வேடர்களிடத்தில் கலைகள். 02

— சர்மிலா வினோதினி. இலங்கை.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குகைகளின் வழி வேடர்களின் கலைகள் தொடர்பாகவும் அறிய முடிகிறது, குறிப்பாக அன்றாட தேவையின் நிமிர்த்தமாக மிக எளிய முறையில் மட்பாண்ட உற்பத்திகள் நடைபெற்றிருக்கின்றன. அத்தோடு வேட்டையாடல் முறையில் இருந்து சேனைப் பயிற்செய்கை முறைக்கு மாற்றம் அடைந்த பிற்பாடு பொருளாதார தேவைகளின் நிமிர்த்தம் மர செதுக்கல்கள் மற்றும் கடைச்சல் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். கருங்காலி மரம், யானைத்தந்தம், இன்னும் சிலவகை விதைகள் இவற்றிற்கான மூலப் பொருட்களாக பயன்படுத்தப் பட்டுள்ளன.

காடுகளில் தமது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட சிலவகைப் பொருட்கள் இசை மீட்கும் கருவிகளாக காணப்பட்டன. விலங்குகளின் சத்தங்களின் பிரகாரம் சத்தம் ஏற்படுத்தக்கூடிய இசைக்கருவிகளை உருவாக்கினர். சுற்றுச் சூழலில் கிடைத்த பொருட்களைக்கொண்டு இவை உருவாக்கப்பட்டன. தேங்காயை கொண்டு உருவாக்கப்பட்ட “பும்மெடிய” என்னும் இசைக்கருவியும், சாந்திக் கருமங்களின்போது இசைக்கின்ற பறை, முழவுமேளம் ஆகியவை முதன்மையானவை. தவிர மான்கொம்பு, இரும்புக் கம்பிகள் அல்லது மண்வெட்டிகளில் தட்டி ஓசை எழுப்புதல், இரண்டு சிரட்டைகளை தட்டி ஒலியெழுப்புதல், காய்ந்த பலாக்காயை கொண்டு யானையின் ஓசையை எழுப்புதல், மட் பாத்திரத்தின்மேல் தோலை கட்டி அதன் நடுவில் குங்குலிய எண்ணை தடவிய நூலொன்றை இழுப்பதால் புலியின் உறுமலைப் போன்ற ஓசையினை எழுப்புதல் போன்ற முறைகளிலும் இசை எழுப்பப்படுகிற முறைகள் தொடர்கின்றன.

சடங்குகளும் வழிபாடுகளும்

இதேபோன்று வேடர் சமூகத்திடம் காணப்படுகிற சடங்குகளும் வழிபாடுகளும் சுவாரஸ்யமானவை. “உறவுப் பேய்களை வழிபடுதல்” என்று சொல்லுகிற இறந்தவர்களை வழிபடுகிற மரபு வேடர்களிடத்திலே ஆழ வேரூன்றி இருக்கின்றது. இறந்த தமது உறவுகள் பேய்களாக பிறந்து காட்டில் உலவுவதாகவும் அவர்களை மகிழ்விப்பதன் மூலம் தாம் நன்மை அடையலாம் என்றும் வேடர்கள் நம்புகின்றார்கள். உறவுப் பேய்களுக்கு நடாத்தப்படும் இத்தகைய சாந்திக் கருமங்களால் காடுகள், மலைகள், ஓடைகள், நீரேரிகள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அனர்த்தங்கள் மற்றும் நோய்களில் இருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும், தேன், கனிகள், வேட்டை உணவுகளை பெற்று கொள்ள முடியும் என்றும் நம்புகிறார்கள். இதன்பொருட்டு அடுக்கு என்கிற உணவுமுறை வழிபாடு நடத்தப்படுகிறது.

பெண்களை சிருஸ்டித்தலின் மூலமாகவும், காத்தலின் அடையாளமாகவும் நம்புகின்ற வழக்கம் வேடுவர் சமூகங்களில் ஆழ வேரூன்றியுள்ளது. மரணமடைந்த தமது பரம்பரையைச் சேர்ந்த பெண்களை செவிலித் தாய்மார்களாக உருவேற்றி அன்னதானமிட்டு சாந்திசெய்து வணங்கி வருகிறார்கள், இச் செவிலித் தாய்மார்கள் நோய் நொடிகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இவர்களை “கிரிஅம்மாவரு” என்றும் “நாச்சி” என்றும் அழைத்து வருகிறார்கள்.

