கோடிகளின் போட்டியில் கோவணங்கள்
சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை மறக்கவும், மீட்டெடுக்கவும் மக்கள் திரைப்படங்களை வரவேற்கிறார்கள். தங்களால் செய்ய முடியாததைத் தங்கள் ஹீரோ செய்யும் போது, அதன் மூலமாக தானும் அந்த சாதனையைச் செய்து விட்டதைப் போல ரசிகர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
ஆரம்ப காலங்களில் கலையும் கலையும் மோதின. அப்போது காலத்தால் அழிக்க முடியாத பல காவியங்கள் தோன்றின. போட்டி போட்டுக்கொண்டு கலைஞர்கள் நல்ல புதினங்களை, இதிகாசங்களை, வரலாற்று அடையாளங்களைக் காட்சிப்படுத்தினார்கள். அது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. தாங்கள் கண்டிராய மாய உலகிற்குள் பயணிக்கவும், தாங்கள் அறிந்து கொள்ள விரும்பிய இதிகாசப் பதிவுகளுக்குள் உலவவும் சினிமாக்கள் உதவின.
கலைகள் மோதியபோது போட்டி ஆரோக்கியமாய் இருந்தது. பல கதாநாயகர்கள் திரையில் உயிர்பெற்று உலவினார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள், சமூகப் போராளிகள், சமயக் கதாநாயகர்கள் என பலரும் திரைகளில் ஆளுமை செய்தார்கள். காலம் செல்லச் செல்ல கலைகளும் கலைகளும் மோதிக் கொள்வதை சற்றே ஒதுக்கி வைத்து விட்டன.
அதன்பின் கலைஞர்களும், கலைஞர்களும் மோத ஆரம்பித்தனர். கதாநாயகர்களுக்கான போட்டி அங்கே உதயமானது. எந்தக் கதாநாயகனுக்கு பாடத் தெரிகிறது, ஆடத் தெரிகிறது, நடிக்கத் தெரிகிறது, சண்டையிடத் தெரிகிறது என்றெல்லாம் போட்டிகள் ஆரம்பமாயின. அதுவரை கலைகளை விமர்சித்து வந்த விமர்சகர்கள், பின்னர் கதாநாயகர்களை விமர்சிக்கத் தொடங்கினார்கள்.
யார் பெரியவன் எனும் போட்டி உருவானது. எந்தப் படம் என்பதை விட, யாருடைய படம் என்பதை நோக்கி போட்டி திசை திரும்பியது. காலங்கள் தோறும் பல கதாநாயகர்களும் கதாநாயகிகளும் தோன்றினார்கள். ரசிகர்கள் தங்கள் பிரியத்துக்குரிய கதாநாயகனை பல்லக்கில் வைத்தார்கள், எதிர் நாயகனை பள்ளத்தாக்கில் போட்டார்கள்.
ஒரு திரைப்படம் ஐந்து திரையரங்குகள், ஐம்பது திரையரங்குகள் என வெளியாகின. நூறு திரைகளில் ஒரு படம் வெளியானால் அது உலக அதிசயமாய்ச் சிலாகிக்கப்பட்டது. ஐம்பது நாட்கள், நூறு நாட்கள், வெள்ளி விழாக்கள் என திரைப்படங்கள் சாதித்தன. ரசிகர்கள் அந்த போஸ்டர்களையும், பத்திரிகைச் செய்திகளையும் வெட்டி வெட்டிப் பாதுகாத்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
இன்றைக்கு அந்தப் போட்டிகளெல்லாம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ! எனும் ஒற்றை இலக்கில் வந்து நிற்கிறது. ஒரு திரைப்படம் கலைத்தன்மையோடு இருக்கிறதா, கலையை மேன்மைப்படுத்துகிறதா, மனித நேயத்தை மையப்படுத்துகிறதா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகிவிட்டது. ஒரு படம் வசூலில் நூறு கோடியைத் தாண்டிவிட்டதா, ஐநூறு கோடியைத் தாண்டிவிட்டதா, ஆயிரம் கோடியைத் தொட்டு விட்டதா என்பதே கேள்வி !
விமர்சகர்களும் இன்றைக்கு சார்பு நிலையில் நின்று பேசுகின்றனர். ஒரு திரைப்படத்தை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்தில் எல்லாவற்றையும் நெகடிவ் கண்கொண்டு பார்ப்பவர்கள் சிலர், இல்லாததையும் ஊதிப் பெருதாக்கி வெற்றி பெற வைக்கவேண்டுமென பேசுபவர்கள் சிலர். இவர்களுக்கெல்லாம் இரகசிய வருவாய் பல இடங்களிலிருந்தும் வருவது திரைத்துறைக்குத் தெரிந்தே இருக்கிறது.
சமூக வலைத்தளங்களின் ஆளுமையினால் இன்றைக்கு ஒரு திரைப்படம் சரியில்லை என்றால் அது இரண்டாம் நாளைக் கூட கடக்க முடியாமல் நொண்டியடிக்கும். முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி, அதன் விமர்சனம் பத்திரிகையில் வருவதற்கே குறைந்த பட்சம் ஒரு வாரம் பிடிக்கும். அதுவரை திரைப்படத்தைக் கணிசமான மக்கள் பார்த்து விடுவார்கள். ஆனால் இன்று அப்படியல்ல. படம் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்தே, டுவிட்டர் விமர்சனங்கள், இடைவேளை விமர்சனங்கள், படம் பார்த்து வருவோரின் விமர்சனங்கள் என விமர்சனங்கள் குவிந்து விடும்.
அதனால் ஒரு திரைப்படத்தை வெற்றி பெற வைப்பது என்பது கடினமான விஷயம் எனும் நிலை இன்று உண்டு. அதனால் தான் ஒரு திரைப்படத்தை ஆயிரம் திரைகள், மூவாயிரம் திரைகள் என வெளியிடுகிறார்கள். இதனால் குறைந்த பட்சம் ஒரு சில நாட்களுக்கான முன்பதிவாவது கிடைக்கும். அதன் மூலம் முதல் வார இறுதியில் கணிசமான வருவாயை ஈட்டி விடலாம் என்பதே கணக்கு. அதே போல இப்போதெல்லாம் பெரும்பாலான பெரிய இந்தியத் திரைப்படங்கள் உலகெங்கும் ஒரே நாளில் வெளியாகி அங்கும் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் பணம் திரைத் துறையின் வசம் செல்கிறது.
இதற்கு இன்னொரு காரணம், திரைப்படத் தயாரிப்பு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு தொழிலாக மாறிப் போனது எனலாம். முன்பெல்லாம் திரைத்துறையோடு இயங்குபவர்கள் மட்டுமே திரைப்படங்களைத் தயாரித்தார்கள்.ஆனால் இப்போது பெரும் பணம் இருப்பவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். அவர்களுக்கு புராஃபிட் மார்ஜின் முக்கியமாகிறது.
அதனால் ஒரு படம் நூறு கோடி என்றால், அடுத்த படம் ஐநூறு கோடி என இலக்கு வைக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியை எளிதில் ஈட்டி விட முடியாது. அதற்காகத் தான் ரசிகர் படையை வெறியேற்றும் வேலையை திட்டமிட்டே செய்கிறார்கள். எந்த நடிகரின் பாடல் அதிக வியூஸ் போகிறது, அதிக லைக்ஸ் போகிறது என்பது தொடங்கி, எந்த படம் அதிக லாபம் ஈட்டுகிறது என்பது வரை போட்டிகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
கோவணத்தைக் கூட கடன் வாங்கி உடுத்தும் ரசிகனும், தன்னுடைய தலைவன் படம் 500 கோடி ஈட்ட வேண்டும் என்பதை மானப் பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறான். எப்படியாவது படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் தங்களுடைய வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களும், திரை ஆளுமைகளும் பயனடைகிறார்கள்.
போஸ்டர் ஒட்டி, கட்டவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களின் காலம் முடிவடைந்து விட்டது. இப்போதெல்லாம் டிஜிடல் யுத்தம் தான். டிஜிடல் வெளியில் அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, திரையரங்குகளுக்கு தங்கள் இரத்தப் பாசனத்தை அளிக்கிறார்கள். அதிகாலையிலேயே திரையரங்க கவுண்டர்களில் காத்துக் கிடந்து டிக்கெட் வாங்கும் நிலையை இன்று, டிக்கெட் ரெசர்வேஷன் சாதிக்கிறது. ஆன்லைனில் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் விற்றுத் தீர்ந்தது என்பதை சாதனையாகக் கொண்டாடுகிறான் ரசிகன்.
இப்படி தனக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லாத, தனது நடிகனுக்கும் அவரை வைத்து தொழில் செய்யும் நிறுவனங்களுக்குமாக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான் அப்பாவி ரசிகன். அப்படியே அப்பட்டமான அரசியல் நுட்பமே இதிலும் இருக்கிறது. ஒரு சிறு கூட்டத்தின் வளர்ச்சிக்காகவும், ஏக போக வாழ்க்கைக்காகவும் – ஒட்டு மொத்த நாட்டு மக்களும் மந்திரிச்சு விட்டதைப் போல அலையும் காட்சிகளை இங்கும் பொருத்திப் பார்க்கலாம்.
திரைப்படங்கள், கலையின் ஒரு உன்னத அம்சம். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் மக்களின் இதயத்தில் இறக்குமதி செய்ய திரைப்படங்களால் கூடும். விடுதலைப் போராட்ட வீரியத்தை மக்களிடம் மாபெரும் எழுச்சியாய்க் கொண்டு சேர்த்ததில் திரைப்படங்களின் பங்கு அலாதியானது. இன்று அது தவறான சித்தாந்தங்களைப் பரப்பவும், வெறுப்பை வளர்க்கவும், அரசியல் இலாபத்துக்காய் பதட்டங்களை உருவாக்கவும் பயன்படுவது மனதை உலுக்குகிறது.
திரைப்படம் எனும் அற்புத வடிவம் மீண்டெழவேண்டும். அதன் இலக்கு என்பது கலை, மனிதம், சமூக மேம்பாடு எனும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். அதற்கான கமர்ஷியல் அம்சங்களோடு அது சமூகத்தை அழகு செய்ய வேண்டும். வெறுப்பின் வேர்களுக்கு நீர் வார்க்காமல், அன்பின் வேர்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு மாற்றம் எழ வேண்டுமெனில் ரசிகர்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் எனும் சிந்தனையை மாற்றி விட்டு, கலை சமூக மாற்றத்தின் கருவி எனும் சிந்தனையோடு திரைப்படங்களை அணுக வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் நேரும் எனும் கனவை நோக்கியே எனது சிந்தனைகளும் இளைப்பாறுகின்றன.
ழூ
சேவியர்
செப்டம்பர் 15, 2023
576 total views, 6 views today