‘ஆசைமுகம் மறந்து…..’ (சிறுகதை)

  • ரஞ்ஜனி சுப்ரமணியம் -(இலங்கை)

துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.
வெண்மை நிறமான கடதாசிப் பெட்டிதான் அவளது தெரிவு. இயன்றளவில் பிளாஸ்டிக் பாவனை குறைய வேண்டும். லஞ்ச் பேப்பரை அதற்குள் சமச்சீருடன் வைத்து அளவான கரண்டியினால் மூன்று கரண்டி வெண்சம்பா சோறு. முத்துமுத்தான பதத்தில்.
முதலில் மேல்உச்சிப் பக்கமாக நட்ட நடுவில் குறுணியாக வெட்டிச் சமைத்த கோழி இறைச்சிக் கறி. அரைத்த இஞ்சி உள்ளி தக்காளி தாளிதப் பக்குவத்துடன் கடைசியாக கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்ட மினுமினுப்புடன் பிரட்டல் .
அதற்குத் தோதாக வலது பக்கச் சாய்வுக் கோணத்தில், தாளித்துக் கொட்டி தேசிப்புளி விட்ட வெண்மஞ்சள் நிற கத்தரிக்காய் பால்கறி. அது மஞ்சள் என்றால் இடது பக்கம் சமச்சீரான கோணத்தில் தேங்காய் பூ போட்ட பீட்றூட் வறை. மீண்டும் இடதுபுறமாக அதற்குக் கீழே பருப்புக் கறி. வலது புறமாக மிளகாய் தூள் பொடி போட்ட புடலங்காய் கூட்டு இளம்சிவப்பு நிறத்தில். அப்பளம் மோர் மிளகாய் தனியாக.
பார்த்தால் நிறக்கலவையே அட்டகாசமாக பிள்ளைகளை வாயூற வைக்க வேண்டும். வயிறாற உண்ண வேண்டும் . அளவான நியாயமான விலையில். இதுதான் பிளான். சத்துக்கும் நிறத்துக்கும் அமைய நாளுக்குநாள் மரக்கறிகள் மாறுபடும். கோழிக்குப் பதில் மீன் அல்லது முட்டை.
பக்கத்திலிருந்து உதவிகள் செய்து கொண்டிருந்த சுமித்திராவும், செல்வியும் இன்று ஊர்த்துளாவாரம் ஏதுமின்றி இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பகீரதி சில பொதிகள் தயார் செய்தபின் மிகுதியை அதே மாதிரி சுமித்ரா செய்து முடிப்பாள்.
மொத்தம் ஐம்பத்தொரு பொதிகள்.
எல்லாம் தயாரானதும் எட்ட நின்று அவற்றின் அழகை பல கோணங்களில் தானே ரசிப்பாள். செல்பியாக படமும் எடுப்பாள்.
கண்கள் இலேசாகக் கலங்கின. ‘இதற்குத் தானே அன்று ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற வரிகள் மனதின் தொலை தூரத்தில் எங்கோ ஒலித்தன.
இளவயதின் தீராத மன ஏக்கங்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது ஒன்றும் புதினமல்ல. பாடசாலை நாட்களில் தனக்கிருந்த ஏக்கத்தை இன்று பிறருக்குச் செய்தாவது தீர்க்கும் பகீரதியின் ஏக்கமும் நியாயமானதுதான்.
கடந்தகால நினைவுகளால் மனம் கனத்திருக்க அம்மாவின் குரல் அறைக்குள் இருந்து கேட்டது.
‘இங்கை ஒருக்கா வந்திட்டுப் போவன் பிள்ளை . எனக்கு நெஞ்சுக்குள்ளை இறுக்கிற மாதிரி இருக்குது .படபடவெண்டு அடிக்குது. டொக்டர் மாருக்கும் விளங்காத என்ன கோதாரி பிடிச்ச வருத்தம் எண்டு விளங்கேல்லை. எழும்பேலாம தலை உலாஞ்சுது.
பல்ஸ் விட்டு விட்டு அடிக்குது. கைகால் எல்லாம் குளிர்ந்து போச்சுதம்மா. ஒருக்கா என்னெண்டு பாரன் பிள்ளை’.
அம்மாவின் குரல் இறைஞ்சியது.
ஆனால் அது பிரமை என்று பகீரதிக்கு தெரியும். இன்று மட்டுமா இந்தக் குரல் கேட்கிறது.
‘உங்களுக்கு எப்பதான் வருத்தமில்லை? நாற்பது வருசமா இருக்கிறதுதானே. கேட்டு கேட்டு எனக்கு காதும் புளிச்சுப் போச்சுது. புலி வருது புலிவருது எண்டு ஒருநாளைக்கு உண்மையா வரேக்கை தெரியாமதான் போகும். அதென்ன , அண்ணை இங்கை வாற நாளில மட்டும் உங்களுக்கு வருத்தமில்லாமை போறதோ? குடுகுடுவெண்டு ஓடிப்போய் சிரிச்சுக் கொண்டு வாசல்லை நிப்பீங்கள்’
வார்த்தைகளில் நெருப்புத் துண்டங்களைப் பற்ற வைத்து எத்தனை நாள் எரித்திருப்பாள் அம்மாவின் மனதை. மனதில் அன்பிருந்தாலும், போய் பார்ப்பதும் கதைப்பதும் குறைவு. ஆனால் பகீரதியும் பாவம்தான்.
அவளுடைய பத்தாவது வயதில் இருந்து, நாற்பது வருசமாக கேட்டுக் கேட்டு அலுத்த குரல். ‘அம்மாவுக்கு என்னதான் தீராத வருத்தம்’ என்று சிறுமியாக இருந்த போது முதலில் பயந்து மனதால் உருகி, பின் ஆண்டுகள் உருண்டோட அலுத்து சலித்து மரத்துப் போன குரல் அல்லவா இது.
ஒரு வருடத்துக்கு முன் வரை அந்தக் குரல் மனதில் எந்தப் பரிதாப உணர்வையும் தரவில்லை. ஆனால் இன்று , அம்மா இல்லாத அந்த வெறும் அறை இத்தனை வலிக்கிறதே.
அதன் பின் நிதமும் தொடரும் சுய பச்சாதாபம் கலந்த குற்ற உணர்வை பகீரதியால் இன்றுவரை வெல்ல முடியவில்லை. ஆனாலும் கூட, தன் பக்கமும் நியாயம் இருப்பதாகவே அவளுக்குத் தோன்றும்.
இந்த மாதிரி மனம் கலங்கும் நேரமெல்லாம் கீதோபதேசம் போல அண்ணனின் குரல் ஒலிக்கும்.
‘எதெது எந்தெந்த நேரம் உன்னால் இயலுகிறதோ அததை அந்தந்த நேரம் செய். இயலாததை வசதியில்லாததை செய்ய முடியுமா? பின் அதை நினைத்து ஒரு போதும் வருத்தப்படாதே. அம்மாவை என்னோட வச்சுப் பாக்க எனக்கும் வசதியில்லை. இதுவும் எங்கட சீவியம்தான் ‘.
பின்னே இப்போ எதை நினைத்து அவள் வருத்தப்படுகிறாள். அம்மாவின் இறுதி நொடிகளை எண்ணி. நல்லவேளை அவசரமாக அவளைக் காரில் ஏற்றும் போது இரு கால்களையும் தூக்கி வைக்க வேண்டி இருந்தது. பாவமன்னிப்பு தந்திருப்பாள். நிச்சயமாக. தாய்மனது.
அம்மா நன்றாக சமைப்பாள். அழகி. தையற்கலை முதல் பல திறமைகள் அவளிடம் இருந்தன. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். ஆனால் எல்லாமே அம்மாவின் முப்பத்தைந்து வயதுவரை தான். அதன் பின்னான அவளது மனச்சோர்வுக்கு ஆயிரமாயிரம் நியாயமான காரணங்கள் உண்டு.
எந்த வைத்தியரிலும் நம்பிக்கை இல்லை. எந்த மருந்தையும் ஒழுங்காக எடுப்பதில்லை. எந்த நேரமும் கட்டிலிலே சாய்ந்தபடி.
