பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்
பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்
பிரியா இராமநாதன் (இலங்கை)
அலுவலகங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் pநசகநஉவ டாக நம்முடைய கடமைகளை செய்தாலும் நம்மை சார்ந்தவர்கள் அநேகமாக நம்மை குறைகூறிக்கொண்டேதான் இருக்கக்கூடும். அப்போதுதான் அடுத்தமுறை இதைவிட திறமையாக நாம் நம்முடைய பொறுப்புக்களை செய்வோம் என்றோ அல்லது கொஞ்சம் பாராட்டினாலோ அல்லது புகழ்ந்து பேசினாலோ நாம் தெனாவட்டாக மாறிவிடுவோம் என்றோ அவர்கள் கருதுவதுண்டு .
வீட்டு வேலைகளை செய்வது மனைவியின் கடமை இதில் என்ன பாராட்ட இருக்கிறது ? சம்பாதித்து போடுவது கணவனின் கடமை இதையெல்லாமா பாராட்ட வேண்டும் ? நாம் கொடுக்கும் காசுக்கு பொருளைத் தருகிறார்கள் இதில் பாராட்ட என்ன இருக்கிறது ? ஊதியத்திற்காக பணி புரிபவர்களுக்கு என்ன பாராட்டு வேண்டிக்கிடக்கு ? கல்வியை கற்றுகொள்ளவதும், சமத்தாக இருப்பதும் குழந்தைகளின் வேலை அதற்கொன்றும் பாராட்டு வேண்டியதில்லை! இப்படித்தான் நம்மில் அநேகர் நினைத்துக்கொண்டிருப்போம் . ஆனால் இதன் பின்னணியில் உள்ள யதார்த்தம் என்ன ??!!! நாம் அனைவருமே பாராட்டு, அங்கீகாரம், இதற்குத் தானே ஆசைப்படுகிறோம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் வேலைக்குப் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.வீட்டில் சமையல் செய்யும் மனைவிக்கோ அம்மாவிற்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு பேப்பரில் கிறுக்கி வைத்திருக்கும் குழந்தை அதனை ஓர் மிகப்பெரிய ஓவியமாக கருதி பெற்றோர்கள் தன்னை பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறது , விற்பனையாளர் தம்முடைய சேவையும், பொருளின் தரமும் எப்படியிருக்கிறது என்பதை பாராட்டின் வழியே வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். இவையெல்லாமுமே மிகச் சாதாரணமான யதார்த்தமான எதிர்பார்ப்புக்கள் மட்டுமே. இந்த எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப்போகும்போது அதன் விளைவுகள் விபரீதமாகவோ அல்லது வினைத்திறன் அற்றதாகவோ மாறிவிடும் என்பதுதான் உண்மை !
“மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் ஆணி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
இப்படி ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு ஒருவருடைய தன்னம்பிக்கையை நிச்சயமாக வளர்த்துவிடக்கூடிய ஓன்று . பாராட்டு என்பது , தாம் செய்யும் வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு என்பது , ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது. இப்படி பாராட்டு எனும் ஒற்றை வார்த்தையில் பல ஆயிரம் நன்மைகள் புதைந்துகிடக்கும்போது நாம் ஒருவரை பாராட்டுவதில் தயக்கம் காட்டுவது ஏன் ? பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
போலித்தனமான பாராட்டுக்களின் பின்னணியில் சுயநலமே ஒளிந்திருக்கும். பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை என்கிறது ஆய்வுகள்.
‘ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால்
ஊக்குவிப்பவரும் தேக்கு விற்பார் ‘
என்கிறது வாலியின் கவிதை.நாம் கொடுக்கும் ஊக்கமும் பாராட்டும் மற்றவரின் ஆக்கத்திற்கு நிச்சயமாக அடித்தளமிடும். ஊக்கமும், பாராட்டும் வெற்றி என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. பிறரை ஊக்கப்படுத்தும் போதும், பாராட்டும் போதும் ஒரு நல்ல செயல் நடைபெறுவதற்கான முயற்சியில் நாமும் சிறுதுளியாக இருக்கின்றோம். ஊக்குவிக்கும் போது பிறர் மனம் உற்சாகம் அடைவதுபோலவே பாராட்டுகின்ற போது நம் மனமும் பக்குவமடைகின்றது .ஒருவர் ஒன்றை செய்வதற்கு முன்னதான நமது ஊக்கமும், அவர் அதனை செய்துமுடித்தபின்னரான பாராட்டும் ஒருவரின் வாழ்க்கையை நிச்சயமாக புரட்டிப்போடக்கூடியது. நாம் ஒருவரைப் பாராட்டினால் அவர்களுக்கு மட்டுமே அந்த சந்தோஷம் தொற்றிக் கொள்வதில்லை. நம் மனதிற்குள்ளும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்பதுதான் யதார்த்தம்.
இதில் மற்றுமோர் விடயத்தினையும் நாம் கருத்தில்கொள்வது நல்லது, அதாவது யாரேனும் ஒருவர் மிகப்பெரிய சாதனைகளை செய்து முடித்தால் மட்டும்தான் நாம் பாராட்டியாக வேண்டும் என்பதற்கில்லை. சின்னச் சின்ன செயல்களில்கூட நம்முடைய பாராட்டுக்கள் ஒருவருக்கு ஊக்கம்கொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். சின்னச் சின்னப் பாராட்டில்தானே அன்பும் சந்தோஷமும் வளரும் ?
“இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே நாம் எல்லோரும் தலையாட்டுவோம்.“ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சலித்துக் கொள்ளுவோம் . ஆனால் அப்படியே நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் எத்தனை பேரை பாராட்டிக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி வரும்போது நமக்கே நம்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும் . ஏனெனில் எல்லோரும் நம்மை பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கும் நம்முடைய மனம் அடுத்தவரையும் நாம் பாராட்ட வேண்டும் என்ற யதார்தத்தினை மறந்தேபோயிருக்கக்கூடும் ! இங்கு, பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்” என நாம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்வதுதான் பிரச்சினையே ! மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கே இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஒரு ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும்.நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நாம் நிற்கும்போது, நம்மைப்பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என நினைத்து விட்டால் போதும், நம் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவுகிறது. தனிமனித வளர்ச்சி தானே சமூக வளர்ச்சியின் ஆதாரம்! சின்னச் சின்னப் பாராட்டில் அன்பும் சந்தோஷமும் வளரும்.
30 total views, 12 views today