இவை ஒருபுறம் இருக்க மந்திர தந்திரங்கள் மீதான நம்பிக்கையும் இங்கு ஆழமாக உணரப்படுகிறது. புலி, பாம்பு போன்ற ஆபத்தான விலங்குகளிடம் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் தம்மை காக்கின்ற மாபெரும் சக்தியை மந்திரங்கள் கொண்டிருக்கின்றன என்றும் தேன் சேகரிப்பிற்கு உதவும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அதேநேரத்திலே வனத்தினுள் தமது பாதுகாப்பை வேண்டியும், விலங்குகளை பிடித்து வேட்டை செழிப்புற வேண்டியும் நேர்த்திக் கடன்களை வைத்து நேர்த்தி செலுத்தி வருகிறார்கள். உயரம் குறைவான குன்றுகளின் மீது தங்களுடைய உறவுப் பேய்களுக்கு இவ்வகை நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள்.

வேடர்களிடத்தில் பதினெட்டு வகையான மைபார்க்கும் முறைகளும் வழக்கத்தில் இருக்கின்றன. நெற்குவியல், வில் மற்றும் கல் ஆகியவை மைபார்த்தலுக்குரிய சாதனங்களாக பயன்படுத்தப்படுகின்றன. தமது கோத்திரத்தை சார்ந்த ஒருவருக்கு நோய் ஏற்படுகிறபோது அந்த நோயை ஏற்படுத்திய பேய் எதுவென்று அறிவதற்கு மட்டுமே குறித்த மைபார்க்கும் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. “மலைப்பேய்” என்கிற ஒருவகை பேயை அழைத்து தமக்கு உதவிசெய்யுமாறு வேடர்கள் வேண்டுகிறார்கள். “மலைத்தேவர்” என்றும் இம் மலைப் பேயை அழைக்கிறார்கள்.

பேயாட்டம் என்கிற சடங்கும் இச் சமூகத்திடம் முக்கியம் பெறுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பிற்காக இப் பேயாட்டம் நடத்தப்படுகின்றது. உயரமான முக்காலி ஒன்றின் அருகில் அம்பொன்று புதைக்கப்பட்டு பிராத்தனையை ஆரம்பிப்பார்கள், பின்னர் குறித்த அம்பை பிடுங்கிக்கொண்டு முக்காலிக்கு அருகில் சென்று ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்.வேட்டைக் களத்தில் வேட்டைகள் கிடைக்காத போதும் ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது. இதன்போது நாக மரத்தின் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பொன்றை நிலத்தில் நட்டபின் மன்றாட்டங்களை சொல்லியபடி அவ் அம்பைச் சுற்றி குழுவாக சேர்ந்து ஆடப்படும் இவ் ஆட்டம் “அம்புப் பேயாட்டம்” என்று அழைக்கப்படுகிறது. எனினும் பிரதேசத்திற்கு பிரதேசம் இவர்களுடைய சடங்குகளிலும் சம்பிருதாய முறைகளிலும் வித்தியாசங்கள் காணப் படுகின்றன. தவிர, வேடர்கள் மத்தியில் கதிர்காம வணக்கமும் முதன்மை பெறுகின்றது, முருகனின் பாரியார் வள்ளி தமது குலத்தை சேர்ந்தவர் என்கிற நம்பிக்கையும் இவர்களிடம் நிலவுகிறது.

சமகால வாழ்வியல்
இவ்வாறாக தம் வாழ்வோடும் வாழுகிற நிலத்தோடும் சுற்றுச் சூழலோடும் இணைந்து பயணப்படுகிற வேடுவர்களின் வாழ்க்கைமுறை கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. எனினும் நவீன மயமாதலின் விளைவுகள் வேடுவர் குலத்திடமும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறித்த ஒரு இடத்தில் குடியிருப்புக்களை அமைத்து சேனைப் பயிற்செய்கையினை மேற்கொண்டு சில மரவேலைகளை மேற்கொண்டு வாழுகின்ற எளிய வாழ்க்கை முறைக்கு வேடுவர் சமூகமும் தம்மை பழக்கம் படுத்தி இருக்கின்றது. அத்தோடு காடுகளில் சேகரிக்கின்ற கொய்யாப் பழம், தேன், மற்றும் இன்னபிற பழ வகைகளை விற்பனை செய்தல், குரக்கன் போன்ற தானியங்களை விளைவித்து விற்பனை செய்தல் என்று பணமீட்டுவதற்கான சிறு பொருளாதார முயற்சிகளிலும் ஈடுபடும் வழக்கம் இவர்களிடம் அறிமுகமாகி இருப்பதோடு நவீன மயமாதலின் செல்வாக்கும் மெல்ல மெல்ல உள்நுழையத் தொடங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

115 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *