வாழ்கின்ற போதே தனியாகவும் வாழ உங்களைத் தயார்ப் படுத்துங்கள்!
கௌசி (யேர்மனி)
இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள், கிரகங்கள் என்பன முடிவில்லாத பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றன. இது எப்போது தோன்றியது? எங்கு முடியும்? என்பது அனுமானமே. எங்களுடைய பால்வீதி மண்டலத்திலுள்ள சூரியக் குடும்பத்தில் சூரியனைச் சுற்றிச் சுற்றி வரும் கிரகங்களில் ஒன்றுதான் பூமியும். சூரியன் தன் கவரச்சிக்குள் பூமியை வைத்திருக்கின்றது. பூமியும் தன்னுடைய ஈர்ப்பு சக்தியினாலே சூரியனை நெருங்காது ஒரு வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். பூமியானது எங்களுடைய பால்வீதி மண்டலத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட ஒரே கிரகமாக இன்றுவரை காணப்படுகின்றது. ஆனால், அகண்டு விரிந்து பரந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழுகின்ற சாத்தியக்கூறுள்ள ஒரு கிரகத்தைத் தேடி விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றார்கள். இந்த முன்னுரையை வைத்துக் கொண்டு கட்டுரைக்குள் செல்வோம்.
ஒரு குடும்பத்தில் ஈர்ப்பு சக்தி இருக்கும் வரை அந்தக் குடும்பம் ஒன்றை ஒன்று கவர்ந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கும். அக்குடும்பத்தின் அங்கத்தவர்கள் தம்முடைய வாழ்க்கையைச் செலுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். கணவனைப் பிரிய முடியாத மனைவியும், மனைவி இல்லாது வாழ முடியாது என்று சொல்லும் கணவனும், பெற்றோர் இல்லாமல் இயங்க முடியாத பிள்ளைகளும் என ஒரு இறுக்கமான சங்கிலியைப் பிணைத்து வாழ்ந்து வருகின்றார்கள். பிறந்ததில் இருந்து மனிதன் என்பவன் இறப்பை நோக்கியே பயணம் மேற்கொள்கின்றான். கணவன், மனைவி, பிள்ளை இணைந்த குடும்ப பந்தத்திலே ஈர்ப்பு குறைகின்ற போது அக்குடும்பத்தில் இருந்து பிரித்தெடுத்து வெளியே வீசப்படுவது இயல்பு. ஆனால், வீசப்பட்டாலும் தனித்து வாழக்கூடிய பிரபஞ்ச அமைப்புக்கேற்ற குடும்ப அமைப்பு முறையும் அமைய வேண்டியது அவசியம். வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. ஒருமுறை வாழுகின்ற இந்த வாழ்க்கையை எமக்காகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எமது இலங்கை மக்கள் நோர்வே, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிற்சலாந்து போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள். அங்கு புரியாத கலாச்சார அமைப்பிலும், மொழியிலும் வேற்றுக் கிரகவாசிகள் போல வாழ்ந்து தம்மைத் தாம் வாழுகின்ற நாட்டிற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுகின்றார்கள். அதுவரை கணவனும் மனைவினும் தம்மை ஒரு இறுக்கமான கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டே வாழ்க்கையை நடத்தத் தொடங்கினார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. இருவரும் வேலைக்குப் போக வேண்டும். இருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கணவன் வேலைக்குச் சென்று வர மனைவி குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது. இது ஒருவரில் ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. இதுவே எம்முடைய மரபணுக்களும் கற்பிக்கின்றன. காலம் காலமாகப் பெண் சமையல், பிள்ளை வளர்ப்பு என்று குடும்பப் பாரத்தைச் சுமக்கக் கணவன் வெளியில் சென்று பொருளீட்டி வருகின்றான். இதுவே சங்ககாலம் தொட்டு தொடர்ந்து வந்தது.
“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கம்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”
என பெண்களை அகநானூறு சுட்டுகின்றது.
“வினையே ஆடவர்க்குயிரே மனையுறை
மகளிர்க்குஆடவர் உயிரென||
என ஆண்கள் கடமை கூறுகின்றது.
இவ்வாறுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமைகள் வகுக்கப்பட்டன.
