உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்!
உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்!
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை..!
“உங்களுக்கு பிடித்த இந்திய நடிகர் யார்” என்று மோகன்லாலிடம் கேட்டபோது டக்கென சொன்னது எம்ஆர். ராதாவின் பெயரைதான்! அந்த காலத்தில், சாமி படத்தை காட்டி சாம்பிராணி புகை போட்டு தான், நாடகங்களை ஆரம்பிப்பது வழக்கம்..! ஆனால் முதன்முதலில் ‘தமிழ்த்தாய்” வாழ்த்து பாடி ஆரம்பித்து வைத்தவர் எம்.ஆர்.ராதா அவர்கள்தான்!
நாடகம் என்பது வெறும்பக்தி, காதல், புராணம் என்றிருந்ததை, பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை அள்ளி தெளித்தது ராதாதான்..!
“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்… சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறான்… உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளை பிரதேசம்னா அது சினிமா ஒன்னுதான்” என்று பொதுமேடையிலேயே முழங்கியவர்..!
ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்ஏபி “ஐயர்” என்பவர் தலைமை தாங்கியிருந்தார்… முன்வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும் பார்த்து கொண்டிருந்தார்..!
அதில் ஒரு காட்சியில், “உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?” என்று ராதாவை பார்த்து ஒருவர் டயலாக் பேசுவார். அதற்கு ராதா, “பார்ப்பான் பார்ப்பான்” என்றாராம் சத்தமாக.
அதேபோல, கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, “பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே… நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே…” என்று ஆரம்பித்தார்.
அப்போது, ஒருவர் குறுக்கிட்டு, ‘அய்யா… கம்பர் நாடாரு இல்ல..’ என்றார்.
‘நாடார் இல்லயா… நம்மாளு போலருக்கு, இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்…’
‘அய்யா… அவரு முதலியாரும் இல்ல…’ என்றார்.
‘முதலியாரும் இல்லயா சரி… என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்…’
‘அய்யா… அவரு அய்யரும் இல்ல…’
‘என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா… அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா… அப்ப ஜாதி கிடையாதா…
சரி தான், இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே…” என, ராதாவின் அந்த பேச்சு தொடர்ந்தது..!
இப்படி எம்.ஆர்.ராதா முற்றிலும் முரண்பாடுகளால் நிறைந்தவர்.. ஆனால் வாழ்வின் மறுபக்கமோ நெகிழ்ச்சியாலும் பேரன்பாலும் பெருங்கருணையாலும் நிறைந்தது..!
“பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு.. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான்.. அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காதே.. அது ரொம்ப அசிங்கம்.. அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே.. நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.. அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே.. அசிங்கம் அவமானம்” என்றார்.
பெரியாரின் இயல்புக்கும், ராதாவின் இயல்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. பெரியார் சுமந்த அத்தனை பழி, பாவங்களும் இவர் மீதும் சுமத்தப்பட்டன.ராதாவின் நாடகங்கள் லட்சக்கணக்கான மக்களை தட்டியெழுப்பின.. அவற்றின் காட்சிகளும் கூரான அம்பு போன்ற வசனங்களும் இந்தியாவுக்கு அப்பாலும் பாய்ந்து சென்று விழுந்தன..!! சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்து சொன்னவர் ராதா..! திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு, தமிழக வரலாற்றை யாரும் எழுத முடியாது.. அப்படி மீறி எழுதவும் யாருக்கும் துணிச்சல் வராது..!
466 total views, 3 views today