கவிநாயகர் கந்தவனம் அவர்களின் நினைவேந்தல் விழா!

-இரா.சம்பந்தன் (கனடா)
கனடிய மண்ணிலே தன் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாது தமிழினத்து ஆடவரும் பெண்டிரும் சிறார்களும் மகிழ்வோடு வாழப் பாடுபட்ட ஒரு மனிதர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள். தனது எழுத்தாலும் பேச்சாலும் சமயப் பணியாலும் கனடியத் தமிழுலகை மட்டுமல்ல பிற புலம்பெயர் தமிழ்த் தேசங்களையும் செழுமைப்படுத்தி மறைந்த அந்த மாமனிதனுக்கு 2.6.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை ஸ்காபுரோவில் குரும்பசிட்டி நலன்புரி சபை ஒரு நினைவேந்தல் நிகழ்வினையும் தாய்வீடு பத்திரிகையில் தொடர்ச்சியாக கவிஞர் எழுதிவந்த இலக்கிய உறவுகள் என்ற நூல் வெளியீட்டினையும் ஒழுங்கு செய்து தனது நன்றியை அறிவித்துக் கொண்டது அவரின் துணைவி தவமணி குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமல்ல.

குரும்பசிட்டி நலன்புரி சபை நெல்லுக்கு இறைத்தநீர் வாய்கால் வழியோடிப் புல்லுக்குப் பொசிந்து விடாமல் மிகவும் கவனமாக நல்ல பல சேவைகளை ஆற்றக்சுடிய தொண்டர்களைத் தன்னகத்தே கொண்ட இயக்கம். அது நல்லவர்கள் என்று கைகாட்டியவர்கள் யாரும் தாழ்ந்து போனது கிடையாது. . அத்தகைய நடுநிலை வாய்ந்த அந்தச் சபை ஏகமனதாக எழுந்து நின்று கவிஞர் படத்துக்கு மலர்தூவி அங்சலி செலுத்தியது என்றால் கவிஞரின் பெருமை எவ்வளவு செறிவானது என்று புரிந்து கொள்ள முடியும்.

கடவுள் வாழ்த்தும் தமிழ்மொழி வாழ்த்தும் கவிஞர் மொழிபெயர்த்த கனடிய தேசிய கீதம் என்ற சம்பிரதாயங்களை சாக்சவி திலீபனை வைத்து முடித்துக் கொண்டு கணேஸ்வரி குகனேசன் அவர்களின் வரவேற்பு உரைக்கு வழிவிட்டது நிகழ்ச்சி நிரல். அடுத்து குரும்பசிட்டி நலன்புரி சபையின் தற்போதைய தலைவரான ஐயாத்துரை nஐகதீஸ்வரன் அவர்கள் தமது தலைமை உரையை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நுணாவிலூர் சமூக செயற்பாட்டாளர் வி.எஸ்.துரைராசா முன்னைநாள் குரும்பசிட்டி நலன்புரி சபைத் தலைவர் செ.அசோகமூர்த்தி சுகவீனம் காரணமாக சமூகமளிக்க முடியவில்லை என்ற காரணத்தால் முன்நாள் தலைவரான க.சிவதாசன், கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் முன்னைநாள் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் வீணை மைந்தன் சி.சண்முகரா எழுத்தாளர் இரா.சம்பந்தன் ஆகியோர் இரங்கல் உரைகளை ஆற்றினர்.

இலக்கிய உறவுகள் நூல் வெளியீட்டு நிகழ்வில் ரொரன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சந்திரகாந்தன் பிரபல எழுத்தாளர் குரு.அரவிந்தன் குரும்பசிட்டி நலன்புரி சபை நிர்வாக உறுப்பினர் வாணி சிவராஐன் பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இறுதியாக தாய்வீடு பிரதம ஆசிரியர் பி.ஜே.டிலீப்குமார் அவர்கள் கவிநாயகரின் இலக்கிய உறவுகள் என்ற நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். பிரபல எழுத்தாளர் எஸ். ஜெகதீசன் அவர்கள் முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ள அதனைத் தொடர்ந்து சபையோர் நீண்ட வரிசையில் நின்று நூலைப் பெற்றுக் கொண்டணர்.
விழாவிலே கவிஞரின் பிள்ளைகளான கந்த வாரணனும் வாணியும் துணைவியார் தவமணியும் மற்றும் குடும்ப உறவினர்களும் குரும்பசிட்டி நலன்புரிச் சபை உறுப்பினர்கயோடு இணைந்து வருகை தந்தோர் அனைவரையும் அனைவரையும் வரவேற்று அமரவைத்து உபசரித்த பாங்கானது பிறருக்கு அன்பும் மரியாதையும் காட்டுவதில் அப்பாவுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று சொல்வதைப் போல இருந்தது.மாறுபட்ட கொள்கைகள் வேறுபட்ட தளங்கள் என்று பிரிந்து நின்று கனடாவில் எழுத்துப்பணி பொதுப்பணி செய்துவரும் பலரை குரும்பசிட்டி நலன்புரி சங்கமும், கவிநாயகர் குடும்பமும் இரு கரைகளைகளாக நின்று கொண்டு அன்றைய தினம் தங்களின் நடுவே நதியாகக் இணைந்து நடக்கச் செய்த இந்த விழாவும்; இலக்கிய உறவுகள் என்ற தூல் வெளியீடும் கவிநாயகர் கந்தவனம் அவர்களின் இலக்கிய வாழ்வுக்கு மற்றுமொரு சான்றாக என்றும் நிலைத்திருக்கும்.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறுவித் தாம் மாயந்தனரே!

275 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *