சிறப்பாக நடைபெற்ற கௌசியின் “குருவிக்கூடு” நூல் வெளியீடு!
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு கடந்த 26.10.24 ம்திகதி சனிக்கிழமை மாலை 2 மணியளவில், தமிழ் பற்றாளர் திரு வி.சபேசன் அவர்களின் “தமிழர் அரங்கம்” டோட்முண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்வானவையின் 56வது நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த வாசகர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
முதலில் தமிழ்வானவை கீதம் திரையில் ஒலித்தது. அதன்பின் தமிழ்மொழி வாழ்த்தைச் செல்வி. பிரவீணா தயா தனது இனிமையான குரலில் பாடி மகிழ்வித்தார். வரவேற்புரையைப் பொன்.புத்திசிகாமணியாகிய நான் வழங்கி அனைவரையும் அன்போடு வரவேற்றேன்.
நூல் அறிமுகத்தை திருமதி ஜெகதீஸ்வரி மகேந்திரன் வழங்கினார். நூல் வெளியீட்டில் முதல் பிரதியை சிறந்த சமூக செயற்பட்டாளர் திருமதி. வதனி செல்வநாதன் பெற்றுக்கொண்டு சமூகச் செயற்பாடுகளில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திருமதி கௌசி அவர்களின் நூலைப் பெற்றுக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாகவும் அனைவரும் இதனை வாங்கி வாசிக்கவேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.இரண்டாவது பிரதியை எம்,ரீ.வி தொலைக்காட்சி நிறுவனர் தமிழ்மணி சிவநேசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.முனைவர் முனைவர் மு.இளங்கோவன் (தமிழ்ப் பேராசிரியர் பாண்டிச்சேரி) அவர்கள், நூலைப் பற்றிய சிறப்பான விமர்சன உரையை நிகழ்த்தினார். இது ஒளிப்பதிவாக திரையில் காட்டப்பட்டது.
பிரதம விருந்தினராக புகழ்பெற்ற “வெற்றி மணி” பத்திரிகை ஆசிரியர் திரு மு.க.சு சிவகுமாரன்; அவர்கள் கலந்து சிறப்பித்தார். நூலாசிரியர் திருமதி கௌசி சிவபாலன் அவர்கள் நீண்ட காலம் வெற்றிமணிப் பத்திரிகைக்கு எழுதிக் கொண்டு வருபவர். அவரது எழுத்துகள் வாசகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அவருக்கு எனது பாராட்டுகள். அவர் கட்டிய இக்குருவிக் கூட்டை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
பிரதம விருந்தினரின் வாழ்க்கைக் குறிப்பை தொகுப்பாக காணொளி வடிவில் நூலாசிரியர் திரையில் காண்பித்து சிறப்பு செய்திருந்ததுடன் தமிழ் வான் அவை சார்பாக வெற்றிமணி ஆசிரியரைத் தமிழருவி வானொலி இயக்குனர் மாசிலா நயினைவிஜயன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன் சி. சிவபாலன் அவர்கள் அன்பளிப்பும் வழங்கினார். வாசகர்கள், வரிசையில் நின்று நூலைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
ETR வானொலி அதிபர் திரு.த.ரவீந்திரன், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றிய தலைவரும் எழுத்தாளருமான திரு.வி.சபேசன். பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றிய உறுப்பினர்களான எழுத்தாளர் ஏலையா முருகதாசன், திரு. சுப்பிரமணியம், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உப தலைவர் திரு. அம்பலவன் புவனேந்திரன், ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் கவிஞர் ராம சம்பந்தன், திருமதி சாந்தினி துரையரங்கன், திரைப்பட இயக்குனர் திருமதி.சிபோ சிவக்குமாரன்,அறிவிப்பாளர்.திரு.முல்லைமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நூலாசிரியர் கௌசி அவர்களுக்கு திருமதி ஜெகதீஸ்வரி மகேந்திரன் கவிதையால் புகழ்ந்து நினைவுப் பரிசொன்றை வழங்கினார். தமிழ் மணி சிவனேசன் அவர்கள் நூலாசிரியருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். ஏற்புரையை நூலாசிரியர் மிகச் சிறப்பாக வழங்கினார். அனைவருக்கும் நன்றியையும் தெரிவிக்க மறக்கவில்லை.
நிகழ்வை நகைச்சுவையோடு தொகுத்து வழங்கிய திருசி.சிவவினோபனுக்கு பாராட்டுடன் பொன்னாடைக் கௌரவமும் கிடைத்தது. இந்நூல் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
24 total views, 12 views today