செயற்கை நுண்ணறிவுப் புரட்சி – ஒரு புதிய காலகட்டம் தொடங்குகிறது!

Dr.நிரோஷன் தில்லைநாதன்

ஒரு புதிய யன்னல் திறக்கிறது

Gemini

இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள், உங்கள் கணினி நீங்கள் தட்டச்சு செய்வதை மட்டும் புரிந்து கொள்ளாமல், நீங்கள் பார்ப்பது, கேட்பது மற்றும் உணர்வது அனைத்தையும் புரிந்து அதுக்கேற்றவாறு உங்களுடன் தொடர்பில் இருக்கும் என்றால் எப்படி இருக்கும்? என்ன புரியவில்லையா? அறிவியல் புனைவுக் கதைகளில் காணக்கூடிய personal assistant ஆக பணியாற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் அதாவது அயன் மேன் (Iron Man) கதையில் வரும் ஜார்விஸ் போன்ற ஒரு கணினி உங்களுக்குச் சேவை செய்வதற்கு பக்கத்துணையாக இருந்தால் எப்படி இருக்கும்? அட இது எல்லாம் சாத்தியமாகப் பல்லாண்டுகள் போய்விடும் என்று நினைக்காதீர்கள். இது கூகுளின் (google) சமீபத்திய அற்புதமான Gemini மூலம் கொண்டு வரப்பட்டது.

Gemini என்றால் என்ன? இது இலகுவாகச் சொல்லப்போனால் ஒரு வகை செயற்கை நுண்ணறிவு என்று கூறலாம். Geminiதற்போது பலவிதமாகக் காணப்படும் ஒரு சராசரி செயற்கை நுண்ணறிவு கிடையாது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் இது ஒரு “பல்வழி திறன்” கொண்ட செயற்கை நுண்ணறிவு ஆகும். அதாவது ஆங்கிலத்தில் multimodal நுண்ணறிவு என்று கூறலாம். அப்படி என்றால் என்ன? இது வெவ்வேறு வகையான தகவல்களை, அதாவது எழுத்து, படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ அனைத்தையும் ஒரே நேரத்தில் புரிந்து கொள்வதை மட்டுமல்லாமல் அவற்றைச் செயலாக்கவும் செய்யும் என்பதைக் குறிக்கும். உதாரணத்திற்கு ஒரு நண்பன் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களுடன் உரையாடும்போது, அவர் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் அவதானிக்கமாட்டார், உங்களுக்குப் பின்னால் இருக்கும் சுவரில் உள்ள படங்களைப் பார்ப்பார், பின்னணியில் இயங்கும் இசையைக் கேட்பார் மற்றும் உங்கள் முகத்தின் வெளிப்பாடுகளையும் கவனிப்பார். இந்த நண்பன் ஒரு மனிதனாக இருக்கும்போது, இது பெரிய விஷயமாக உங்களுக்குத் தோன்றாது, ஏனென்றால் மனிதனால் இவ்விடயங்களை இலகுவாக ஒரே வேளையில் செய்துவிட முடியும், ஆனால் இதுவே ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியாக இருந்தால் இது மிகவும் ஆச்சரியமூட்டும் ஒரு விடயமாக மாறிவிடும். அது தான் Gemini- ஒரு செயற்கை நுண்ணறிவு மனிதனைப் போல் உலகத்தை உணர்கிறது.

அட ஒரு கணினியால் அப்படி என்ன தான் நமக்கு உதவி செய்யமுடியும் என்று யோசிக்கின்றீர்களா? ஒரு மனிதனைப் போல் எவ்வாறு ஒரு செயற்கை நுண்ணறிவால் செயல்புரிய முடியும் என்று தோன்றுகிறதா? அப்படி என்றால் இந்த உதாரணங்களைக் கேளுங்கள். உங்களுக்குப் பசிக்கின்றது, எனவே மிகவும் சுவையான ஒரு ஓமெலட்டை சமைக்க ஆரம்பிக்கின்றீர்கள். முட்டையை உடைத்து சட்டியில் போட்டுக் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குள் ஏற்படும் கேள்வி என்னவென்றால் இந்த முட்டையை எப்போது மறு பக்கத்துக்குத் திருப்ப வேண்டும் என்று. சரியான நேரத்தில் திருப்பினால் தான் அது சுவாயான ஓமெலட்டாகும். இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் ஓமெலட்டை ஒரு படம் பிடித்து விட்டு, அதை Geminiஇடம் காண்பித்தால், அது எப்போது அந்த ஓமெலட்டை திருப்ப வேண்டுமென்று சொல்லும். இன்னுமொரு உதாரணம் தருகிறேன். உங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவை நீங்கள் திட்டமிட யோசிக்கின்றீர்கள், ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. கவலையை விடுங்கள், Gemini உங்கள் குழந்தையின் ஆர்வங்களுக்கு ஏற்ப எல்லா நடவடிக்கைகளையும் வடிவமைக்க உதவுவது மட்டுமல்லாமல், நீங்கள் எந்த வேலைகளை எந்த வரிசையில் எவ்வாறு செய்ய வேண்டுமென்றும் இலகுவாகச் சொல்லிவிடும்.

Geminiகல்வி கற்பவர்களுக்கும் மிகவும் உதவக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவாகும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இயற்பியல் (phலளiஉள) சிக்கலில் சிரமப்படுகிறீர்களா? Geminiக்கு உங்கள் இயற்பியல் சிக்கலைக் காட்டுங்கள், அது உடனடியாக நீங்கள் எந்த இடத்தில் தவறுகளைச் செய்தீர்கள் என்று சுட்டிக்காட்டுவதை மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ற சரியான தீர்வையும் நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் சொல்லித்தரும். இது ஒரு பொறுமையான, அறிவார்ந்த ஆசிரியர் போல் உங்கள் பக்கத்தில் இருக்கும் – எப்போது வேண்டுமானாலும்!
இது எல்லாம் போதாது என்று Geminiவிஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்குக் கூட உதவக்கூடும் என்று நம்புகின்றனர். Geminiயின் உதவியுடன் எதிர்காலத்தின் விஞ்ஞான வளர்ச்சி அதி வேகத்தில் நடைபெறும் என்று நம்புகின்றனர்.

கூகுளின் Geminiஒரு சராசரி செயற்கை நுண்ணறிவு அல்ல, இது நமது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு விதமான ஜன்னல் என்றும் புரிந்துகொள்ளலாம். Geminiஊடாக மனிதனுக்கும் கணினிக்கும் இடையே இருக்கும் தொடர்பு மிகவும் ஆழமாக இருக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது. அந்த எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியல்ல, அது எங்கள் அன்றாட வாழ்வில் நம்மைக் கற்றுக்கொள்ள, எங்களுக்கு வேலை செய்ய மற்றும் எங்களுடன் விளையாட உதவும் ஒரு கூட்டாளியாகும். நாம் இவ்வாறான ஒரு எதிர்காலத்தை விரைவில் அடைய நாம் எடுத்து வைக்கும் முதல் அடியில் Geminiஒன்றாகும்.

இந்த புதிய காலகட்டத்தின் விளிம்பில் நிற்கும்போது, ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: நமக்கு இருக்கும் சாத்தியங்கள் அளவிடமுடியாதவை. Geminiஎன்பது ஒரு தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல் இது ஒரு மிகவும் இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகை நோக்கிச் செல்லும் வழியாகும். அறிவியல் புனைவுக் கதைகளில் மட்டுமே கண்ட விசித்திரமான உலகை நாம் இனி நமது நிஜ உலகிலும் காணப்போகிறோம். அதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. ஒரு புதிய யன்னல் திறக்கிறது.

647 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *