ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திரையில் தோன்றும் வாசகங்கள்
‘புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் உயிருக்கு கேடு விளைவிக்கும்”.
பிரியா.இராமநாதன் இலங்கை.
ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திரையில் தோன்றும் வாசகங்களே இவை .. என்னதான் புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு , அது உங்கள் சந்ததியையே பாதிக்கும் என உணர்த்தும் வகையில் அதன் அட்டைப் பெட்டியில் குரூரமான புகைப் படங்கள் இடம்பெற்றிருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருத்திற்கொள்ளாது,ஊதித்தள்ளுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றதென்றால் மிகையில்லை !
உலக சுகாதார அமைப்பு 1987-ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது ஏப்ரல் 7, 1988 அன்று ‘உலக புகை பிடிக்காத நாள்’ என்று அறிவித்தது. மக்கள் குறைந்தபட்சம் 24 மணிநேரம் புகை பிடிக்காமல் இருப்பதற்கு மற்றும் புகையிலை பயன்பாட்டை விட்டு வெளியேற சிரமப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்பு அதே ஆண்டில் உலக சுகாதார அமைப்பு மே 31-ஆம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு நாள்’ என்று கடைபிடிக்க முடிவு செய்தது.
மிக தொன்மையான வரலாற்றினைக் கொண்டது புகையிலை என்றாலும் இன்று பாக்கெட் கணக்குகளை தாண்டி நாளொரு பொழுதும் தினமொரு நிமிடமுமாக ஊதித்தள்ளி தன்னையும் அழித்து, அருகில் உள்ளவர்களையும் அழித்துவரும் இந்த புகைப்பழக்கம் தோன்றியது அமெரிக்காவில்தான், அதும் குறிப்பாக தென் அமெரிக்காவில். பொழுதுபோக்கு அம்சமாக தோன்றிய இந்த புகையிலைப் பண்பாடு காலப்போக்கில் வணிக பொருளாகவும் மாறியது.
பிறகு இந்த பழக்கம் அங்கிருந்து கிறிஸ்டோபர் கொலம்பஸ் மூலமாக ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு பரவி இன்று உலகம் முழுவதும் முற்றிலும் ஒழிக்கமுடியாத விஷமாக மாறியுள்ளது. ஆனால் இந்த புகையிலை முறை நவீனமாகி சிகரெட் எனும் வடிவம் பெற்றது என்னவோ 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கியூபா நாட்டிலும், கரீபியன் தீவு போன்ற நாடுகளிலும்தான். கஞ்சா புகையில் ஆரம்பித்து, மெதுவாகச் சுருட்டு வடிவெடுத்து, பின் சோளமாவில் சுருட்டப்பட்டு, பின் பேப்பரில் சிகாராக இலைகள் மட்டும் சுருட்டப்பட்டு, இப்போது மெல்லிய பேப்பரில் பில்டர் செய்யப்பட்ட புகையிலை தூளாக இந்த வஸ்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த உலகம் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பழக்கமும் நன்மையா? தீமையா? என்பது முற்றிலும் நிரூபணமாக பல நாட்கள், பல ஆண்டுகள் ஆகும். அப்படித்தான் இந்த புகையிலை பழக்கமும் மிகவும் கொடிய விளைவுகளை தரும்
என்ற உண்மை அறிவியல் முறைப்படி நிரூபணமாக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது. 20 நூற்றாண்டிற்கு பிறகுதான் இது ஆபத்தானது என்பது கண்டறியப்பட, உலக நாடுகள் அனைத்தும் புகையிலையை ஒழிப்பதில் தீவிரம் காட்டினாலும் இன்று வரை முற்றிலும் ஒழிக்கப்படமுடியாத ஒரு பழக்கமாக மாறிவிட்டது புகையிலை பழக்கம்
ஒருபக்கம் தனிமனித உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்பதைத் தாண்டி அது அருகிலிருப்பவர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை. அதேபோல் சுற்றுசூழலில் புகையிலை கழிவுகள் ஏற்பத்துடும் பாதிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு சிகரெட்டில் நிக்கோடின், கார்பன் மோனாக்சைட், தார் என 4000க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளது. இதனால் புற்றுநோய், பக்கவாதம், வாய்கட்டி போன்ற மோசமான உயிர்க்கொல்லி நோய்கள் புகைப்பவரை தாக்கும் என்பதும் எப்போதோ நிரூபணமான ஒன்று.
பெரும்பாலான மக்களுக்கு புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பது தெரிந்திருந்த போதும், புகையிலையினால் உண்டாகும் தீமையின் அளவு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை எனலாம். புகையிலை நிறுவனங்கள், புகையிலைப் பெட்டிகளை, பொட்டலங்களை அழகாக, வசீகரமாகத் தயாரித்து வழங்குவதன் மூலமும் வித்தியாசமான விளம்பர உத்திகள் பலவற்றின் மூலமும் புகையிலை விற்பனையைப் பெருக்கி, உடல் நலத்திற்கு புகையிலை உண்டாக்கும் தீமைகளை மக்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு திசை திருப்புகின்றன என்கிற குற்றச்சாட்டுக்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையே. .
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, 1950-ம் ஆண்டிலிருந்தே மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மக்களுக்கு விளக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதனுடைய விளைவுகள் பற்றி தெரிந்தாலும், புகைப்பதை பெரும்பாலானோர் கைவிடுவதில்லை.
அதனால்தான், பெரும்பாலான உயிர்கள் பறிபோகின்றன, புற்றுநோய்க்கு முதல் காரணமாக இருப்பது புகையிலைதான். மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் இரண்டாம் இடம் வகிக்கிறது புகையிலைப் பயன்பாடு. புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, ‘கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்’ என்பதுதான். ஒரு நிமிடத்துக்குள்
ஆரம்பித்த புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட வைராக்கியம் தேவை.
அதுதான் சிகரெட்டிலிருந்து விடுபட முதல்படி. சிகரெட்டினால் சீரழிந்திருக்கும் நம்முடைய உடலை யோகா, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் மீட்டு எடுக்கலாம். பொருளாதாரரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்கப் புகைப்பதை கைவிடுவதே சிறந்த வழி.
467 total views, 9 views today