ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

  • பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து)

தீயவற்றைப் புதையுங்கள்!

மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த இனிமையான நினைவுகளே மீண்டும் மீண்டும் தோன்றி உள்ளத்தைப் பாராமாக்குகையில்; ஏமாற்றங்களும், துரோகங்களும், வலிகளும், இழப்புகளும், தோல்விகளும் நிறைந்த நினைவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் சொல்லாமலே நாம் உணர்ந்துகொள்ளலாம்.

தீய நினைவுகள் நம்மிடத்தில் தோன்றுவதன் மூலமாக நம்மைச் சோகத்தில் ஆழ்த்தி நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் நம்மைக் கட்டிப்போட்டுவிடுவதோடல்லாமல்; நம்மோடிருக்கும் நிகழ்கால மனிதர்களையும் பாதித்துவிடுகின்றது. நினைவுக்கு வரும் துயர நிகழ்வுகளை நாம் சரியாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் இவை தொடர்ந்து வந்து நம்மை இயலாமை மனிதர்களாக்கி இவ்வுலக வாழ்வை இருளாக்கிவிடும்.எத்தகைய கடினப் பொழுதுகளையும் நாம் கடந்தாக வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து நம்மை அலைக்கழிக்கும்.இதுவே மனித வாழ்வின் நியதி. அதைச் சரியாகக் கையாள்வதே வாழ்க்கைப் பாதையைச் சரியாகக் கொண்டு செல்வதற்கான உக்தியாகும்.

நம்மை விரக்திக்குள்ளாக்கும் துயர நினைவுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வதென்பது நம் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது ஆகும்.பழைய துயர நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைப்பதால் நம் உள நிம்மதியே பாதிக்கப்படும். நம் நிகழ்கால வாழ்க்கை நிம்மதியாக மாற வேண்டுமெனில் நம் கடந்தகாலத் துயரங்களை நாம் புதைத்தாக வேண்டும். உண்மைகளை மறக்கவும் மறுக்கவும் முடியாதென்றாலும்; துயர்மிகு உண்மைகளை நாள்தோறும் நினைவுகளில் வளர்க்காமல் கடந்தகாலப் புதைகுழியிலேயே புதைத்திடல் வேண்டும்.
சமாதியாக்கிவிடுதல் ஒன்றும் உடனேயே சாத்தியமில்லைதான் என்றாலும் நினைவுகளில் நீரூற்றி வளர்க்காமல் வேறு செயல்களிலும் நல்ல மனிதர்களோடும் அதை மறத்தல் வேண்டும்.

பின்வரும் வழிகளில் உள்ளத்தைக் கையாள்வதனூடாக நம்மைத் துயரத்தில் தள்ளும் நினைவுகளில் இருந்து வெளிவரலாம்.

