சின்னச் சின்ன ஆச்சரியங்கள், பெரிய பெரிய ஆனந்தங்களின் அடிப்படை!

17ம் பக்கம் இந்த தலைப்பு

அடுத்தவர் விருப்பங்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஒரு இனிய ஆச்சரியம் !

  • சேவியர் தமிழ்நாடு.

வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை.

வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள் ஆளாளுக்கு தூபம் போட்டார்கள். அவருக்கு வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ, அலுவலகத்துல கனெக்ஷன் இருக்குமோ, உன்னைப் பிடிக்காம போயிருக்குமோ என ஏராளம் “மோ, மோ, மோ” என பேசி அவளுடைய நிம்மதியையே கெடுத்து விட்டார்கள். இறுக்கம் இருவருக்கும் இடையே இருந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தது.

அந்த நாள் வந்தது !! இதுக்கும் மேல பொறுக்க முடியாது, ரெண்டுல ஒண்ணு பாத்துடணும். சும்மா விடப் போறதில்லை. அவரு வரட்டும் என வசந்தி காத்திருந்தாள். மாலையில் ஆனந்த் வந்தான். தனது கோபத்தைக் கொட்ட வேண்டுமென எழுந்த வசந்தி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே கையில் இருந்த ஒரு சின்ன பார்சலை அவளிடம் நீட்டினான்.

என்னங்க இது ?
கடைக்குப் போயிருந்தேன், இந்த வாட்சைப் பாத்தேன். உன் கைக்கு சூப்பரா இருக்கும்ன்னு தோணுச்சு அதான் வாங்கினேன். எனக்கா ?
உனக்கில்லாம வேற யாருக்கு நான் வாங்க போறேன்டா ? ஆனந்த் குரலில் நேசம் குழைத்தான்.
ரொம்ப நல்லாயிருக்கு.

தேங்க்ஸ். உங்கிட்டே ஒரு கிரீம் கலர் சாரி இருக்கில்ல, மயில் படம் எல்லாம் பார்டர்ல வருமே, உனக்கு எடுப்பா இருக்குமே ஒரு சாரி, அதுக்கு இந்த வாட்ச் ரொம்ப நல்லா இருக்கும். ஆனந்த் சொல்ல வசந்தி கண்கலங்கினாள். அவரை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள்.

சாரிங்க.. கொஞ்ச நாளாவே, நாம சரியா பேசல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆமா.. நான் தான் சாரி சொல்லணும். வேலை டென்ஷன்ல வீட்டையே கவனிக்க முடியாம ஆயிடுச்சு. இனிமே அதெல்லாம் கம்மி பண்ணிக்கணும். ம்ம்ம்… சரி வா.. வெளியே போய் ஒரு காஃபி சாப்டு வரலாம். ஆனந்த் சொல்ல, இது வரை இருந்த மன இறுக்கம், பிணக்கு, விரிசல் எல்லாம் சட்டென மறைய மகிழ்ச்சியுடன் உள்ளறைக்குப் போனாள் வசந்தி. சில்மிஷ விரல்களோடு ஆனந்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சின்னச் சின்ன இனிய ஆச்சரியங்கள் தான் குடும்ப வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இதை அனுபவசாலிகள் சட்டென ஒத்துக் கொள்வார்கள். புரியாதவர்களுக்கு ஒரு புதிராக இருக்கும். வசந்தி எதிர்பாராத நேரத்தில் ஆனந்த் கொடுத்த அந்த சின்னப் பரிசு ஒரு கசப்பான சூழலை சட்டென இனிப்பாக மாற்றியது. தாம்பத்ய வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்.

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த கிரியேட்டிவ் விஷயங்கள் காதலர்களுக்கு உச்சத்தில் இருக்கும். என்ன பரிசு கொடுக்கலாம். எப்படி நம்ம ஆளை இம்ப்ரஸ் பண்ணலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள். அதுக்குத் தக்கபடி நிறைய பரிசுகள், எதிர்பாராத இனிய நிகழ்வுகள் என அசத்துவார்கள்.

காதலி, காதலன் சார்ந்த எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். “நம்ம ஆளு இருமின நாள் இது”, ‘என் ஆளு குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் இது’ என சர்வ தினங்களையும் மனசில் கல்வெட்டாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் எத்தனை மணி, எந்த நிமிடத்தில், என்ன நடந்தது என்பதைக் கூட மனசில் கொத்தி வைப்பார்கள். அதனால் தான் காதல் காலம் எல்லாருக்குமே ஒரு உற்சாகத்தின் அருவியாய் ஓடிக் கொண்டே இருக்கும்.

கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடும். பிறந்த நாளே கூட மறந்த நாளாகிப் போகும். “முன்னாடியெல்லாம் நம்மாளுக்கு நம்ம மேல கரிசனை அதிகம். இப்பல்லாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்” என கணவனும், மனைவியும் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ! அதற்கு என்ன செய்யவேண்டுமெனும் கேள்விக்கு, ‘பிறந்த நாள், திருமண நாள் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து பரிசு கொடுக்க வேண்டும், வாழ்த்து சொல்ல வேண்டும்’ என நீங்கள் சொன்னால் நீங்கள் சாதாரண தம்பதி ! அதைக் கூட சொல்லவில்லையென்றால், நீங்கள் கிளீன் போல்ட் கேஸ், என்பது வேறு விஷயம். ஆனால் அதைத் தாண்டி நிறைய இருக்கிறது !

எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள். அது தான் ரொம்ப முக்கியம். அது பல விதங்களிலும் இருக்கலாம். உங்களுடைய ரசனை, வசதி, விருப்பம் என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆச்சரியங்கள் உருவாகும் என்பது தான் சுவாரஸ்யம்.

ஒரு சனிக்கிழமையோ, ஓய்வாய் இருக்கும் ஒரு நாளிலோ ஒரு சின்ன விசிட் அடியுங்கள். கொஞ்சம் தூரத்தில் ஏதோ ஒரு பீச் ரெசார்ட், அல்லது ஒரு மலையோர கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்கள் ரொம்ப சவுகரியம். ஏற்கனவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு போய் வாருங்கள் ! மீண்டும் ஒரு காதல்; பயணம் ஆரம்பிக்கும்.

ஒரு நாள் காலையில் உங்கள் மனைவி எழும்பும் முன்பே எழுந்து பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி விட்டு மனைவியை எழுப்பிப் பாருங்கள். ஒரு சேஞ்சுக்காக நான் உனக்கு சமைச்சு வெச்சிருக்கேன், சாப்பிட்டு பாரு என ஒரு ஆச்சரியம் கொடுங்கள். உங்களுடைய சமையலின் ருசி எப்படி என்பதல்ல முக்கியம். உங்களுடைய கரிசனை மனைவியை நெகிழச் செய்யும் !

ஒரு குட்டிக் கவிதை, ஒரு சின்ன லவ் லெட்டர், ஒரு சின்ன மின்னஞ்சல் படம், உங்கள் காதலைச் சொல்ல, உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள. இப்படி ஏதாவது யோசித்துச் செய்யுங்கள். “நீ என் வாழ்க்கையில் வந்தது இறைவனின் வரம். என் கடின நேரங்களில் உன் அன்பை நினைக்கும் போது தான் மனம் லேசாகிறது” என உங்கள் ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் உறவு மேம்படும்.

ஒரு மாலை வேளையில், அல்லது மதிய வேளையில் உங்கள் மனைவியுடன் அமர்ந்து ஒரு நல்ல ரொமான்டிக் மூவி பாருங்கள். நல்ல டிவிடி வாங்கி வந்து பாருங்கள். கொறிப்பதற்கு உங்கள் மனைவியின் ஃபேவரிட் ஐட்டம் ஒன்றை தயாராக்கி வைத்திருக்க வேண்டியது தான் ஹைலைட். அருகருகே அமர்ந்து சிரித்துக் கொண்டே, பாருங்கள், காதல் தழைக்கும் !

சேலைகட்டும் போது ஊசி குத்திவிடுவதில் இருந்து, சில சில்மிஷ விளையாட்டுகள், வரவேற்பறை சமையலறை என பழைய காதலுடன் நெருக்கமாய் இருக்கும் தருணங்கள் என மூச்சுக் காற்றை வெப்பமாக்குங்கள். காதல் தாவரம் மூச்சுக் காற்றில் சடசடவென வளரும், மோகத் தீயில் அது மொட்டுகளை சட்டென மலர்த்தும். எதிலும் போலித் தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்.

உங்களுடைய செல்போனை ஒரு நாள் மறந்து விட்டு சும்மா அமர்ந்து பேசுங்கள். பழைய கதைகளை, அலுவலக சுவாரஸ்யங்களை, பேசுவதும் கேட்பதும் இனிமையான தருணங்கள். அவை காதலை வளரவைக்கும் நிமிடங்கள்.

கட்டிப்புடி வைத்தியம் ரொம்ப நல்லது ! போயிட்டு வரேன்னு சொல்றதானாலும் சரி, காலைல குட்மார்ணிங் சொல்றதுன்னாலும் சரி, ஒரு 2 நிமிட கட்டிப்புடி வைத்தியம் மனசை லேசாக்கும், உறவை மேம்படுத்தும்; என்பது உண்மை !

உங்கள் வாழ்க்கைத் துணைவருடைய பழைய புகைப்படங்கள் கொஞ்சம் எடுத்து ஒரு ஆல்பமாகவோ, ஒரு கொலாட்ஜ் ஆகவோ செய்து ஒரு நாள் அவரிடம் கொடுங்கள். “பழைய நாட்களெல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் இதைப் பண்ணினேன்” என்று. சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் இருக்கும் !

கணவனுக்கோ, மனைவிக்கோ இருக்கக் கூடிய நட்பு வட்டாரத்தை மதியுங்கள். ஒரு நாள் திடீரென, நண்பர்களைப் போய் பாருங்க, அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என அனுமதி கொடுங்கள். அடுத்தவர் விருப்பங்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஒரு இனிய ஆச்சரியம் !

உங்கள் சிந்தனைக் குதிரையை வரிக்குதிரையாக வலம் வரச் செய்யுங்கள். காதல் வானில் வானவில்களுக்குப் பஞ்சமே இருக்காது !மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துகிறேன், சின்னச் சின்ன ஆச்சரியங்கள், பெரிய பெரிய ஆனந்தங்களின் அடிப்படை. அனைத்தையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யவேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

464 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *