-இல் தொழிற் சட்டமும், 1927-இல் சம்பளச் சட்டமும் இலங்கை அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டன. மலையக மக்கள் இலங்கை மண்ணில் நிலைபெறத் துவங்கிய பிறகு, தங்களது அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் போராடவும், அதற்கான தொழிற்சங்கங்களை அமைக்கவும் தொடங்கினர்.
ஆரம்ப நாட்களில் மலையக மக்கள் மத்தியில் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தவர் நடேச அய்யர் ஆவார். இவர் ஒரு பத்திரிகையாளர். இவரும், ஏ.இ. குணசிங்காவும் தொழிலாளர் சங்கத்தின் முன்னோடிகளாவார்கள் தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதைத் தோட்ட துரைமார்கள் கொடிய முறையில் நசுக்கினர். இருப்பினும் லங்கா சமசமாஜக் கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தைப் பதிவு செய்தது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும், அதற்கு முந்தைய காலக் கட்டத்திலும் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், மலையக மக்களின் கணிசமான வாக்குகள் இடதுசாரியினரைப் பெருமளவில் தேர்தலில் வெற்றி பெறச் செய்தது. இதன் காரணமாக வெறுப்பும், ஆத்திரமும் அடைந்த டி.எஸ். சேனநாயக்கா மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்கும் இலங்கை பிரஜா உரிமைச் சட்டம், இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை நிறைவேற்ற முனைந்தார்.
எந்த நாட்டிலும் இல்லாத அளவு கடுமையான முறையில் பிரஜா உரிமைச் சட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட்டது. இக் கொடிய சட்டத்தின்படி, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாக மலையகத் தமிழர் கருதப்பட்டனர்.
இலங்கையில் பிறந்த ஒருவர், தான் இலங்கைப் பிரஜை என்ற தகுதியைப் பெறுவதற்குத் தனது தந்தை, அல்லது தந்தைவழிப் பாட்டன் இலங்கையில் பிறந்ததற்கான ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தந்தைவழி முப்பாட்டன் இலங்கையில் பிறந்ததற்கான சான்றைக் காட்டவேண்டும். இதற்கான சிறப்பு அத்தாட்சியாக பிறப்புச் சான்றிதழ் கருதப்பட்டது. உண்மையில் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. காரணம், பிறப்பைப் பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப் பட்டது 1895-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அதற்கு முன் பிறந்தவர்களைப் பதிவு செய்திருக்க வாய்ப்பு இல்லை.
இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் கெனமன், “”இந்தச் சட்டத்தில் கோரப்படும் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கப் போனால், மதிப்பிற்குரிய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க கூட இலங்கைப் பிரஜையாக முடியாது. ஏனெனில் அவரது தந்தை இலங்கையில் பிறந்ததற்கான சான்றை அவரால் கூட சமர்ப்பிக்க முடியாது” எனக் குறிப்பிட்டார். இருப்பினும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து 1949-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம் பிரஜா உரிமை இல்லாதவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று மறுத்ததன் மூலம் மலைகத் தமிழர்கள் தங்களது வாக்குரிமையை இழந்தனர். இதன் மூலம் மலையக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இழிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் தம் பலத்தை இழந்தனர் .இந்த மசோதாவை ஜி ஜி பொன்னம்பலம் ஆதரித்தது வேதனையே
769 total views, 6 views today