காணாமல் ஆக்கப்படும் கறுத்தக்கொழும்பான்
கறுத்தக் கொழும்பு கொழும்பு மாவட்டத்தை குறிக்க பயன்படுவதாக கொள்ளக்கூடாது.
இப்படி ஒரு மயக்கம் இருந்தால் தெளிவு கொள்ள வேண்டும்.
- லதா கந்தையா இலங்கை.
யாழ்ப்பாணம் என்ற உடன் நினைவுக்கு வருவது பனம்பழமும் கறுத்தக்கொழும்பான் மாம்பழமுமே என்றால் மிகை அல்ல. கோடைகாலத்துக்கறுத்தக்கொழும்பான் மாம்பழம் யாழ்ப்பாண சுண்ணக்கல் நன்னீரின் சுவையை திகட்டி பழச்சாறாக்கி விந்தை செய்யும் அதிசயம் கொண்டது
மாம்பழத்தை நேரடியாகவே மரத்தில் இருந்து மாம்பழமாக பெற்று விட முடியாது. ஏனெனில் பழங்களை வேட்டையாடி உண்ணவும் மேப்பம் பிடித்து கொறிக்கவும் கொத்தவும் அணில் பிள்ளைகளும் காக்கைக்கூட்டங்களும் கிளிப்பிள்ளைகளும் முந்திக்கொள்ளும். இரவில் வெளவால்களும் வேட்டையாட தொடங்கி விடும்.
இதனால் நன்றாக முற்றிய மாங்காய்களை செங்காய்களாக ( பழுக்கும் பருவம்) இருக்கும் போதே நான்கில் மூன்று பங்கை நிலத்தில் விழாமல் பக்குவமாக பறித்தெடுத்தல் வழமை. மற்றைய ஒருபங்கு அணில்களுக்கும் பறவைகளுக்கும் விடுவதால் உயிரினப்பல்வகைமை காக்கப்படுகிறது.
பறித்த பழங்களை வைக்கோலால் அல்லது நெல்லுக்குள் அல்லது வேப்பிலையால் மூடிப்பழுக்க வைத்தல் இயற்கை முறை. அதில் சாப்பிடுவதற்கு போதியளவை எடுத்துக்கொண்டு, உற்றம் சுற்றத்துக்கும் பங்கிட்டுக் கொடுத்தும் விற்கக்கூடியதை விற்று வாழ்ந்தனர் யாழ்ப்பாணத்து மக்கள்.
கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை பெரும்பாலும் தோல் நீக்கியும் நீக்காமலும் உண்ண முடியும். மாம்பழத்தின் கொட்டையில் இருக்கும் சாற்றை பற்களால் வறுகி வறுகி வெள்ளையாக்குதல் சிறுவர்முதல் பெரியவர்கள் வரை சுவைப்பதில் பேரின்பம் கொள்வர். அதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். இதனால் பற்களின் ஈறுகளில் மாமபழத்தின் தும்புகளும் சாறுகளும் படர்வதால் அவை உறுதி பெறுகின்றன. வெண்மை அடைகின்றன. தற்காலத்தில் நவநாகரிகம் என்ற போர்வையால் இந்த செயற்பாடுகள் அருகிவிட்டன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பதாக பெரும்பாலும் ஒவ்வொருவர் வீட்டு முற்றத்திலும் ஒரு மாமரம் இடம்பிடித்திருந்தது. இன்னார் வீட்டு மாம்பழம் சுவைமிக்கதென தேடி வேலியால் பறித்துண்ட சிறுவர்கள் ஏராளமாக இருந்தார்கள். பண்டமாற்றாக பகிர்ந்துண்டார்கள். எத்தனை பழங்கள் சாப்பிட்டோம் என்ற எண்ணிக்கை எல்லாம் யாரும் கணக்கிட இருப்பதில்லை.அமர்க்களமான கறுத்தக் கொழும்பானின் வாசனை கைகளிலும் வாயிலும் கமகமக்கும்.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட நிலத்துண்டாடல்கள் மற்றும் வீதி அகலிப்புகள் புணரமைப்பபுகளால் ஏற்பட்ட வளர்ச்சி வீட்டுக்குவீடு வீதியோரமாக கடைகளைக்கட்டி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கடைகளைக்கட்டி வாடகைக்கு விடுவதால் கிடைக்கும் பகுதியளவு அல்லது நிரந்தர வருபான வழிவகைகள் மற்றும் கழிவகற்றல் நெருக்கடிகளால் வகைதொகையற்று முற்றத்தை நிறைத்துநின்ற மாமரங்கள் தறிக்கப்பட்டு விட்டன.
மாஞ்சறுகுகளை அகற்றுவதற்கு இடப்பற்றாக்குறை மற்றும் சுகாதார பரிசோதகர்கள் கிராம அலுவலர்களினால் மாதந்தோறும் கண்காணிக்கப்படும் டெங்கு நுளம்பு பெருக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக கொடுக்கும் நெருக்கடிகளும் மாமரங்களின் வெட்டுதலுக்கு ஒரு காரணமாகிவிட்டது. பலர் வேலைகளுக்கு தூர இடங்களுக்கு செல்வோராகவும், குறுகிய துண்டாடல் நிலங்களானதால் அயல்வீடுகளுக்குள்ளும் பழுத்த இலைகள் சருகுகள் விழுவதால் அயல்வீட்டுக்காரர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும் பலர் மாமரங்களை தறித்துள்ளார்கள்.
மட்டுமன்றி தென்பகுதியில் இருந்து வந்த சில வியாபாரிகள் மாம்பலகைகளில் மேற்கொள்ளும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தந்திரமாக மாமரங்களை கவர்ச்சிகரமான பணத்தை கொடுத்து வாங்கி தறித்துக்கொண்டு செல்வதும் அண்மைக்காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த உண்மையாகும்.. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா என இந்த கைவரிசை நீண்டிருப்பதானது கவலைக்கிடமானது. வடக்கு மாகாணத்தில் அன்றாடம் உழைத்துண்ணும் மக்களை மட்டுமன்றி படிப்பறிவில் மிகச்சிறந்த யாழ்ப்பாண மக்களையும் இந்த வியாபாரிகள் ஏமாற்றி கொண்டமை வியப்பானதே.
எங்கள் தொன்மைக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் பல்வேறு வகையான பயன்களும் நிறைந்து கிடக்கிறது. கோடைகாலத்தில் அதாவது சித்திரை தொடக்கம் ஆவணிவரையான காலப்பகுதியில் இவை அதிகமாகக்கிடைக்கும். வெப்பத்தை நன்கு உறிஞ்சிக்கனியும் பழங்களாக இருப்பதால் உடலுக்கு உறுதியை தரும் வல்லமை கொண்டவை. நீர்த்தன்மை அதிகளவு காணப்படுவதால் உடற்சூடு குறையும்.விற்றமின் யு சத்து அதிகம் காணப்படுவதால் கண்பார்வை கூர்மைபெறும். புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலுடையது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. இரத்தத்திலுள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும். இதயத்துக்கு பலமானது. மாதவிடாய் ஒழுங்குடன் செயற்பட உதவுகிறது. மூளையை சுறுசுறுபேபடைய வைக்கிறது.நோயெதிர்ப்பு சக்தியுடையது. நரம்புத்தளர்ச்சியை போக்குகின்றது. சிறுநீரககற்களை அகற்றுகிறது. உணவை சமிபாடடைய வைக்கிறது. மனச்சோர்வை நீக்கும்.
ஆண்மையை அதிகரிக்கும்.உடல் உறுதி அதிகரிக்கும்.இரத்த உற்பத்திக்கு உதவுகின்றன.சமிபாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.வாயுத் தொல்லையை நீக்கும்., உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது.
பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது.நாள்பட்ட தலைவலியை சீர் செய்கிறது.ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது முகப் பொழிவுக்கு உதவுகிறது..
ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. மாம்பழத்தை முகத்துக்கு பூசி கழுவும்போது புதிய அழகு ஒன்று பிறந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
ஆனாலும் மாம்பழத்தை உண்ண முடியாத வகைப்பாட்டுக்குள்ளும் சிலர் இருக்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கிணங்க அளவுகணக்கற்று உண்பதால் வயிற்றோட்டம் உருவாகிவிடும். நீரிழிவு நோயாளர்கள் வைத்திய ஆலோசனை பெற்று உண்ண வேண்டும்.
முக்கனிகளில் அதிகம் பாடல் பெற்ற பழம் மாம்பழமாகவே இருக்கும். அதிலும் கறுத்தக்கொழும்பான் விலை இன்று கதிகலங்க வைக்கின்றது. அதுமட்டுமன்றி கறுத்தக்கொழும்பானின் ருசி இப்போது இல்லை. மருந்தடிக்கப்பட்ட பழங்களை விலைகொடுத்து வாங்கி உண்ணும்போது மருந்துக்கலவைகள் வாந்தியை குமட்டலை செரிமானக்குறைவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது.
கொழுத்தல் என்றால் பருமன், தசைப்பிடிப்பான,நிறையக்கிடைத்தல் எனப்பொருள் கொள்ளப்படும். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பர். நண்டிற்கு நிறைவாக உணவு கிடைத்தால் அது ஓரிடத்தில் இருக்காது. ஓடித்திரியும் என்பது அதன்பொருள். அதேபோலவே கரும்பச்சை நிறத்தில் கறுத்துக்கொழுப்பதால் கறுத்துக்கொழுத்த மாம்பழம் காலப்போக்கில் காரணப்பெயராகி கறுத்தக்கொழும்பான் என்ற சிறப்புடன் உலாவத்தொடங்கிவிட்டது.
கொழுத்தலைக்குறிக்க பயன்படுத்திய இந்தச்சொல் கொழும்பு மாவட்டத்தை குறிக்க பயன்படுவதாக கொள்ளக்கூடாது. இப்படி ஒரு மயக்கம் இருந்தால் தெளிவு கொள்ள வேண்டும்.
கறுத்தக்கொழும்பான் ஒரு நிறையுணவுக்கு நிகரான தசைப்பிடிப்பான முக்கனி.மத்தியகோட்டுக்கு அருகிலே அமைந்துள்ள வெப்பவலய நாடுகளிலே பரவலாக இந்த மரம் காணப்பட்டபோதும் யாழ்ப்பாணச்சுண்ணக்கல்லின் நன்னீரில் விளையும் கறுத்தக்கொழும்பான் உலகிலேயே விசேட பேசுபொருளாகும். உலகெங்கும் பரந்து வாழும் யாழ்ப்பாணத்தவர்களின் விடுமுறைக்காலத்தேடலாக அமைவதும் இந்த கறுத்தக்கொழும்பானே. ஒரு சமுதாயத்தின் வரலாற்று இருப்பை நிலை நிறுத்துபவை நிலம் நீர் மண்வளம் சிறப்பான மரஞ்செடி கொடிகளே. அந்தவகையில் நன்கு திட்டமிட்ட வகையில் எமது யாழ்மாவட்டத்தை பிரதிபலிக்கும் கறுத்தக்கொழும்பானும் அதன் இயல்பையும் இருப்பையும் இழந்துபோகும் வகையில் செயற்பாடுகள் துரிதமடைந்துள்ளன. முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் அம்பலவி செம்பாட்டான் கிளிச்சொண்டன் விளாட்டு மல்கோவா புளிமாங்காய் என பலவகையுடையதாக இருந்தாலும் யாழ்ப்பாணத்து கறுத்தக்கொழும்பானுக்கே சிறப்பு அதிகம்.
அந்தச்சிறப்பை தக்கவைப்பதும் எதிர்காலச்சந்ததிக்கு பரிசளிப்பதும் மனச்சாட்சியுடைய ஒவ்வொருவர் மனங்களிலும் செயல்களிலுமே உள்ளது. நல்லதொரு குடும்பம் தனக்கென சிறப்புகளை கொண்டிருப்பதுபோல நல்லதொரு சமுதாயமும் தமக்கான சிறப்புகளை இழந்துவிடாது பாதுகாத்தல் அவசியமானதாகும்.நன்றி தமிழர் பொருண்மியம்
455 total views, 3 views today