“சூரரைப் போற்று”
குரு பேராசிரியர் பத்மபூஷன் சந்திரசேகர் ஐயாவின் 85 ஆவது பிறந்த தினம் அன்று ஆரம்பிக்கப்பட்ட உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காவது நிறைவு விழா பிரம்ம கமலம் 2024, 22.05.2024 அன்று இணைய வழியினூடாக நடைபெற்றது.
இச் சங்கத்தின் வருடாந்த ஆண்டு நிறைவானது கலைத்துறையில் மிகச் சிறந்த சேவையாற்றிய மகா குருமாரை வணங்கி கௌரவிக்கும் நிகழ்வாக அமைந்து வருகிறது. அந்த வகையில் முதலாம் வருடம் பத்மபூஷன் குரு சந்திரசேகர் அவர்களுக்கும், இரண்டாம் வருடம் பத்மஸ்ரீ குரு அடையார் லக்ஷ்மணன் அவர்களுக்கும், மூன்றாம் வருடம் பத்மபூஷன் குரு தனஞ்சயன் , சாந்தா தனஞ்சயன் அவர்களுக்கும் கௌரவித்து விழா நடாத்தினோம். இந்த வருடம் நான்காம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக அண்மையில் இந்திய உயர் விருது பெற்ற “பத்மவிபூஷன்” குரு பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்காக அமைந்திருந்தது.
பூரண பதுமத்தின் பெரும் பெயர் பொழிய , மொழிந்திட இயலா ஆடல் இறைவியைத் தரிசிக்கும் நற்பேறு இன்றைய தலைமுறையினருக்கு நல்கிடும் வகையில் அமையப்பெற்ற பிரம்ம கமலம் 2024 நிகழ்வில் ” பத்மவிபூஷன் ” முனைவர் பத்மா சுப்ரமணியம் அம்மா அவர்களைக் கண்டு , அவர்களின் மந்திரச் சொற் களைக் கேட்டு வாழ்த்திப் பணிந்து களி கொண்டோம்.
இந்த நிகழ்வு இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. ஒன்று பத்மா சுப்பிரமணியம் அம்மாவின் இலங்கை விஜயங்கள் பற்றியதாகவும், இரண்டாவது அவரிடம் பயின்ற இலங்கை மாணவிகளின் கருத்துப் பகிர்வாகவும் அமைந்திருந்தது.
இலங்கையில் கொழும்பு கம்பன் கழகத்தின் அழைப்பில் வருகை தரும் போது ” கம்பன் புகழ் ” உயர் விருதளித்து மகிழ்ந்த அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் ” கம்பவாரிதி ” ஜெயராஜ் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். அதில் ராமாயணத்திற்கு பலர் விளக்கவுரை வழங்கி இருந்தாலும் நாட்டிய உரை எழுதிய பெருமை பத்மா அம்மாவையே சாரும் என்று வாழ்த்திப் பணிந்தார்.
இலங்கையில் பத்மா சுப்பிரமணியம் கலந்து சிறப்பித்த மற்றுமொரு முக்கிய நிகழ்வாக நாட்டியமயில் போட்டி நிகழ்வினைக் குறிப்பிடலாம். ஒருமுறை யாழ்ப்பாணத்திலும், ஒரு முறை கொழும்பிலும் இந்நிகழ்விற்கான அவர் வருகை இருந்தது. அச்சமயம் அகில இலங்கை ரீதியில் உள்ள நடன ஆசிரியர்களுக்கு கொழும்பில் பயிற்சிப் பட்டறை நடாத்தி தனது நேரடிப் பார்வையில் சிறந்த நடனக் கலைஞரைத் தெரிவு செய்து ” அகில உலக பத்மா சுப்பிரமணியம் ” விருது வழங்கி கௌரவித்தார். இவ்விருதினை பெற்றுக்கொள்ளும் பெரும் பேறினை இறையருளால் அம்மாவின் கரம் தொட்டு பெற்றுக்கொண்ட நெகிழ்வினை இன்னும் எண்ணி வியக்கிறேன்
யாழ்ப்பாணத்தில் இவ்விருதினைப் பெற்று முனைவர் பட்டத்தினை பத்மா அம்மா வழிகாட்டலில் நிறைவேற்றிய யாழ் பல்கலைக்கழக மேனாள் நடனத் துறைத் தலைவர் முனைவர் அருட்ச்செல்வி கிருபைராஜா அவர்களும் , டென்மார்க் கீதாலயா இயக்குனர் திருமதி கிரிஷ்ணப்ரியா சத்தியமூர்த்தி கோபி நேசன் அவர்களும் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் கற்பித்தல் பற்றி அறியத் தந்தார்கள். இலங்கைக் கலைஞர்களான சிங்கப்பூர் அப்சராஸ் கலையக கலை இயக்குனர் திரு அரவிந் குமாரசுவாமி, படைப்பாக்க இயக்குனர் திரு மோகனப்ரியன் தவராஜா ஆகியோர் பத்மா அம்மா அவர்களிடம் பணி புரிந்த அனுபவத்தினையும், அவரது ஆய்வின் செறிவினையும் தமது உரையில் முன் வைத்தனர்.
பத்மா சுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தினர் நிருத்யோதயா செயலாளர் திரு கண்ணன் பாலகிருஷ்ணன் , அதிபர் முனைவர் காயத்ரி கண்ணன் , நடன ஆசிரியர் திருமதி மகதி கண்ணன் ஆகியோர் பத்மா அம்மாவுடன் இருப்பதைத் தம் பிறவிப் பயன் என்று கூறிக் கண்ணீர் மல்கி உரையாடினர்.
நிகழ்வின் நிறைவில் இருபது நிமிட உரையினை வழங்கி அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார் பத்மா சுப்ரமணியம். அத்தோடு அடுத்த ஆண்டு நிகழ்வு சென்னையிலும், இலங்கையிலுமாக நேரடியாக அமைக்க வேண்டும். இலங்கை இந்திய கலைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சங்கத்தின் செயலாளர் நிறைஞ்சனா சுரேஷ் அவர்கள் லண்டனில் இருந்து இணைந்து கொண்டு, இந்த நிகழ்வினை சிறப்பிக்க வருகை தந்த கலைஞர்களுக்கும், பதினேழு நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த சங்கத்தின் அங்கத்துவ கலைஞர்களுக்கும், நிகழ்விற்கான அனுசரணை வழங்கிய கீதாலயம் டென்மார்க் நடனப்பள்ளிக்கும், ஊடக அனுசரணை வழங்கியோர்க்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடக்கவுரை ஆற்றிய பேராசிரியர் முனைவர் மௌனகுரு அவர்கள் “உடலால் வெளியில் ஓவியம் வரைபவள் ” என்று பத்மா சுப்பிரமணியத்தை பற்றிய கவிதை படித்து , அவருடனான தன் உறவை சொல்லி வாழ்த்தியதோடு, குருவை அதி உயர்ந்த இடத்தில் போற்றும் பண்பாடு மிக்க இந்த சங்கத்தை மனதார வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் இருக்கின்ற இலங்கைக் கலைஞர்கள் ஒன்றாக செயற்படுவது என்பது மிகவும் முக்கியமான விடயம். நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்தியதோடு , அறுபது நடன ஆசிரியர்களை நேர்கண்டு ஆவணப்படுத்தியுள்ளது . இந்த சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து வளர வேண்டும் என்று நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வருகை தந்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அநிருத்தன் அவர்கள் உரையாற்றினார். இந்திய- இலங்கை கலை உறவின் பாலமாக செயற்படும் இந்த சங்கத்தினை பாராட்டுகிறேன். கலைஞர்கள் மட்டுமல்ல , கலை வடிவங்களும் சங்கமிக்க வேண்டும் என்று முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுவாமி விவேகானந்த கலாசார மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் முனைவர் அங்குரான் தத்தா அவரகள் தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் நிறுவன செயலாளர் திரு சேகர் அவர்களும், பாரத் காலாச்சார் கலாசார ஆலோசகர் லு.பு மதுவந்தி அவர்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். பத்மா சுப்ரமணியம் அவர்களின் மனித நேயம் பற்றி மதுவந்தி அவர்கள் தெரிவிக்க , அவரது இசை நுட்பம் பற்றி சிரேஷ்ட மாணவி முனைவர் ஜெயஸ்ரீ ராஜகோபாலன் அவர்கள் மும்பையில் இருந்தும் அவர் புதல்வி வைஷ்ணவி ஆனந்த் அவர்கள் சிங்கப்பூரில் இருந்தும் கலந்து பகிர்ந்து கொண்டார்கள்.
பத்மா சுப்பிரமணியம் அவர்களின் ஆடல், இசை நுட்பம், ஆய்வு, நாட்டிய சாஸ்திர கர்ணங்களில் அவரது பங்களிப்பு என பல கோணங்களில் கலந்துரையாடப்பட்ட ப்ரம்மகமலம் 2024 நிகழ்வு கௌரவ நிகழ்வாக மட்டும் இல்லாமல் அறிவு சார்ந்த அனுபவ நிகழ்வாகவும் அமைந்தது.
319 total views, 6 views today