தினம்தினம் அம்மாவின் கண்ணீர் திரண்ட விழிகளையும் சோகம் ததும்பும் முகத்தினையும், ஒழுங்காக வாராத தலைமுடியையும் பார்த்துப் பார்த்து பகீரதி ஏங்கித்தான் போனாள்.
இந்த வருத்தம் எப்போ மாறும்? எப்போ அனுங்காமல் இருப்பாள், எப்போ மலர்ந்து சிரிப்பாள், எப்போ அம்மா ஒழுங்காக சமைத்து வயிறார சாப்பாடு தருவாள் என்ற நினைவுடன் தான் பள்ளிக்கூட நாட்களும் கழிந்தன.
அம்மம்மா வந்து வீட்டில் நிற்கும் ஓரிரு நாட்களில் ருசியான சோறு கறி, கத்தரிக்காய் பொரியலுடன் இடியப்ப பிரட்டல், முட்டைச்சொதி, புட்டும் முருங்கைகாய் பிரட்டல் கறியும் கட்டாயம் கிடைக்கும். பள்ளிக்கூடம் கொண்டு போக அவளது கனவுப் பார்சலும் கிடைக்கும். அடுத்து அந்த நாட்கள் வருவதை வர்ணக் கனவாகக் கண்டபடி, உப்புச்சப்பில்லாத கான்டீன் சாப்பாட்டுடன் காலமும் கழிந்தது.
நண்பி வதனியின் பார்சல் சோற்றில் பங்கு கிடைக்கும் சில ருசியான நாட்கள் அவளுக்கு அற்புதமாகத் தெரிந்தன.
இன்று பகீரதி அருமையாக சமைக்கிறாள் என்றால் அது அம்மாவால்தான். சொல்லித் தந்து பழக்குவது ஒருவகை. இன்னொருவர் செய்யும் போது பார்த்துப் பழகுவது ஒரு கலை. செய்யாமல் ஏங்க வைத்து தானாக பழக வைப்பது இன்னொரு வகை. காலத்துக்குக் காலம் அம்மா ஒவ்வொரு ரகமாக இருந்தாள் .
அம்மா அன்பானவள்தான். தனக்கென ஆடம்பரங்கள் எதுவும் வேண்டாதவள். அற்புதமான பெண்ணாக இருந்திருக்க வேண்டிய அவளுக்கு மனநோயைத் தந்தது இயற்கையின் குற்றம்.
இப்படியாக, அம்மாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளன்று நிஜமாகவே திடீரென புலிவந்தது. அன்று நடந்தது, இன்று நினைத்தாலும் ஆவி துடிக்குது.
‘அக்கா, பார்சலை கொண்டு போய் டியூசன் கிளாசிலை குடுக்கட்டா ‘
சுமித்திராவின் குரல் நிஜத்திற்குக் இழுத்துக் கொண்டு வந்தது . பாடசாலை முடிந்து நேரே டியூஷன் வரும் ஐம்பது மாணவிகளுக்கான மதிய உணவுப் பொதிகளை சுமித்திரா ஆட்டோவில் கவனமாக ஏற்றினாள்.
இது பகீரதியின் இளவயது ஏக்கங்களுக்கான இன்றைய வடிகால் மட்டுமல்ல. தினசரி வருமானத்திற்கான கௌரவமான வழியும் கூட. ஆனால் இன்று மட்டும் கட்டணம் இல்லை. அம்மாவின் பிறந்தநாள்.
மிகுதி ஒற்றைப் பார்சல் மேசையில். அழகான புன்னகையுடன் கம்பீரமாக வீற்றிருந்தது. பகீரதி கைகளைக் கழுவிக் கொண்டு மேசையில் வந்து அமர்ந்தாள்.
உணவுப் பொதியை கையில் எடுத்து ஆசையுடன் தடவிக் கொடுத்தாள். நினைவுக் கடலில் நீந்தியபடி , மூடியைத் திறந்து ரசித்து ரசித்து உண்ணத் தொடங்கினாள்.

24 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *