ஆக்கிரமிப்பாளர் Vs ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள்: இரண்டையும் ஒரே தட்டில் வைப்பதா?
— ரூபன் சிவராஜா நோர்வே.
பிபிசியிடம் பலஸ்தீனப் பிரதிநிதி கேள்விஆக்கிரமிப்பு சக்தியாக இருந்தாலும் ஜனநாயக நாடு என்ற போர்வையில் பல நாடுகள் அரசபயங்கரவாதங்களை முன்னெடுத்துவருகின்றன. உலகிலேயே ஆகப்பெரிய அரசபயங்கரவாதத்தை 75 ஆண்டுகளாகப் பலஸ்தீன மக்கள் மீது பிரயோகித்துவரும் நாடு இஸ்ரேல். ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதற்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முண்டுகொடுத்துவருகின்றன.
வல்லரசுகளின் அதிகார நலனுக்கு ஊதுகுழலாகவே உலகப் பேரூடகங்கள் செயற்படுகின்றன என்பதை விளக்கிக்கூற வேண்டியதில்லை. அதற்கான மிக அண்மைய உதாரணங்கள் ரஸ்ய – உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடு சார்ந்த ஊடக வெளிப்படுத்தல்களைச் சொல்லலாம்.
சில நாட்களுக்கு முன்னர், பிபிசி தொலைக்காட்சியில் (Palestinian National Authority) பலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் (பாஃதா அமைப்பைச் சேர்ந்த) பிரித்தானியாவிற்கான தூதுவர் Husam Zomtol உடன் பி.பி.சி நடாத்திய ஒரு நேர்காணலைச் சமூக ஊடகங்களிற் காணக்கிடைத்தது.
இஸ்ரேல் பொதுமக்கள் மீது ஹமாஸ் ஒக்.7ஆம் திகதி நடாத்திய தாக்குதலை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்ற கேள்வியை ஊடகவியலாளர் முன்வைக்கின்றார்.‘அது அவசியமற்ற கேள்வி’ என்கிறார் Husam Zomtol. தொடர்ந்து தனது நியாயமானதும் தர்க்கரீதியானதுமான கேள்விகளால் ஊடகவியலாளரைச் சவாலுக்குட் படுத்துகின்றார்.
அவர் மிக இயல்பாக – மிக எளிமையாக – அரசியல் நேர்மையுடனும் – இராஜதந்திரத்துடனும் பதிலளிக்கின்றார். பலஸ்தீன உரிமையை வலியுறுத்திய அதேவேளை, சர்வதேசத்தினதும் – ஊடகப்போக்கினதும் முகத்திரைகளும் ஒருசேரக் கிழிக்கப்படுவதாகவே தோன்றியது.
ஹமாஸின் தாக்குதல் பற்றிய கேள்வி ‘பொருத்தமான கேள்வியே அல்ல’என்ற அடிப்படையிற் தனது எதிர்வினையையும் வாதங்களையும் முன்வைக்கின்றார். ‘அந்த நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா இல்லையா என்பது முக்கியமான கேள்வியே’ என ஊடகவியலாளர் நிறுவப் பிரயத்தனப்படுகின்றார்.
‘ஹமாஸ் ஒரு இராணுவக் குழு. நீங்கள் இப்போது பலஸ்தீன மக்களின் பிரதிநிதியோடு பேசுகின்றீர்கள். எமது நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதும் தெளிவானதும்’ என்கிறார். அதற்கும் இடைமறித்து ‘ஹமாஸை ஆதரிப்பது உங்கள் நிலைப்பாடா’ என்ற தொனியில் கேள்வி முன்வைக்கப்படுகின்றது.
‘ஆதரிப்பது, ஆதரிக்காதது, கண்டிப்பது, கண்டிக்காதது அல்ல இங்குள்ள பிரச்சனை. நான் எனது மக்கள் எத்தகைய அவலங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்’ என்பதைப் பேச வந்துள்ளேன். ஹமாஸைக் கண்டிப்பதாக அவர் வாயால் சொல்லவைப்பதற்கான கடும்பிரத்தனங்களை ஊடகவியலாளர் மேற்கொள்கின்றார்.
‘அப்படி யாரையேனும் கண்டிக்க வேண்டுமென்றால், அது யாரை நீங்கள்; மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு என்று விளிக்கின்றீர்களோ அதனைத்தான் கண்டிக்க வேண்டும். அதுவே நீங்கள் சற்றுமுன்னர் குறிப்பிட்ட பொதுமக்களை இலக்குவைப்பதைச் செய்துகொண்டிருக்கின்றது. கடைசி 48 மணித்தியாலங்கள் மட்டுமல்ல. 1948இலிருந்து அதனை அது மீண்டும் மீண்டும் செய்து வருகின்றது.
தயவுசெய்து இங்கே ஆக்கிரமிப்பாளர்களையும் ஆக்கிமிப்பிற்கு உட்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்தாதீர்கள். அது ஒருபோதும் பார்வையாளர்கள் உண்மைநிலையை விளங்கிக்கொள்வதற்கான நியாயத்தினை வழங்காது. பொதுமக்கள் மீதான படுகொலை என்பது இஸ்ரேல் நிறுவப்பட்டதிலிருந்து அதன் ஒரேயொரு இராணுவக் கோட்பாடாக இருந்து வந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கப்போகின்றது. இந்த உரையாடல் என்பது குற்றம் சுமத்தல் சதுரங்க ஆட்டமாக இருக்கக்கூடாது. இந்த கொடூரத்தை நிறுத்துவது தொடர்பானதாக இருக்கவேண்டும்’ இப்படியெல்லாம் அவர் வாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கும் போது விடாப்பிடியாகத் தனது அதே நோக்கிலான கேள்வியை எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி ஊடகர் மீண்டும் முன்னிறுத்துகிறார்:
‘நீங்கள் இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதலை மட்டுமே கண்டிக்கின்றீர்கள், ஹமாஸைக் கண்டிக்க வில்லையே’
‘நீங்கள் எத்தனை தடவை இஸ்ரேல் அதிகாரிகளை நேர்காணல் செய்திருப்பீர்கள்..குறைந்தது ஒரு நூறு தடவைகள்..எத்தனை தடவைகள் இஸ்ரேலின் போர்க்குற்றங்களை உங்கள் கமராக்கள் படம்பிடித்திருக்கின்றன. எப்போதாவது ஒரு தடவை..ஒரேயொரு தடவை அவர்களின் செயல்களுக்காக அவர்களைக் கண்டிக்குமாறு கேள்வியெழுப்பியிருக்கின்றீர்களா? இல்லை! ஆனால் பலஸ்தீனர்கள் மட்டும் தங்களைத் தாங்களே கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்.
உங்களின அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் ஏன் மறுக்கின்றேன் தெரியுமா? இதன் முழுமை சார்ந்த ஒட்டுமொத்தமான தவறான சித்தரிப்பே எனது மறுப்பிற்குக் காரணம். இது ஒரு அரசியல் முரண்பாடு. நாங்கள் 75 ஆண்டுகளாக எமது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றோம். சரியான தொடக்கப்புள்ளி என்பது அடிப்படைப் பிரச்சினை குறித்த கவனக்குவிப்போடு உரையாடுவது.
இஸ்ரேல் பொதுமக்கள் கொல்லப்படும் போது எங்களை நேர்காணலுக்கு அழைத்திருக்கின்றீர்கள்….மேற்குக் கரையில் கடந்த சில மாதங்களில் மாத்திரம் இருநூறுக்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேல் இராணுவத்தினாலும் யூதக்குடியேற்றவாசிகளாலும் கொல்லப்பட்ட போது எங்களை அழைத்தீர்களா? 16 வருடங்களாக காசாவின் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் 2 மில்லியன் மக்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளபோது எங்களை அழைத்து நேர்கண்டீர்களா?
உக்ரைன் போரை எப்படி அணுகுகின்றீர்கள். உக்ரைன் அதிகாரிகளை அழைத்து அவர்களின் சில போர்மீறல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கின்றீர்களா என்றும் கேட்கின்றார். மேலும் அவர் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்வைக் கோருகின்றார். இஸ்ரேலைப் பொறுப்புக்கூறவைக்க வேண்டுமென்கிறார். இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் தமது ஒருமுகப்பட்ட அணுகுமுறையினூடு, எதனை நிலைநிறுத்த முனைகின்றன என்பதாகும். ஊடகங்களின் தார்மீகமற்ற போக்குகள் ஜனநாயகத்தின் பேரில் அதிகார சக்திகளுக்குத் துணைபோகின்றன. கருத்துச் சுதந்திரமென்ற பேரில் ஒடுக்கப்படுபவனைக் கண்டிப்பதும் – ஒடுக்குமுறையாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களை நியாயப்படுத்தத் துணைபோகின்ற கருத்துருவாக்கங்களை உற்பத்திசெய்வதும், அவற்றைத் திருப்பித்திருப்பிச் சொல்வதன்மூலம் பொதுப்புத்தியிற் திணிப்பதுவும்தான் வல்லரசுகளின் செல்வாக்கிற்குட்பட்ட சர்வதேச ஊடகப் போக்கு.
936 total views, 6 views today