கேள்விக்குள்ளாகவும் பொது மன்னிப்பு
ஆர்.பாரதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த டி சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தவறானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி எந்த அளவுக்கு சட்டவிரோதமான முறையில் செயல்பட்டுள்ளார் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாக பதிவு செய்யப்படும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைப் படுகொலை செய்த வழக்கிலேயே துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அந்தப் பொது மன்னிப்பு அன்று முதல் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹீருனிக்கா அதற்கு எதிராக மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பு தவறானது என இப்போது – கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்திருக்கின்றது.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி ஒருவர் வழங்கிய போது மன்னிப்பு நீதிமன்றத்தினால் ரத்துச் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை என்பதால், இது தொடர்பில் ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ இப்போதும் பதவியில் இருந்திருப்பாராக இருந்தால் இவ்வாறான ஒரு தீர்ப்பு வந்திருக்குமா என்ற ஒரு கேள்வியும் இருக்கத்தான் செய்கின்றது.
துமிந்த சில்வாவும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரமும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். அதாவது இருவருமே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் திகதி இருவரது ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரின்போது பாரத லட்சுமணன் பிரேமசந்திர நடுவீதியில் வைத்துக் கொல்லப்பட்டார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவுடன் அவருடைய மூன்று மெய்ப் பாதுகாவலர்களும் இந்த துப்பாக்கிச் சமரின்போது பலியாகினர்.
இருவரும் தமது ஆதரவாளர்கள் சகிதம் வீதியில் நேருக்கு நேர் சந்தித்தபோது இந்த துப்பாக்கி சமர் மூண்டது.
இரண்டு பேரும் கொழும்பு மாநகர சபையின் குறிப்பிட்ட பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதற்காக நீண்ட காலமாகவே முரண்பட்டுக் கொண்டிருந்தவர்கள். இந்த சம்பவத்தில் துமிந்த சில்வாவும் காயம் அடைந்திருந்தார். கொழும்பிலும் பின்னர் சிங்கப்பூரிலும் அவர் சிகிச்சை பெற்றார்.
வழக்கு விசாரணைகளை தொடர்ந்து துமிந்தவுக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ராஜபக்ஷக்கள் அக்கறை காட்டியதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. நாட்டினுடைய நலன் கருதி இந்த பொது மன்னிப்பை தான் வழங்கியதாக கோட்டாபாய ராஜபக்ஷ சத்திய கடுதாசி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்த தேசத்தின் பாதுகாப்பு அல்லது தேசத்தின் நலன் என்பது என்ன என்பதையிட்டு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இப்பொழுது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அது தொடர்பான எந்த ஒரு ஆவணமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனை விட பொது மன்னிப்பு தொடர்பான சட்டமா அதிபரின் வழிகாட்டல்கள் எதையும் முன்னாள் ஜனாதிபதி பின்பற்றி இருக்கவில்லை என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
2021 ஜனவரியில் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அதனை அடுத்து வந்த ஒரு மாத காலத்திற்கு அந்த பொது மன்னிப்பை எதிர்த்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் பலவும் தாக்கல் செய்யப்பட்டன. அதற்குப் பின்னர் சுமார் ஒன்றரை வருடங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கின்றார். இருந்த போதிலும் இந்த மனுக்களை எதிர்கொள்ளத் தேவையாக இருந்த ஆவணங்களை அல்லது கோவைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான எந்த ஒரு செயற்பாட்டையும் ஜனாதிபதியோ ஜனாதிபதியின் செயலகமோ மேற்கொண்டு இருக்கவில்லை.அதிகாரத்தில் தான் இருப்பதால் இதற்கு எதிராக வரக்கூடிய எந்த ஒரு நிலைமைகளையும் தன்னால் சமாளிக்க கூடியதாக இருக்கும் என ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய நினைத்திருக்கலாம்.
அதே வேளையில் பொது ஜன பெரமுனவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 117 பேர் கையொப்பமிட்ட மனு ஒன்றும் பொது மன்னிப்பு அறிவிப்பு வெளிவர முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதிலும் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அவரது கட்சியைச் சார்ந்தவர்கள் தங்களுடைய அரசியல் அல்லது வியாபார நலங்களுக்காக இந்த மனுவை சமர்ப்பித்திருக்க முடியும்.
இரந்தபோதிலும் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதியாக இருந்தவர் இந்த மனுக்களை ஏற்றுக் கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுதலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பது இப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதே வேளையில் ஜனாதிபதி தன்னுடைய நிறைவேற்று அதிகாரங்களின் கீழ்வரகூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார் என்பதும் இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியிருக்கின்றது.
அதி உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய உறவினர்களையும் அரசியலுக்கு தமக்குத் தேவையாக இருப்பவர்களையும் பாதுகாப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது இலங்கையை பொறுத்தவரையில் புதிதல்ல. கோட்டாபய ராஜபக்ஷாவினால் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்ட மற்றும் ஒரு விவகாரமும் சர்ச்சைக்கு உள்ளானதாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான சுனில் ரட்னாயக்கவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் அவரையும் கோடாபாய் ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை மேலும் அதிகரித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே தமிழ் மக்கள் எட்டு பேரை படுகொலை செய்ததற்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்திருந்தார். அந்தப் பொது மன்னிப்பு கூட மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதற்கு எதிரான மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. எது குறித்து விசாரணைகளும் இப்போது இடம் பெற்று வருகின்றது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதை தான் இப்போது அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
576 total views, 3 views today