தனித்து நின்ற பெண்
அ.முத்துலிங்கம் (கனடா)
அந்த உணவகத்துக்குள் நுழைந்தபோது நான் முதலில் பார்த்தது அந்த இளம் பெண்ணைத்தான். இரண்டு நாற்காலிகள் போட்ட சதுரமான மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல ஒப்பனை செய்யப்பட்ட முகம். நல்ல ஆடையில் அலங்காரமாக காணப்பட்டார். என்னை இழுத்தது நீண்டுபோன அவருடைய கண்கள்தான். முகத்தில் என்ன உணர்ச்சி என்று சொல்லமுடியவில்லை. மகிழ்ச்சி அல்லது எதிர்பார்ப்பு; இரண்டும் கலந்துகூட இருக்கலாம். கபில நிறத் தேகம். இந்தியராகவோ, ஈழத்தவராகவோ கயானா நாட்டுக்காரராகவோ இருக்கலாம். நிச்சயமாக சொல்லத் தெரியவில்லை.
காதலர்கள் பலர் மேசைகளில் எங்களைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். நண்பன் விதம்விதமான உணவு வகைக்கு ஆணை கொடுத்தான். என் கவனம் பெண்மீதுதான். அவளில் அமைதியின்மை தெரிந்தது. செல்பேசியில் ஏதோ எழுதி அனுப்பினார். குறுஞ்செய்தியாக இருக்கலாம். பதில் ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. சிறிது நேரம் பார்த்துவிட்டு டெலிபோனில் யாரையோ அழைத்தார். மறுபக்கத்தில் ஒருவரும் எடுக்கவில்லை. எரிச்சலுடன் செல்பேசியை மேசையில் எறிந்துவிட்டு மறுபடியும் வாசலைப் பார்க்க ஆரம்பித்தார்.
எங்கள் உணவு வந்துவிட்டது. என்னால் அமைதியாக உண்ண முடியவில்லை. அந்தப் பெண்ணையே பார்க்கத் தோன்றியது. பரிசாரகன் மறுபடியும் அவர் முன்னேபோய் நின்றான். ’யாரோ நண்பர் வருவதற்காக காத்திருக்கிறேன். அவர் தொழில் சம்பந்தமான முக்கிய கூட்டத்தில் இருக்கிறார். விரைவில் வந்துவிடுவார்.’ அப்படித்தான் ஏதோ சொல்லியிருக்கவேண்டும். மறுபடியும் செல்பேசியை எடுத்து நீண்ட குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். அவருடைய அழகான முகத்தில் பதற்றம் வந்து இறங்கியது. மெனு அட்டையை மேலும் கீழுமாகப் படித்தார். பின்னர் வாசலைப் பார்க்க ஆரம்பித்தார்.
நாங்கள் உணவை முடித்து ஒருமணி நேரம் தாண்டிவிட்டது. உணவு வாசனை நிறைந்திருந்தது. அந்தப் பெண் என்ன நினைத்தாரோ பரிசாரகனை அழைத்து தன் உணவுக்கு ஆணை கொடுத்தார். உணவு வந்தாலும் அதைத் தொடவில்லை. செல்பேசியை எடுத்துப் பார்ப்பதும், வாசலை நோக்குவதுமாக நேரத்தைக் கழித்தார். பின்னர் ஏதோ நினைத்து உணவை உண்ண ஆரம்பித்தார். உணவகம் நிறைந்து ஒரே சத்தமாகி விட்டது. பக்கத்து மேசையில் இருந்து ஒருவர் வந்து அவருடைய மேசையில் சும்மா இருந்த நாற்காலியை தான் கடன் வாங்கலாமா என்று கேட்டார். அவருக்கு அழுகை வந்தது. ’இல்லை. என் நண்பர் வருகிறார். எடுக்கவேண்டாம்’ என்றார். பின்னர் குனிந்தபடியே உணவை கரண்டியால் அள்ளி வாயில் போட்டார். பரிசாரகர் வந்து பணிவாக எதையோ கேட்டபோது இவர் தலையை மட்டும் ஆட்டினார்.
நாங்கள் உணவை முடித்துவிட்டு இனிப்பை சுவைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு சீனப் பரிசாரகிகள் ஒரு தட்டிலே கேக் ஏந்தியபடி நடன அசைவுகளுடன் வந்தனர். கேக்கின்மேல் ஒரு மெழுகுதிரி எரிந்தது. உரத்த குரலில் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடியபடியே மேசையை அணுகினர். எல்லோருடைய பார்வையும் அந்தப் பெண்ணின்மேல் விழுந்தது. இரண்டு பரிசாரகிகளும் மெய்க்காவலர்போல அவருடைய இருபக்கத்திலும் நின்றனர். அவர் மெழுகுதிரியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டினார். பின்னர் தன்கையால் ஒரு சிறுதுண்டை எடுத்து தன் வாயினுள் வைத்தார். அவருக்கு ஊட்டவோ, அவர் ஊட்டிவிடவோ ஒருவரும் இல்லை. பரிசாரகிகள் திரும்பிப் போயினர்.
நாங்கள் இனிப்பை முடித்துவிட்டு கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம். அன்று நண்பர் பேசியது ஒன்றுமே என் நினைவில் இல்லை. பார்வையும் நினைவும் அந்தப் பெண் மேலேயே இருந்தது. மறுபடியும் பெண் ஒருமுறை வாசலைப் பார்த்தார். அவர் முகத்தில் அவமானமும் அளக்க முடியாத சோகமும் கலந்திருந்தது. கைகாட்டி பரிசாரகியை அழைத்து அவள் காதுகளில் என்னவோ சொன்னார். சிறிது நேரத்தில் அவர் சாப்பிட்ட கணக்கை கொண்டுவந்து கொடுத்தபோது கடன் அட்டையை நீட்டினார். அது வேலை செய்யவில்லை. பின்னர் தன் கைப்பையை திறந்து காசை எண்ணிக் கொடுத்தார்.
பரிசாரகர் ’மீதிக் கேக்கை கட்டித் தரவோ?’ என்று கேட்க அவர் வேண்டாம் என தலை ஆட்டினார். எழுந்து நின்று கதிரையில் மாட்டியிருந்த மேலாடையை எடுத்து அணிந்தார். கைப்பையை தோளிலே மாட்டினார். பரிசாரகர்கள் வந்து மேசையை சுத்தம் செய்து அடுத்த வாடிக்கையாளருக்கு தயார் செய்தார்கள். அப்பொழுதும் அந்த பெண்ணுக்கு புறப்பட மனம் வரவில்லை. வாசலை பார்த்தபடி அப்படியே தனியாக நின்றார்.
பெயன் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முள் கள்ளிக்காய்விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு ,ரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள் வயிற் பிரிவாராயின் இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
குறுந்தொகை – 174 (வெண்பூதியார்)
In the desolate> rain-forsaken land / The twisted kalli’s pods
Open with a crackle / Frightening the mating pigeons
with their close-knit downy feathers. / He has left me languishing.
‘In search of wealth,’ he said. / He did not mind the risks on the way.
If it comes to that, then in this world
wealth has all support / and love must stand alone.
(பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சாகித்திய விருதுபெற்ற ம.லெ.தங்கப்பா அவர்கள். இந்தப் பாடலை நினைக்கும் போதெல்லாம் மேலாடை நுனியை கழுத்துடன் சேர்த்து பிடித்துக்கொண்டு எழுந்து தனியாக நின்ற இந்தப் பெண்ணின் நினைவு மனதில் வந்து போகும்.) நன்றி.தமிழர் தகவல் (கனடா)
189 total views, 9 views today