இடம் மாறும் வெளிச்சங்கள்
- சேவியர்
காலம் விசித்திரமானது ! காலம் எப்படி தனது சதுரங்க விளையாட்டை நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சரித்திரச் சிதிலங்களைப் போய்ப் பார்த்தால் போதும். நீண்ட நெடிய வரலாறு கொண்ட சாம்ராஜ்யத்தின் கோட்டை மதில் சுவர்களில் தவளைகள் துள்ளி விளையாடும். ஓணான்கள் ஓடித் திரியும். ஒரு காலத்தில் யாரும் நெருங்கவே முடியாத கோட்டைகளின் அருகே பெட்டிக் கடைகள் டீ விற்கும் !
சரித்திரத்தின் சாய்ந்த பக்கங்களைப் புரிந்து கொள்ள அரசர்களின் அரண்மனையைப் போய்ப் பார்த்தால் போதும். இது தான் அவரது கட்டில், இது தான் அவரது வீர வாள், இது தான் அவரது கேடயம் என துருவேறிப்போன அடையாளங்களைப் பார்க்கலாம். ஒரு காலத்தில் எத்தனை தலைகளை வெட்டி வீசியிருக்கும் அந்த வாள் ! இன்றைக்கு இருபது ரூபாய் இரும்பு விலைக்குக் கூட கேட்பாரற்றுக் கிடக்கும் அது !
காலம் விசித்திரமானது ! அது தனது காய்களைக் கொண்டு தலைமுறைகளை வெட்டி வீழ்த்தியபடி பயணிக்கிறது. வீழ்த்தப்படாத ராஜா எதுவும் இல்லை. ராஜாக்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அரசுகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. காலப் போக்கில் அவை எதுவுமே அர்த்தமற்றதாய் போய் விடுகின்றன.
ஒரு அரசனின் தோல்வி எவ்வளவு வலி மிகுந்ததாய் இருந்திருக்கும் ? தனது சகாக்களின் இரத்தக் கறைகளில் நடந்து தோல்வியைச் சுமந்த அவனது வலி எப்படி இருந்திருக்கும். தனது இடத்தில் இன்னொருவர் அமர, தான் தலைமறைவாய் வாழ்கின்ற வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ! காலம் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான், எதுவும் நிரந்தரமில்லை !
ஒருவர் மேல் விழுகின்ற வெளிச்சம் அதே இடத்தில் இருப்பதில்லை. மேடையில் விழுகின்ற வெளிச்சத்தில் கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். இன்று உச்சத்தில் இருக்கின்ற நபர், சில ஆண்டுகளில் கவனிக்கப்படாத நபராய் இருப்பார்.
விளையாட்டுகளில் பதக்கங்கள் வாங்கும் போது மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அவர்களை உச்சத்தில் கொண்டு போய் வைப்பார்கள், ஆனால் அது நிரந்தரமல்ல. அடுத்த நபர் விரைவிலேயே அந்த இடத்தை எடுத்துக் கொள்வார். அப்போது முந்தைய நபரின் மனம் உடைபடும். தனது காலம் முடிந்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்வது தான் இருப்பதிலேயே சிரமமான காரியம்.
எம்.எஸ்.வி கோலோச்சிய காலம் கடந்து விட்டது, இசை ஞானியின் காலம் தேய்ந்து விட்டது, இசைப்புயலின் காலமும் இப்போது கரை கடந்து விட்டது, இப்போது அனிருத்களின் காலம். அதுவும் வெகு விரைவிலேயே விலகி இன்னொருவரின் ஆளுமை ஆரம்பமாகும்.
நடிகர்களும் அப்படியே ! தன் இடத்தை நிரப்ப இன்னொரு வில்லன் வருவான் என நம்பியார் நினைத்திருக்க மாட்டார். தன்னை விடப் பெரிய ஒரு ஹீரோ வருவார் என எம்.ஜி.ஆர் நினைத்திருக்க மாட்டார். என்னைப் போல் நடிக்க இன்னொருவன் வருவான் என நடிகர் திலகம் நினைத்திருக்க மாட்டார். ஆனால் எல்லாமே மாறிப் போய்விட்டன. புதிய வெளிச்சத் தளங்களில் புதியவர்கள் வந்து குடியேறிவிட்டார்கள்.