      • உள்ளத்தைப் புதிய பாதையில் செலுத்திப் புதிய குறிக்கோள்களை அமைத்துக்கொள்தல் வேண்டும்.
      • உங்களை ஏமாற்றிய மனிதர்களையோ, சூழ்நிலைகளையோ,தோல்விகளையோ எண்ணாமல் அந்த நேரத்தில் நமக்குத் துணையாக இருந்த மனிதர்களை நினைவில் கொண்டு நீங்கள் எத்தகைய நற்பேறு வாய்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      • கடினமான சூழ்நிலைகளிலும் யாருமற்றுத் தனித்திருந்தீர்களானால்; அத்தகைய சூழ்நிலையைத் தாங்கும் சக்தியை நீங்கள் கொண்டிருப்பதற்காய் உங்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறிக்கொள்ளுங்கள்.
      • கற்பதற்குக் காலமில்லையென்பதால் உங்களுக்குப் பிடித்த புதிய திறன்களைக் கற்பதில் உள்ளத்தைச் செலுத்தி அமைதியை நாடுங்கள்.
      • தியானங்கள் மூலமாக உள்ளத்தை ஒருமைப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
      • நம்பிக்கை நிறைந்த ஒருவரிடம் உங்கள் துயரங்களைப் பகிர்ந்துகொள்வதனூடாக உள அழுத்தத்தைக் குறைக்கலாம்.ஆனாலும் தேர்ந்தெடுக்கும் நபர் குறித்து விழிப்புணர்வுடனேயே இருங்கள்.
      • இறைநம்பிக்கை உடையவராக இருந்தால் இறைவனோடு சண்டை போடுவதற்காகவேனும் ஆலயம் செல்லுங்கள். அந்தச் சூழ்நிலை உங்கள் உள்ளத்தற்கு இதமாக அமையலாம்.
      • செலவுதானென்றாலும் இயன்றளவு உங்களால் முடிந்த பயணங்களை மேற்கொள்ளுங்கள். புதிய சூழ்நிலைகளும், புதிய மனிதர்களும் உங்களுக்குப் புதிய பட்டறிவைத் தரக்கூடும்.
      • உங்கள் உள்ளத்தில் தோன்றுவனவற்றை மனிதர்களிடத்தில் சொல்லும் நம்பிக்கை வரவில்லை என்றால் வார்த்தைகளாகவோ, எழுத்துகளாகவோ கவிதைகளாகவோ வெளிப்படுத்துங்கள். நினைவுகளானது உள்ளே இருக்கும்வரைதான் உள்ளத்தை அழுத்திக்கொண்டே வலியை அதிகமாக்கும்.அதை வெளியேற்றுவதற்கான வழியைக் கண்டறிந்தீர்களானால் பாதி வெற்றியை எட்டிவிடுவீர்கள்.உளச் சுமையை எழுத்துகளாக்கிக் காகிதத்தில் கொட்டிவிடுங்கள்.சுமை காணாமல் போய்விடட்டும்.
      • உங்கள் கடந்த காலத்தோடு நிகழ்காலத்தை ஒப்பிட்டு அதுபோல் நடந்துவிடுமோவென முடிச்சுப்போட்டு மேலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கடந்தகாலம் கடந்ததாகவே போய்விட்டது. அதை நிகழ்கால மனிதர்களிடத்தில் தேடி மேலும் உள உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.
      • உங்களுக்கு நடந்த தீயவைகளிலிருந்து கற்றுக்கொண்ட நல்லவைகளைப் பட்டியலிடுங்கள். அவை தீயவற்றிலும் நல்லவற்றைக் காணும் உளப் பக்குவத்தைத் தரும்.
      • அதிகம் நாட்டமுள்ள பொழுதுபோக்குகளில் உங்கள் சிந்தனையைத் திருப்புங்கள்.இசை, சமையல்,வாசித்தல்,நடனம்,பயணம்,தோட்டம், விளையாட்டு என எதுவெல்லாம் உங்களைத் தேற்றுமோ அதையெல்லாம் செய்து உங்கள் உள்ளத்தைத் தெம்பாக்குங்கள்.
      • இழப்புகளைக் குறித்து வருந்தும்போதெல்லாம் அதையும்தாண்டி நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களைக் கொண்டாடுங்கள்.

உங்கள் வாழ்வில் நிம்மதி வேண்டுமானால் உங்களை இறுகப் பிடித்திருக்கும் துயர நினைவுகளை அப்படியே புதைத்துவிட்டு உங்களுக்கான வாழ்வை வாழத் தொடங்குங்கள். நிகழ்காலத்தின் நல்ல தருணங்களை அனுபவிக்கப் பழகுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. உங்கள் உள்ளம்தான் உங்களுக்கான சாத்தானும், தேவதையும் என்பதை உணர்ந்துகொண்டால் தீயவற்றை விரட்டிவிட்டு நல்லனவற்றைக் கொண்டாடுவீர்கள். உளமெனும் குரங்கு தீயவற்றை எண்ணித் தாவும்போதெல்லாம் உங்கள் தன்னம் பிக்கைகொண்டு அதைக் கட்டிப்போட்டுவிடுங்கள். உங்கள் உள்ளத்தின் தேவதையை உணர்ந்துகொள்ளத் தொடங்கும்போதுதான் உங்களுக்கான மாற்றம் பிறக்கும்.
      
      

24 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *