எனது காலம் தோறும் நாட்டியக்கலை நூலுக்கு முதல் பரிசு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ராமச்சந்திரன் கரங்களால் பெற்றேன்.
நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா
1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அழைப்பெடுத்திருந்தார். அவர் கூறினார், “அம்மா, உனது நூல் காலம் தோறும் நாட்டியக்கலைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. நீயே நேரில் வந்து அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். எனக்குள் எழுந்த கேள்வி, ‘என்ன இலங்கையர் ஆன எனக்கு தமிழகத்தில் முதல் பரிசா?’
குறிப்பிட்ட தினத்தில் பரிசைப் பெற வள்ளுவர் கோட்டம் சென்றோம். மண்டபம் நிறைந்த கூட்டம். இலங்கையில் இருந்து பரிசைப் பெற வந்திருந்த எனக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி இருந்தார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்தவர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி..ராமச்சந்திரன் அவர்கள். அவர் வருகிறார் என்றதும் மக்களிடையே ஒரு பரபரப்பு. பரிவாரம் சூழ அவரும் வந்தார். பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெறும் ஒவ்வொருவருடனும் சில வார்த்தைகள் பேசி, பரிசைத் தந்தார்.
மேடையை விட்டு வந்து எமது இருப்பிடங்களுக்கு வந்தோம். எம்.ஜி.ஆர். நடுநாயகமாக அமர்ந்தார். எனது இருக்கை M.G.R. இருந்த இடத்தில் இருந்து மூன்று இருக்கைகள் தள்ளியே இருந்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அன்றைய ராஜ நர்த்தகி சுவர்ணமுகியின் நடனம் நடைபெற்றது.
M.G.R. தான் அணிந்திருந்த கறுப்பு செருப்பைக் கழற்றிவிட்டு நடனத்திலே இணைந்து இசைக்கு அவரது கால்களால் தாளம் போட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கால்கள்தான் எத்துனை வசீகரமானவை. அவர் தாளம் போடும் ஒவ்வொரு தட்டிற்கும் கால்களில் இரத்தம் சில்சில் என சிவந்து மறையும் அழகை இரசித்த வண்ணம் இருந்தேன். பல நடனத்திற்கான பாடல்களிலே இறைவன் பாதங்களை அரவிந்த மலரோ எனவும் செந்தாமரை மலரே கமல பாதங்கள் எனவும் பல வர்ணனைகளை இரசித்து அனுபவித்து அபிநயித்தவள். ஆனால் நிஜமாகவே ஒருவரின் பாதம் நான் அனுபவித்த அத்தனை அழகையும் கொண்டதாக இருப்பதை அன்றுதான் கண்டேன். மெய்மறந்து இரசித்தேன். எனது இந்த வியப்பை இரசிப்பை பலரிடம் கூறி மகிழ்ந்துள்ளேன்.
1965, 1966-களிலே எனது குருநாதர் நாட்டிய கலாகேசரி, பத்ம பூஷண் ஸ்ரீ வழுவூர் இராமையா பிள்ளை அவர்கள் வீட்டிலே தங்கி ஆடல் கலையைக் கற்றேன். எனது குருவும் எம்.ஜி.ஆர். -உம் நீண்ட கால நண்பர்கள். குருநாதர் வீட்டில் வாழ்ந்த காலத்தில், அவர்கள் வீட்டிலே எந்தவித ஒழுங்குமற்று குவிந்து கிடந்த பழைய படங்களை ஒழுங்காக வகை பிரித்து அல்பத்தில் ஒட்டிவைத்தேன். எனது குருநாதரும் எம்.ஜி.ஆர். உம் குருநாதரும் ஸ்ரூடியோவில்; போய் எடுத்த படம் இருந்தது. எனது குருநாதர் எப்பொழுதுமே இரட்டைநாடி சரீரம் கொண்டவர். அதனால் அவர் கதிரையில் அமர ஆ.பு.சு அருகே நின்றுகொண்டிருக்கிறார். விவரம் கேட்டபோது, சென்னைக்குப் புதிதாக வந்த நண்பர்கள் இருவரும் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்களாம் என விளக்கம் கிடைத்தது. நான் படித்த காலத்திலேயே எம்.ஜி.ஆர். எப்போதாவது எனது குருநாதரைப் பார்க்க வருவதுண்டு. அதிகபட்சமாக இரவு 8.30 மணிக்கு மேலேதான் வருவார்.
