வைகல் -ஆசிரியர் கரிணி வெளியீடு: வெற்றிமணி 28.

  • பூங்கோதை – இங்கிலாந்து.
    வைகல் நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அல்லது எனது வாசிப்புப் பகிர்வு எனப்படுகின்ற இச்சின்னஞ் சிறிய கட்டுரையில் பேசப்பட வேண்டிய பல விடயங்கள் என் மனதைத் தொட்டுச் செல்கின்றன. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் ஒரு சிறு முயற்சி இது.

வைகல் எனும் சொல்லிற்கு, காலை, விடிகாலை, அன்றாடம், தினசரி என்றெல்லாம் அர்த்தம் கொள்ளலாம் என்னும் போது,அது இந்நூலிற்கும் சாலப் பொருந்தி வருகிறது. ஏனெனில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்துமே ஒருவர் தனது நாளாந்தத் தேவைகளை எதற்காக, எவ்வாறு மரபு ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.

‘வைகல் ‘ ஜேர்மனியில், வெற்றிமணி பத்திரிகையின் 28வது வெளியீடாக புரட்டாதி 2023இல் வெளிவந்திருக்கிறது என்பதோடு இதன் அட்டை வடிவமைப்பும், ஓவியமும் வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரனால் உரு வாக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும் என்கின்ற முதலாவது கட்டுரையிலிருந்து பகிர்ந்துண்டு வாழாத வாழ்வென்ன வாழ்வோ என்கின்ற 31 வது கட்டுரை வரை கரிணி தன்னுடைய பார்வையில் வாழ்வையும் அதன் போக்குகளையும் அது சார்ந்த எம்முன்னோர்களின் நெறிகளையும், எதற்காக அவை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்கின்ற அவரது அபிப்பிராயமும் அழகிய தமிழில் கோர்வையாக் கப்பட்டுள்ளது. இதில் எனக்குப் பிடித்த பல கட்டுரைகள் இருந்தாலும், குறிப்பாக ஒரு சில மிகப் பிடித்தவற்றைக் குறிப்பிட்டு ஏனையவற்றை வாசகர்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

‘சிரிப்பின் மகத்துவம்’ (12 வது கட்டுரை) என்பது அனைவரும் பின்பற்ற வேண்டியதொன்றாகவே நானும் கருதுகின்றேன். என்னுடைய தற்காலப் பின்னணியில், நான் கடந்து வந்த கடினமான பாதைகளை இலகுவாக்கித் தந்தது எனக்கான நகைச்சுவை உணர்வுதான் என்றே நம்புகிறேன். ஆனால் இங்கே இக்கட்டுரை ஆசிரியருக்கும் எனக்குமான ஒரு கருத்து வேறுபாடு என்னவெனில், இவர் இதை ஒரு ஆன்மீக ரீதியாக மட்டுமே நோக்குவதும் நாம் அதைத் தனியே விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் என்பதுவுமே ஆகும். தனியே மதம் சார்ந்து கூறப்படுகின்ற விடயங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று விடக்கூடும்.

இங்கு ஆசிரியர் பேசிச் செல்லும் விடயங்கள் அனைத்துமே ஒருவர் தன் வாழ்வில் கடைப்பிடித்து, அதன்பால் ஏற்படுகின்ற நன்மைகள் குறித்தவையே. ஆனால் அவர் அதற்கான விளக்கங்களைத் தருகின்ற போது பகுத்தறிவுச் சிந்தனைகளை ஆன்மீகச் சிந்தனைகளோடு இணைத்துச் செல்கிறார். உதாரணமாக, பெண்கள் தமது மாதவிடாய்க் காலங்களில் எதற்காக ஓய்வு எடுத்துக் கொள்வதும், தம்மீது அதிக கவனம் எடுத்துக் கொள்வதும் அவசியம் என்பதை மிக அழகாகத் தன் கருத்தோடு தொட்டுச் செல்கிறார்.”மலரினும் மெலியது புயலினும் வலியது பெண்மை.” என்கின்ற இவரது கூற்று ஆழமானதும் விசாலமானதுமாகும்.

கரிணி ஏலவே கூறியிருப்பது போல புதிய பார்வைகள் அனைத்துமே ஒரு இடைச்செருகல் என்பதை அவர் குறிப்பிட்டு நிற்கிறார். பார்வைகள் பலவிதமாகலாம். இவை ஆய்வுக்கட்டுரைகள் அல்ல என்பதையும் இங்கே தரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளும் ஆசிரியருடைய அபிப்பிராயம் அல்லது கருத்து என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பகிர்ந்துண்டு வாழ்வதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதும் தான் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதில் கரிணியின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. இந்த அண்ட சராசரத்தில் நாமெல்லாம் ஒரு தூசியை விடச் சிறியவர்கள் எனும் போது எதற்காக ஒருவருக்குத் தலைக்கனம் தோன்ற வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கும் கரிணிக்கு நிறைந்த வாழ்த்துகள். மனித நேயத்தையும், வர்க்க வேறுபாடுகள் அற்ற உலகையும் வேண்டி நிற்கும் இக்கட்டுரைத் தொகுப்பு பலரது கைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்று விழைகிறேன்.

473 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *