புதிய கிறிஸ்மஸ் !
சேவியர்.தமிழ்நாடு
கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மின்சாரத்தைத் தின்று வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருக்கிறன. வீதிகளில் தற்காலிகக் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் விளம்பரப் பதாகைகளோடு அசைந்தாடுகின்றனர். வீடுகளில் நட்சத்திரங்கள் அந்தஸ்துக்கு ஏற்ப அசைந்தாடுகின்றன. கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது ! அது மகிழ்வினை அறிவித்துக் கொண்டிருக்கிறது.
எனில், கிறிஸ்மஸ் வெறும் ஆனந்தத்தின் மேல் கட்டமைக்கப்பட்டதா ? கொஞ்சம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய பெத்லேஹேம் வாசலுக்குச் சென்றால் அங்கே பரபரப்பின் உச்சத்தில் புரண்டு கொண்டிருந்த நகரைப் பார்க்கலாம். எல்லோரும் பிஸி பிஸி என ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே தாய்மை நிலையிலிருந்த அன்னை மரியாளை எங்கே தங்க வைப்பதெனத் தெரியாமல் கணவர் யோசேப்பு கலங்குகிறார். கடைசியில் சத்திரங்கள் நிராகரித்து விட தொழுவத்தில் அடைக்கலமாகின்றனர்.
சத்திரக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல ! அவர்கள் கொடுமைக்காரர்கள் அல்ல ! ஆனால் பிஸி மனிதர்கள். அவர்களுக்கு வேறெதற்கும் நேரமில்லை. வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்தார்கள். மக்களின் பிஸி வாழ்க்கை இயேசுவை வெளியே தள்ளி கதவை அடைக்கிறது. அது நமக்கான முதல் எச்சரிக்கை. நமது பிஸி வாழ்க்கை, நமது வாழ்விலிருந்து, இல்லங்களிலிருந்து, இதயங்களிலிருந்து இயேசுவை வெளியேற்றி தொழுவத்துக்கு அனுப்பி வைக்கிறதா ?
அடுத்த ஒரு நிகழ்வில், மழலை இயேசு சிறுவனாய் வீட்டில் இருக்கிறார் அவரைக் கண்டு பணிந்து கொள்கின்றனர் தூரதேச ஞானியர். விலையுயர்ந்த பரிசுகளையும் வழங்குகின்றனர். கிறிஸ்மஸ் பரிசளிப்பின் காலம். ஆனால் எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி வாய்க்கிறதா ? தனக்கு எதிராய் ஒரு அரசன் பிறந்திருக்கிறானா என, ஏரோதின் வன்மத்தின் கட்டளை அந்த ஊரில் பூட்ஸ் கால்களை இறக்கியது. இரக்கத்தைக் காலடியில் புதைத்தவர்கள், பாலகர்களைத் தேடி வாள்களோடு அலைந்தார்கள். இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைகள் எல்லாம் யானை மிதித்த ரோஜா மலராய் அழிந்தன. “இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது; ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது.” என்ற இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகள் எத்தனை வலிமிகுந்தவை என்பதை பெத்லஹேம் பதற்றத்துடன் எதிர்கொண்டது.
கிறிஸ்மஸ் ஒரு தெய்வக் குழந்தையின் வருகையையும், பல பெத்லேகேம் குழந்தைகளின் அழுகையும் இணைத்துக் கட்டிய வரலாறு. இன்றும் நமது கொண்டாட்டத்தின் வீதிகளில் எத்தனையோ பேர் இழப்புகளின் வலி சுமந்து அலைகிறார்கள். ஆறுதல் கொடுக்க யாராவது வரமாட்டார்களா எனும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள். நிராகரிப்பின் வலியும், புறக்கணிப்பின் வலியும் சுமந்து கலங்குகிறார்கள். நமது பார்வை, இயேசுவுக்கு பட்டுத் தொட்டில் கட்டுவதில் மட்டும் இருந்தால் கிறிஸ்மஸ் அர்த்தமிழக்கிறது. அந்த தெருவோர அழுகைக் குரல்களுக்கு ஆறுதல் காட்டுவதில் இருந்தால் கிறிஸ்மஸ் அர்த்தம் பெறுகிறது !
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் காலம் தான். அது எல்லோருக்குமான கொண்டாட்டமாய் இருக்க வேண்டும். கிறிஸ்மஸ் மகிழ்ச்சியின் காலம் தான், அது எல்லோருக்குமான மகிழ்ச்சியாய் மாற வேண்டும். கிறிஸ்மஸ் மீட்பின் தருணம் தான், அது எல்லோருக்குமான மீட்பாய் மலரவேண்டும். அதற்காக நாம் இதயத்தைத் திறந்து இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, கரங்களைத் திறந்து எளியவர்களையும் தீண்டவேண்டும். தெருக்களில் இனிமேல் சிரிப்பின் பேரொலி எழட்டும். ஏழைகள் இனிமேல் தோழர்கள் ஆகட்டும். அப்போது கிறிஸ்மஸ் அர்த்தப்படும் ! அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்து !
21 total views, 3 views today