தன்னை விட உயர்ந்த இலக்கியப் படைப்பை எழுத இன்னொருவர் பொறந்து தான் வரணும் என நினைத்திருந்த பல ஜாம்பவான்களின் நூல்கள் பழைய புத்தகக் கடைகளில் பேப்பர் விலைக்குக் கிடைக்கின்றன. இன்னொருவர் அந்த இருக்கையில் அமர்ந்து காலமாற்றத்துக்கான இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.
காலம் விசித்திரமானது ! அதைக் கற்றுக் கொண்டவர்கள், காலத்தை எப்படி வெல்லலாம் என்பதைக் கண்டு கொள்வார்கள். காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள், தங்களுடைய வெளிச்சம் இறந்த காலத்துக்கு இடம் பெயரும் போது தாங்களும் உணர்வுகளால் இறந்து விடுகிறார்கள்.
காலத்தைக் கற்றுக் கொண்டவர்கள் தங்கள் மீது வெளிச்சம் விழுந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. வெளிச்சம் இருக்கின்ற காலத்தில் செய்கின்ற செயல்கள்,வெளிச்சம் விலகிய காலங்களில் தனது பெயரை உரைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒரு மனிதனை நாம் நினைவில் கொள்வதற்கு அவனது பெயரோ, தோற்றமோ, உருவமோ முக்கியமில்லை. அவன் விட்டுச் சென்றது என்ன என்பதே போதுமானது ! சேக்ஷ்பியர் குட்டையா, நெட்டையா என யாரும் கவலைப்படுவதில்லை ! இலக்கியம் பேசுகிறது. தொல்காப்பியர் கருப்பா வெள்ளையா என யாரும் சிந்திப்பதில்லை அவரது இலக்கணம் பேசுகிறது ! வெளிச்சம் நம் மீது விழும்போது நாம் என்ன செய்தோம் என்பது நம்மை நிர்ணயிக்கிறது !
அதே போல, வெளிச்சம் நம்மீது விழுகின்ற காலத்தில் நாம் யாரை கவனித்தோம் என்பது காலத்தின் பக்கங்களில் குறிக்கப்படுகிறது. ஒரு ஹிட்லர் என்ன செய்தான் என்பதை வரலாறு இரத்தக் கறைகளால் குறித்து வைத்திருக்கிறது. அதன் குருதி வாசனை விலகப் போவதில்லை. அன்னை தெரசா என்ன செய்தார் என்பதையும் அதே வரலாறு குறித்து வைத்திருக்கிறது. அதில் அன்பின் வாசனை நிரம்பியிருக்கிறது. காலங்கள் கடந்த பின்னும் அதிலிருந்து வாழ்வின் அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
வெளிச்சம் நம் மீது விழுகின்ற காலத்தில் நாம் எப்படி இருந்தோம் என்பதும் காலத்தின் கழுகுக் கண்களில் விழுகிறது. பலருக்கு புகழ் வெளிச்சம் கண்களை கூசச் செய்கிறது. அவர்களுக்கு எதிரே இருப்பவர்கள் தெரிவதில்லை. பின்னால் இருப்பவர்கள் தெரிய வேண்டுமென அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் அந்த வெளிச்சத்தின் கிளுகிளுப்பில் கிறங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நாம் வெளிச்சத்தில் வாழ்கின்ற காலத்தில் தாழ்மையுடன் இருந்தால், பணிவுடன் இருந்தால் வெளிச்சம் இல்லாத காலத்திலும் மனித இதயங்களில் நாம் வெளிச்சம் வீசுபவர்களாக இருப்போம்.
