நெஞ்சத்து அகம் நக

கடுகுமணி:

திருவள்ளுவர் நட்பு என்பது கண்ட இடத்தில் மாத்திரம் முகத்தை மலரவைப்பது அல்ல. அது அன்பாலே முகம் மாத்திரமல்லாமல் அகமும் மலர நட்பதே ஆகும் என்பர்.  முகம் மலர்வதை நாம் காணமுடியும்.  அகம் அல்லது உள்ளம் மலர்வதை நாம் எப்படிக் காணலாம்? அல்லது உணரலாம்? இப்படியான ஒரு சிக்கலுக்கு திருவள்ளுவர் ஏற்கெனவே ஒரு நல்ல மறுமொழி சொல்லியிருக்கிறார். 

அன்பு என்பதை ஆட்டைக் காட்டுவது போலவோ மாட்டைக் காட்டுவது போலவோ காட்டமுடியுமா என்றால் ‘முடியும்’ என்கிறார் வள்ளுவர். அன்புக்கும் துன்புக்கும் அடையாளம் அல்லது சான்று கண்ணீர்தான் என்பதை,

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்” (71)
என்னும் குறளாலே கூறியுள்ளார்.

எனினும்
“முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு” (788)

என்பதில் அகம் நகுவதை நாம் எப்படி உணரலாம்? உள்ளமாகிய தாமரைப் பூ இறைவனுக்காக மலருமாம். அவ்வாறு மலருவதைக் கூப்பிய கைகள் வெளிப்படுத்தும். நாட்ட விழிகள் மேலும் அதனை வெளிப்படுத்தும்.

இது சுவாமி விபுலாநந்தர் சொன்ன விளக்கம். உள்ளத்தைத் தாமரைப் பூவாக எண்ணுவது கீழைத்தேசப் பண்பாட்டுக் கூறாகும். அப்படியாயின் அகம்நக என்றால் சிரிக்கும் தாமரைப்பூ எனக் கூறலாம். நட்புடன் தாமரைப்பூவினைத் தொடர்புபடுத்தி காளிதாசன் என்னும் வடமொழிப் புலவன் மேகதூதம் என்னும் இலக்கியத்திலே

“இதழ் விரியும் தாமரைப்பூவினுள் தேனும் மகரந்தமும் சேர்ந்த பாணி” என்று கூற வந்தவன் அப் பாணியினை “மைத்திரி க~hய” என்று சொல்கிறான். “நட்புப் பாணி” என்று பொருள். இந்த நட்புப் பாணி இனிப்பைத் தரும். புதிய உயிர்ப்பைத் தரும். அழகான சூழலைத் தரும். எனவே, சிரிக்கும் உள்ளமாகிய தாமரைப்பூ நட்புப் பாணியுடன் அமையின் எவ்வளவு நல்லாயிருக்கும்!

பேராசிரியர் அ. சண்முகதாஸ்.

440 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *