வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரன் ! யாரும் அவருக்கு எதிரியல்ல,யாருக்கும் அவரும் எதிரியல்லர்.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
1990ம் ஆண்டு முதன் முதலில் யேர்மனியில் இவரைச் சந்தித்தேன். அப்போது நான் கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்தேன்.பாடசாலை போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக கடமையாற்றும்படி அழைப்பு விடுத்தோம்.எந்த மறுப்பும் சொல்லாது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாகச் செயல்பட்டுத் தந்தார்.
உதவியென்று கேட்டால் மறுப்பேதும் சொல்லாது செயல் படக் கூடியவர். இவர் ஒரு கடின உழைப்பாளி.அவரது வட்சப்பிற்கு ஏதாவது குறுஞ்செய்தி அனுப்பினால் எந்த நேரம் என்றாலும் பதில் வரும்.அது சாமம் என்றாலும் பரவாயில்லை.
இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.அவ்வாறே நான் இவரை அழைப்பதுண்டு.ஒரு சிரிப்புடன் கடந்து செல்வார்.அவர் சுற்றும் உலகத்தில் கலைநயம் தெரியும்,நல்ல காட்சிகள் விரியும்.அந்தந்த நாட்டைப்பற்றிய வரலாறு வெளிவரும்.
அவர் முதுகில் சுமந்து செல்லும் பயணப் பையில் எப்போதும் கமரா இருக்கும்.அவர் மனம் விரும்பும் காட்சிகளை படமாக்கி மகிழ்வார்.அவர் மகிழ்வதை நாம் ரசிக்க பதிவுகளாக்கித் தருவார்.
அவை பலவடிவங்களில் கதையாக,கட்டுரையாக குறுஞ்செய்தியாக வெளிவரும்.சம்பவங்கள் சுவையாக இருக்கும்.நகைச்சுவைப் பிரியன் இவன்.எனக்கும் அது மிகவும் பிடிக்கும். நான் பிறந்த வன்னிமண்ணில்,தான் வாழ்ந்த அனுபவத்தைச் சொல்லுவார். அன்னையும்,தந்தையும் ஆசிரியர்கள் என்பதால் சிறுவயதில் அவர்கள் செல்லும் பாடசாலைகளுக்கு இவரும் செல்லுவார்.
வன்னியில் காதலியார் சம்மளங்குளம் என்ற ஊரை உங்களுக்குத் தெரியுமா என்று என்னை ஒருமுறை கேட்டார்.
நான் அங்கே கொஞ்சக்காலம் வாழ்ந்திருக்கிறேன் என்றார்.செந்நெல் விளையும் வயல் வரப்பால் நடந்து சென்றே எங்கள் குவாட்டர்சுக்குப் போகவேண்டும்.அங்குதான் தந்தையும்,தாயும் ஆசிரியர்களாக சிலவருடங்கள் கடமையாற்றி இருந்தார்கள்.அந்த வேளையில் அவர்களுடன் வாழ்ந்திருக்கிறேன்.பால்,தயிர்,நெய்,தேன்,நெல்,இறைச்சியென்று எதற்கும் குறைவில்லை.வன்னி வளம் நிறைந்த மண்.அங்கு வாழும் மனிதர்களும் மரியாதை தெரிந்தவர்கள்.
அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அப்படி ஒரு மரியாதை தருவார்கள்.சின்ன வதில் பெற்றோர்களுடன் சேர்ந்து நானும் இந்த இன்பத்தை அனுபவித்திருக்கிறேன்.எங்களுக்கு தண்ணீர் ஊற்றில் ஒரு அச்சகம் இருந்தது.”சக்தி அச்சகம் என்று அதற்குப் பெயர் என்றார்.
அது இவர்களுடையது தான் என்பது அப்போது எனக்குத் தெரியாது.நானும் சின்னவயதில் பல முறை நோட்டீஸ் அடிப்பதற்காக அந்த அச்சகத்திற்குப் போயிருக்கிறேன்.வேலை செய்தவருடன் எனக்குப் பழக்கம் இருந்தது.அவருடன் சேர்ந்து எழுத்துகளைத் தேடிக் கொடுத்திருக்கிறேன்.இவற்றையெல்லாம் அவர் சொல்லும்போது நான் நன்றாக ரசிப்பேன்.நான் பிறந்த மண்ணல்லவா!