ஆனால், புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய ஆண், பெண் உள்ளிட்ட குடும்பத்தில் காலம் நகர்கிறது. வாழ்க்கைத் தரம் உயர்கிறது. மொழி இலகுவாகிறது. வாழுகின்ற நாட்டின் சுதந்திரம் கற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால், சுயமாக வாழக் கூடிய தன்மையை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். ஒரு பெண் ஆண் இல்லாமலும் தன்னால் தனித்து வாழ முடியும் என்ற நிலைக்கு ஆளாகின்றாள். ஆணும் பெண் இல்லாவிட்டாலும் தன்னால் வாழ முடியும் என்ற நிலைக்கு ஆளாகின்றான். மனிதன் என்பவன் தனியாகப் பிறக்கின்றான். எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி பிறக்கின்ற போது பெற்றோரே பிள்ளைகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வளர்த்தெடுக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் தனியே வாழக்கூடிய தைரியத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு இருக்கின்றது. குருவிக் குஞ்சுகளுக்குச் சிறகு முறைக்கும் வரைக் கூட்டுக்குள் வைத்திருந்து உணவூட்டிப் பாதுகாக்கும் குருவிகள், சிறகு முளைத்து விட்டால், வெளியே தள்ளிவிடுகின்றது. அக்குஞ்சுகளும் தனியே தம்முடைய சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்குகின்றன. அதேபோல் ஜெர்மனியர், தம்முடைய பிள்ளைகளுக்கு 18 வயது வந்துவிட்டால், தம்முடைய பிள்ளைகளை வேறு வீடு எடுத்துத் தனியே வாழ பெற்றோர்கள் அனுப்பிவிடுகின்றனர். இதனைப் பாசமற்ற பெற்றோர் என்று தமிழர்கள் விமர்சித்தாலும் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் தம்மைத் தயார்படுத்த அவர்கள் கற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதுவே யதார்த்தம். தம்முடைய பிள்ளைகளுக்கு அந்தத் தைரியத்தைப் பெற்றோர் தாராளமாகக் கொடுக்கின்றனர்.
அதுபோலவே கணவன் மனைவி இருவரும் தமக்கான தேவைகளைத் தாமே ஆற்றுகின்ற நடைமுறைகள் ஐரோப்பிய நாடுகளில் பெரிய சாதனையாகக் கொள்ளப்படுவதில்லை. சூரியனைச் சுற்றி பூமி நகர்வதுபோலத் தம்மைச் சுற்றிக் கணவன் வரவேண்டும் என்பதற்காகத் தமிழ்ப் பெண்கள் தம்முடைய சமையலறையை கணவனுக்கு விட்டுக் கொடுப்பதில்லை. “என்ன இருந்தாலும் சாப்பாட்டுக்கு என்னிடம் தானே வரவேண்டும். எதுவானாலும் இந்த உரிமையை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறுகின்ற எத்தனையோ பெண்களின் வார்த்தைகளைக் கேட்கின்றோம். ஆனால் ஆண்கள் நினைக்கின்றார்கள் என் மனைவி என்னைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகின்றாள். அவள் இல்லாவிட்டால் என்னால் வாழ முடியாது என்று பெருமையாகப் பேசுகின்றார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதை அவர் உணர்வதில்லை.
வாழுகின்ற போதே தம்மைத் தனியாக வாழத் தயார்ப்படுத்தவில்லை என்றால், மனைவி தன்னைவிட்டுப் பிரிகின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்ற தருணத்தில் அவரால் தனித்து வாழ முடியாது மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நோய் இலகுவாகத் தொற்றிக் கொள்ளுகின்றது. ஆண்கள் முடியமானவரைத் தம்முடைய வேலையைத் தாமே செய்தால் அவர்களுடைய உடல்நலத்துக்கும் சிறப்பு. அதைவிட அவருக்கு யாருமில்லாமல் என்னால் வாழ முடியும் என்னும் தைரியமும் ஏற்படும்.
“வாயிருந்தால் வங்காளம் போகலாம்” என்பார்கள், நாம் அபூர்வ மூளை என்னும் இயந்திரத்துடன் பிறந்திருக்கின்றோம். அதற்கு வலுவாக கட்டளை போட்டுவிட்டோமேயானால், எம்மை எந்த எல்லைக்கும் அது கொண்டு செல்லும். அதனால், எம்மால் முடியும் என்ற வலுவான நம்பிக்கையுடன் தனித்து வாழ ஆணும் பெண்ணும் முயற்சி எடுக்கலாமே. இளஞ்சந்ததியினர் இதற்குத் தயாராகி விட்டார்கள். அதனால், இக்கட்டுரை அவர்களுக்கானதல்ல. முதியவர்களுக்கானது. இன்றே செய் அதை நன்றே செய்
59 total views, 6 views today