இன்றும் பல்வேறு பழைய நடிகர்கள் அவர்களுடைய பண்பினாலும், குணத்தினாலும் பாராட்டப்படுகிறார்கள். பலர் அவர்களுடைய பணிவினால் புகழப்படுகிறார்கள். கர்வம் கொண்டு அலைந்த எவரையுமே மனுக்குலம் உயர்வான இடத்தில் வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் அது நிலைப்பதில்லை. ஒற்றை மூங்கிலின் உச்சியில் அமர்கின்றதைப் போல தான் அந்த வாழ்க்கை. நமது பக்கம் காற்று அடிக்கும்போது, நாம் பணிவின் இருக்கையில் அமரவேண்டும் !
மூன்று விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் ! ஒன்று, எதுவும் நிரந்தரமில்லை ! வெளிச்சம் என்பது நமக்கு மட்டுமானதல்ல. இந்த உலகில் நமது வாழ்க்கை கொஞ்சம் காலம் தான். அதில் வெளிச்சப் பரப்பில் வாழ்வது மிகக் கொஞ்சம் காலம் தான். அந்த உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நினைப்பு இருந்தால் வெளிச்சத்தில் இருக்கும் போது ஆடவும் மாட்டோம், இருளிள் கிடக்கும் போது வாடவும் மாட்டோம்.
இரண்டாவது, வெளிச்சப் பரப்பில் இருக்கும்போது சக மனிதருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இன்னொருவரைத் தூக்கி விடுவதோ, இன்னொருவரின் தேவையை நிறைவேற்றுவதோ, இன்னொருவருக்கு வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுப்பதோ எதுவாகவும் இருக்கலாம். அது நமது வெளிச்ச வாழ்க்கையை இன்னும் அழகானதாக்கும்.
கடைசியாக, வெளிச்சத்தில் வாழும்போது தாழ்மையும் பணிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு தூரம் உயர செல்கிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய இதயம் தாழ்மை அணிய வேண்டும். எனக்கு இறைவன் இந்த இடத்தைத் தந்திருப்பது என் திறமையால் அல்ல,என் மூலமாய் பிறர் பயன்பட இறைவன் விரும்புகிறார் என்று சிந்திக்க வேண்டும். அப்போது நமது குணாதிசயம் சிறப்பாக இருக்கும். மனிதம் செழிக்கும் !
வெளிச்சத்தில் வாழ்வது தனித்துவமானது வெளிச்சத்தில் வாழ வைப்பது மகத்துவமானது !
குசைளவ யுரனழை பாமுகம் வழங்கிய பொன்மாலைப்பொழுது 431.
06.10.2023 வெள்ளிக்கிழமை எசன் நகரில் பாமுகத்தின் பொன்மாலைப்பொழுது 431வது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாமுகத்தில் தினம் ஒரு காணொளியாக தொடர்ச்சியாக தமிழ் வாசிப்புஅரும்பு 1000 செய்து சாதனை படைத்த செல்வன் நகுல் துரையரங்கன், செல்வி அட்சியா சாந்தரூபன் இருவருக்கும் வாசிப்பாயிரம் உலகத் தமிழ் சாதனை என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இங்கு பிறந்து தமிழ் கற்று கற்பிக்கின்றவர்களுக்கு துறை சார்ந்த ஆளுமைக்காகவும்,அடுத்த சந்ததி தமிழ் மொழி வளமூட்டல் சார்ந்தும் ஆற்றும் பணிகளை கௌரவித்து நுஒஉநடடநவெ ளுநசஎiஉந யுறயசன என்ற சான்றிதழ் வழங்கி மூவர் கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் இந் நிகழ்வில் 40 மேற்பட்ட பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பறை இசை,கரகம், பாடல்கள், நடனங்கள், பட்டிமன்றம், பெரியவர்களின் உரைகள், வாழ்த்துகள், பரிசுகள் என கலகலப்பாகவும் காத்திரமாகவும் இவ் நிகழ்வு நடைபெற்றது. லண்டன் தமிழ் வானொலி, பாமுக இயக்குனர்கள் திரு திருமதி நடாமோகன் அவர்கள் இவ் நிகழ்வில் லண்டனில் இருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.படங்கள்.நந்தபாலன்.செய்தி:சாந்தி துரையரங்கன்.
695 total views, 6 views today