வீட்டிற்கு அன்யோன்யமாக பழகுபவரே உள்மண்டபத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். அப்படி உள்ளே வருபவர்M.G.R. எனது ஆசான் வழமையாக ஒரு நீண்ட வாங்கிலேயே அமர்வார். அவருடன் M.G.R-உம் அமர்ந்து பேசுவார்கள். அம்மா சம்பிரதாயமாக சுகம் விசாரித்துவிட்டுப் போய்விடுவார். நானும் என் குருநாதர் மகளும் ஒரே வயதுக்காரர். நிறைய பேசுவோம். ஒரு அறையிலேயே தங்குவோம். எம்.ஜி.ஆர். போகப் புறப்பட்டதும் குருநாதர் சத்தமாக அழைப்பார். வெளியே வருவோம். நலம் விசாரிப்பார். பயம் கலந்த மரியாதையுடன் அவருக்குப் பதில் அளிப்போம். மற்றவர்கள் வந்தால் எம்மை அழைப்பது கிடையா. இது எம்.ஜி.ஆர். கேட்பதால் நாம் அழைக்கப்படுவோம். எனது ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக ஒரு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். முன்னின்று நடாத்தினார். அதற்கான கொமிட்டியில் எம்.ஜி.ஆர். பெயர் கடைசியில் இருந்தது. கருணாநிதி பெயர் முதலிலே இருந்தது. இவையெல்லாம் அவர் எனது ஆசிரியருடன் எவ்வளவு அன்யோன்யமான நண்பர் என்பதைக் காட்டின.
எனது குருநாதரின் இளைய மகன் பிற்காலத்திய பிரபல சினிமா பின்னணி பாடகரான மாணிக்கவிநாயகம். மதிய உணவின் பின் எனது ஆசிரியர் படுத்து இளைப்பாறுவார். அப்பொழுது மாணிக்கவிநாயகம் அவர் கால்களைப் பிடித்துவிடவேண்டும். அப்போது விநாயகம், “அப்பா, உனக்கும் எம்.ஜி.ஆர். -க்கும் ஒரே வயதுதானே! அவரைப் பார். குமரிப் பெண்களோடு டான்ஸ் ஆடுகிறார். நீ கிழவன் போல கால் கை பிடித்து விடு என்கிறாய்” என்பார். நான் அங்கிருந்த போது விநாயகம் பரீட்சையில் கோட்டை விட்டுவிட்டு கையிலே ஒரு Guitarஉடன் திரிந்த காலம். மாணிக்கவிநாயகம் என் தம்பி போன்றவன். நான் அங்கிருந்த சமயம் எங்கே வெளியே போவதானாலும் துணைக்கு வருவது மாணிக்கவிநாயகம். நான் விநாயகத்தை இறுதியாகப் பார்த்தபோது கையில் வெற்றிலைப்பெட்டியை வைத்துக்கொண்டு வாய் நிறைய வெற்றிலையுடன் பேசினார். “ஏன்டா, இப்படி கிழவனாட்டம் பண்ணுகிறாய்? அசிங்கமாக இருக்கு” எனக் கடிந்து கொண்டேன். என்ன பண்ண? பழகிப்போய்விட்டது” என்றார்.
நான் அங்கு வசித்த காலம். இலங்கை நண்பர்கள் வந்தால் என் ஆசிரியரிடம் சினிமா ஷட்டிங் பார்க்கக் கேட்பது உண்டு. அவரும் எம்.ஜி.ஆர். உடன் பேசி அவர் ஷட்டிங் பார்க்கவே அனுப்புவார். நான் படித்தக் காலத்தில் இலங்கை மாணவருக்கு விசா பிரச்சனை இருந்தது. எனக்கு அப்படி இருக்கலாம் என எண்ணி என்னிடம் “உங்களுக்கு ஏதாவது பிரச்சனையானால் என்னிடம் கேட்கலாம், என்னால் உதவ முடியும்” என்றார். ஒரு சாதாரண இலங்கை மாணவியிடம் கூறியது, இவரது உதவும் மனப்பான்மை, சினிமா புகழ், பதவி அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டது. அதுவே அவரை ‘பொன்மனச் செம்மல்’ ஆக்கியது.
713 total views, 9 views today