நாம் பிறந்த மண்ணை அடுத்தவர் சொல்லிப் புகழும் போதுதான் மனம் மகிழ்ச்சி கொள்ளும்.இவர் மூலம் இதனை நான் அனுபவித்தேன். வெற்றிமணி ஆசிரியர் பன்முகத் திறமை கொண்டவர் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். இவர் ஒரு ஓவியர்,சிற்பக்கலைஞர்,எழுத்தாளர்,பத்திரிகை ஆசியர்,விமர்சகர்,பாடலாசிரியர் குறும்படத் தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல பரிணாமம் எடுத்தவர்.தனது குடும்பத்தினரையும் இதற்குள் ஈடுபடவைத்து மகிழ்ந்து வருபவர்.
இவரால் பலர் எழுத்தாளர்களாகி இருக்கிறார்கள்.பல எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெற்றிமணி வெளியீடாக நூலாக வெளி வந்திருக்கின்றன.இந்த வருடம் இருபத்தெட்டாவது வெளியீடாக பெண் எழுத்தாளர் கரிணியின் “வைகல்”நூலை வெளியீடு செய்திருந்தது.இவர் வெற்றிமணிக்காக தொடர்ந்து எழுதிவருபவர்.புத்தக ஆக்கம்,முதல் வெளியீட்டு நிகழ்வு வரை அத்தனை செலவையும் வெற்றிமணியே ஏற்றுக்கொண்டது.புத்தகவிற்பனை பணம் அத்தனையும் ஒரு சதம் குறையாமல் என்னிடமே தந்தவர் வெற்றிமணி ஆசிரியர் என்று பெருமையாக என்னிடம் சொன்னார் எழுத்தாளர் திருமதி கரிணிக் கண்ணன் அவர்கள். முப்பது வருடங்கள் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து ஒரு பத்திரிகையை இவர் நடாத்துகிறார் என்றால் அதற்குரிய செயற்திறனை மனம் திறந்து பாராட்டலாம்.
யாரும் அவருக்கு எதிரியல்ல,யாருக்கும் அவரும் எதிரியல்லர்.
எதனையும் புன்னகையோடு கடந்து சென்று கருமமே கண்ணாயினார்.காலத்திற்குக் காலம் விழாக்களை ஏற்படுத்தி விருதும் விருந்துமாக எழுத்தாளர்களையும்,ஆதரவு வழங்குவோரையும் கௌரவித்து வருகிறார்.நானும் சில விழாக்களில் கலந்து விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
கலைத்துறையில் படித்துப் பட்டம்பெற்று,சில வருடங்கள் ஆசிரியராகி பாடசாலைகளில் சேவை செய்து,புலம்பெயர்ந்து, தான் வாழ்ந்த யேர்மனி மண்ணைத் தளமாக்கி வெற்றி மணியை உலகத்தில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு ஒலிக்கச் செய்திருக்கிறார்.இது திரு சிவகுமாரன் அவர்களால் நிறைவேறி இருக்கிறது.
பெற்றோரை தெய்வமாக மதிக்கும் பண்பு,இறைபக்தி இவரிடம் இயல்பாக அமைந்திருக்கிறது.இவரது முயற்சிகளுக்கு இவரது குடும்பமும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.பத்திரிகை வளர்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம் எனலாம்.
எழுத்தாளரை மதிக்கும் பண்பும்,அவர்களுக்குக் கொடுக்கும் ஊக்கமும்,நல்ல எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகத்திற்கு வழங்கி இருக்கிறது. தமிழ்மொழிமீதும்,கலை,கலாச்சார விழுமியங்கள் மீதும் தீராத காதல் இவருக்குண்டு. வெற்றிமணி எப்போதும் அழகானது.அதன் வடிவமைப்பு வாசகர்களை வெகுவாகக் கவரக்கூடியது. நான் அறிந்த மட்டில் பெண்களே அதிகமாக வெற்றிமணிப் பத்திரிகையை விரும்பி வாசிக்கிறார்கள்.நேரத்தைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்த கருத்துடன் சுருக்கமான ஆக்கங்களாக,அழகான வடிவமைப்புடன் தரக்கூடிய ஆற்றல் இவருக்குண்டு. இதுவும் வெற்றிமணியின் சிறப்பு. என்னுடைய ஆக்கங்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரசுரித்து மகிழவைத்து வருகிறார்.அவருக்கு எனது நன்றிகள்.
மென்மேலும் இப்பத்திரிகை வளர்ச்சியில் பல ஆண்டு விழாக்களை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று நாமும் வாழ்த்துவோம்.நன்றி.