இனி உங்கள் எண்ணங்களை டிஜிட்டல் உலகம் நகர்த்தும்!
னுச.நிரோஷன்.தில்லைநாதன் – யேர்மனி;
உங்கள் எண்ணங்களுடன் உங்கள் iPhழநெஐ இயக்க அல்லது இணையத்தில் உள்ள தளங்களை அலசி ஆராய முடியும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
இது ஓர் அறிவியல் புனைவு திரைப்படத்தின் காட்சி அல்ல இது ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் எனப்படும் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் ஆகும். 2016 ஆம் ஆண்டு ரகசியமாகத் தொடங்கப்பட்ட நியூராலிங்க், மனித உணர்வுகளுடனும், எண்ணங்களுடனும் எந்திரங்கள், கணினிகள் மேலும் வேறு தொழினுட்பங்களை இயக்குவது மட்டுமல்லாமல் இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2017 இல் ஒரு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின் மூலம் நியூராலிங்க் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்குள்,ஈலோன் மஸ்க் இந்தத் தொழில்நுட்பத்தை, குறிப்பாக ஒரு நாணயத்தைப் போன்ற சிறிய சிப் (Chip) ஒன்றை, ஒரு நேரடி நிகழ்ச்சியில் காட்டினார். இந்தச் சிறிய சிப், காதின் பின்னால் பொருத்தப்பட்டு, மூளையுடன் இணைக்கப்பட்ட சிறிய கம்பிகள் மூலம் மூளை செயல்பாட்டைக் கண்காணிக்க மற்றும் மூளையுடன் தொடர்பிலுள்ள உதவும்.
2024 ஜனவரியில் இந்த நிறுவனம் இந்தத் தொழினுட்பத்தை அடுத்த படிக்குக் கொண்டு சென்றது. நோயாளி ஒருவர் இவ்வாறான ஒரு நியூராலிங்க் சிப் ஒன்றைத் தனது மூளைக்குள் பொருத்துவதற்கு அனுமதி கொடுத்து, அதைப் பெற்றும் விட்டார். இதன் பலன்கள் தான் என்ன தெரியுமா? புரட்சிகரமான மருத்துவ முன்னேற்றங்களும் அதை விட மனிதர்களும் இயந்திரங்களும் இடையேயான புதிய எல்லையும் ஆகும்.
நியூராலிங்க் தொழில்நுட்பத்தின் பயணம் ஆய்வகங்களிலிருந்து உயிரினங்களுக்குப் பன்றி ஒன்றின் பெயரில் தொடங்கியது. ஒரு சோதனையில், ஜெர்ட்ருட் என்ற பன்றியின் மூளை செயல்பாட்டை நேரலையில் ஒளிபரப்பினர், அது பன்றியின் நகர்வுகளைக் கணிப்பதற்கான சிப்பின் திறனைக் காட்டியது. இந்த ஆரம்பச் சோதனை மேலும் துணிச்சலான சோதனைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக இதில் ஒரு குரங்கு, தன்னுடைய எண்ணங்களால் மட்டுமே வீடியோ விளையாட்டுகளை விளையாடியது.
ஆனால் இவ்வாறான ஒரு சிப்பினை ஏன் மனித மூளையில் பொருத்த வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மை தான் என்ன? உடல் செயல்பாட்டை இழந்த நபர்கள், தம்முடைய எண்ணங்களின் மூலம் மட்டுமே டிஜிட்டல் சாதனங்களை இயக்க உதவும் என்பதே இதன் பலன்களில் ஒன்றாகும். உதாரணத்திற்கு முதுகெலும்பு காயங்களுக்குள்ளானவர்கள் தமது கை கால்களை இயக்க முடியாத நிலையில் காணப்படுவார்கள். இவ்வாறான சிப்பின் ஊடாக அவர்கள் டிஜிட்டல் சுதந்திரத்தை மீண்டும் பெற முடியும். அதாவது எண்ணங்களின் ஊடாக கணினியை இயக்கி மற்றவர்களுடன் கூட தொடர்புகொள்ளமுடியும்.
நியூராலிங்க்கின் அறிவியல் என்னவென்றால் மூளையில் உள்ள தரவை மிகச் சிறந்த சிப் மூலம் கணினிகளுக்கு அனுப்புவதே ஆகும். இந்தச் சாதனங்களை நிறுவுவதற்கு உதவும் ஒரு ரோபோடிக் அமைப்பு லேசிக் அறுவை சிகிச்சையைப் போன்ற துல்லியத்துடன் சிப்பை நிறுவ வடிவமைக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் வல்லுநர்களில் சிலர் இந்தத் தொழினுட்பத்தை மிகவும் போற்றுகின்றனர், மற்றவர்கள் நரம்பியல் விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டுள்ளனர். எனினும், இந்தத் தொழினுட்பம் பார்க்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற கடுமையான நரம்பியல் வியாதிகளை எதிர்காலத்தில் ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க உதவும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மேலும் இத்தகைய தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆட்டிசம் போன்ற நிலைகளை “தீர்வு” செய்வதற்கும் உதவும் என்பதே மஸ்க்கின் நம்பிக்கையாகும்.
ஈலோன் மஸ்க்கின் நீண்ட காலக் கனவு, மருத்துவப் பயன்பாடுகளைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவுடன் மனித மூளையை இணைப்பதாகும். நியூராலிங்க்கை மனித அறிவுத் திறன்களுக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட அமைப்புகளுக்கும் இடையேயான பாலமாகக் காண்கின்றனர்.
நியூராலிங்க் வெறும் ஒரு தொழினுட்ப முயற்சி மட்டுமல்ல் இது மனிதர்களும் தொழில்நுட்பமும் இடையேயான ஒரு புதிய தொடர்பாகக் கருதப்படுகிறது.
நாம் மனித உணர்வுகளை இயந்திரங்களுடன் இணைப்பதற்கான தருணத்தில் நிற்கிறோம். இதன் விளைவு என்ன? இதனால் ஏதும் எல்லைகளை மீறுகின்றோமா? இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் போது, அது நமது வாழ்க்கையை, நமது மருத்துவத்தை, மற்றும் மனித மனதைப் புரிந்துகொள்ளும் விதத்தையே மாற்றி அமைக்கும். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
இவ்வாறான சிப் ஒன்றை உங்கள் மூளையில் பொருத்த விடுவீர்களா?
437 total views, 3 views today