பாரம்பரிய பெருமைகொண்ட வெற்றிலை
– பிரியா. இராமநாதன். இலங்கை.
இன்னும் சில தினங்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகின்றது . பாரம்பரியமாகவும் கலாசார ரீதியாகவும் புத்தாண்டோடு பல விடயங்கள் தொடர்புகொண்டிருக்கும்.அந்தவகையில்,தமிழர்களிடத்திலும் சிங்களவர்களாவர் களிடத்திலும் புத்தாண்டோடு மட்டுமல்லாமல் பல சந்தர்ப்பங்களிலும் முக்கியத்துவம் பெரும் ஓர் பொருள்தான் வெற்றிலை !
ஆன்மீக ரீதியில் வெற்றிலையின் நுனியில் மகாலட்சுமியும் , நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் வீற்றிருப்பதாக இந்து மதம் சொல்கிறது . இதனால்தான் நம்முடைய மங்கள காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றிலை காலங்காலமாக இடம்பிடித்திருக்கின்றது . முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் விடைபெறும்போது அவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தனுப்பினால் குடும்பம் செழிக்கும் என்கிற நம்பிக்கையானது ஓர் மரபாகவே காணப்பட்டது . தமிழர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றிலுமே வெற்றிலையும் பாக்கும் தவிர்க்கமுடியாத விடயம் . குழந்தை பிறந்தவுடன் சேனைத்தண்ணி ஊட்டுவது வெற்றிலையால்தான் . மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் உறுதி செய்ய தாம்பூலம் மாற்றுவது , திருமண சீர்வரிசையில் தாம்பூலத்த தட்டு , திருமணம் முடிந்தவுடன் கொடுக்கப்பட்ட தாம்பூலப் பை , வளைகாப்பு , புதுமனை புகுவிழா , கோயில் திருவிழா , முதலிய சுபகாரியங்கள் முதல் , மனிதனின் இறப்பிற்கு பின் அவனது தலைமாட்டில் விளக்கேற்றி வைப்பது முதலான இடுகாட்டு காரியங்கள்வரை வெற்றிலையின் பங்கு அலாதியானது
திருப்தியான உணவுக்குப்பின் செரிமாணத்திற்காக வெற்றிலை மெல்வதென்பது தெற்காசிய நாடுகள் பலவற்றின் பாரம்பரிய பழக்கமாம் . நாம் வெற்றிலையை தெய்வீக மூலிகையாக பார்ப்பதுபோல் பல நாடுகளிலும் வெற்றிலையானது பல கோணங்களில் பயன்படுத்தப்படுகின்றது என்பது நம்மில் பலருக்கும் தெரியாதவொன்று . சண்டைபோட்ட இரண்டுபேர் சமாதானம் ஆவதன் அடையாளமாக வெற்றிலை மாற்றிக்கொள்வது மலேசியர்கள் வழக்கமாம் . சுமாத்ராவில் மனைவி கையில் வெற்றிலையைக் கொடுத்து “தலாக் தலாக் தலாக் ” என மூன்றுமுறை சொன்னால் , கணவன் மனைவிக்கிடையே விவாகரத்தானதாக அர்த்தமாம். நெதர்லாந்து சிறைக் கைதிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக தினமும் உணவுடன் சேர்த்து வெற்றிலை கொடுக்கப்படுமாம் !? , தூக்கில் ஏற்றப்படும் முன்பு குற்றவாளிகளுக்கு கடைசியாக வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்யும் வழக்கம் மியன்மாரில் உண்டாம் . சபையில்கூடி ஏதாவது முக்கியமான விடயம் பேசுவதற்குமுன் வெற்றிலை பாக்கு போடுவது வியட்நாமியர்களின் வழக்கமாம் .
நம்முடைய சங்க இலக்கியங்களில் வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு முதலியவை பாலியல் குறியீடுகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்வுகளைத் தூண்டும் சக்தி தாம்பூலத்திற்கு இருப்பதனால், ஏலம், கற்பூரம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு முதலிய வாசனைப் பொருட்களுடன் சேர்த்து மன்னர்கள் தாம்பூலம் உண்டார்களாம். அதுமட்டுமன்றி மன்னர்களுக்கு தாம்பூலம் மடித்துக்கொடுப்பதற்கென்றே தனியாக பணியாளர்கள் இருந்திருக்கின்றார்கள். அந்த பணியாளர்களின் கைகளில் இருக்கும் தாம்பூலப்பெட்டியானது நகை பெட்டிபோல பெரும் அலங்காரத்துடன் செய்யப்பட்டன என சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது .
மிளகு குடும்பத்தினை சேர்ந்த கொடியாக படரும் பூக்கும்தாவரமான வெற்றிலையானது ஓர் நல்ல மருத்துவ மூலிகை என்பது அனைவரும் அறிந்தவொன்றே . பார்ப்பதற்கு வெறும் இலையாக தெரிந்தாலும் வெற்றிலையில் நீர்ச்சத்து அதிகம். 84.4 மூ நீர்ச்சத்து , 3.01மூ புரத சத்து , 0.8மூ கொழுப்பு , உற்பட இரும்பு சத்து , விட்டமின் சி, கால்சியம், கரோட்டின், தயமின் போன்றவையும் வெற்றிலையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பாம்புக்கடி விஷதினை முறிக்கும் சக்தி வெற்றிலை சாருக்கு உண்டு என்கிறது சித்த மருத்துவம் . குழந்தைகள் வயிற்று வழியால் அழும்போது வயிற்றில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி வெற்றிலையினை லேசாக வாட்டி குழந்தையின் வயிற்றில் இடும்போது வலி குறையும் என்பது நமது பாட்டி வைத்தியம். வெற்றிலையை அரைத்து நெற்றியில் பத்துப்போட்டால் தலைவலி காணாமல் போகும். அதுமட்டுமன்றி வெற்றிலை ஓர் ஆன்டிசெப்டிக் என்பதால் காயங்களை ஆற்றும் வலிமை கொண்டது. இதனால்தானாம் பிரசவமான பெண்களை இளம் வெற்றிலைகளை மெல்லச் சொல்வதும், நாட்டு மருந்துகளுடன் வெற்றிலையினை சேர்த்துக்கொடுப்பதும் காரணம் .
வளமான மண் , மிதமான தட்பவெட்பம் , நல்ல தண்ணீர் வசதி இருந்தாலே செழித்து வளரும் வெற்றிலை அன்று தொட்டு இன்றுவரையிலும் ஓர் பணப் பயிர். சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் வெற்றிலையில்கூட ஆண் பெண் உண்டாம் . கரும்பச்சை நிறத்தில் இருந்தால் ஆண் வெற்றிலை , இளம் பச்சை நிறத்தில் இருந்தால் பெண் வெற்றிலை.பூ, கொடி,பிஞ்சு , என பிற பயன் எதுவுமின்றி வெறும் இலையால் மட்டுமே பயன்தரக்கூடியது என்பதால்தான் ” வெற்று இலை கொடி” என்பது காலப்போக்கில் ” வெற்றிலைக் கொடியாக மருவியிருக்கலாம் என கூறப்படுகின்றது .
வெற்றிலையில் மை போட்டுப்பார்த்தால் காணாமல்போன நபரையோ பொருளையோ கண்டுபிடித்துவிடலாம் என பல சினிமாக்களிலும் பார்த்திருப்போம் இல்லையா ? உண்மையில் மந்திரத்தை சொல்லிக்கொண்டு வெற்றிலையில் மை போட்டுப்பார்த்தால், எல்லாமும் வி{வலாக தெரியும் என்பதெல்லாம் இல்லை. மை போட்டபின் வெற்றிலையில் தெரியும் ரேகைகள் சொல்லும் திசையினை வைத்து அனுமானமாக குறி சொல்லப்படும். அவர்கள் கூறிய திசையில் தேடிச்சென்றால் தொலைந்தது கிடைக்கும் என்பது நம்பிக்கை அவ்வளவுதான் !
275 total views, 6 views today