“எங்கட சனங்கள்”

சாம் பிரதீபன் ஒரு பன்முக ஆளுமை!
- திருமதி கி.நித்தியா(அதிபர்சண்முகத் தமிழாலயம்)
நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம் என தமிழத் திமிருடன் தொடர்கிறேன் நான்.
அண்மையில் ஒர் அரிய நிகழ்வில் கலந்துகொள்ளும் பேறு பெற்றேன். வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தின் 15வது நிறைவுவிழா ஒன்றுகூடல் அது. நான் 5 வயதில் இருந்து கற்றலுடனும் கற்பித்தலுடனும் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றும் ஓர் ஆசிரியை. இதுவரை எத்தனையோ அரங்கக் கலைகளையும் கூத்துவகைகளையும் கண்டு களித்திருக்கின்றேன். என்னுள் விமர்சனங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கணித்திருக்கின்றேன். கடந்த வார இறுதியின் சனிக்கிழமை (01.12.2024) அன்று சாம் பிரதீபனின் நாடகம் என்னை ஒரு கணம் நிலைகுலைத்தது. நெகிழவைத்தது. பெருமைப்படத் தூண்டியது.
“எங்கட சனங்கள்” தலைப்பிற்கும் நடிப்பிற்கும் ஒரு பாதை கூட விலகிச் செல்லாத கருத்தாளம் மிக்க கதைக்கட்டு. ஓரங்க நாடகங்கள் பலவற்றை நான் பார்த்திருக்கின்றேன். இது அத்தனை நாடகங்களுக்கும் புதிய அர்த்தத்தையும் அணுகு முறையையும் பிரித்துக்காட்டி அணி செய்திருக்கின்றது. எப்படி இவரால் இவ்வாறு அணியம் செய்ய முடிந்தது என்று நான் அசந்து போனேன். அண்ணனாய், தம்பியாய், தகப்பனாய், காதலனாய், தாயாய், தோழியாய், ஏன் காதலியாய்க் கூட தன்னை நிமிடத்துக்கு நிமிடம் தயார்ப்படுத்திக் கதையை நகர்த்துகிறார். இறுதியில் இது எங்களுக்கானது என்று கூறும் கட்டியத்தில் அத்தனை அர்த்தப் பொழிவுகளும் அடக்கப்படுகிறது.
இந்த நாடகத்தின்போது பெரியவர்கள் மட்டும் வாயைப் பிளக்கவில்லை. நான் ஒரு கண்ணால் சபையையும் திரும்பிப் பார்த்தேன். அத்தனை சிறுபிள்ளைகளின் வாயிலும் சிரிப்பும் பொலிவும் இருந்தது. இதுதான் ஒரு நாடகவியலாளனின் திறமை. நாடக நெறியாள்கையின் உத்திகள் அத்தனையும் புலம்பெயர் தேசத்தினருக்கும் தாயக உறவுகளுக்கும் சிறந்த கருத்தடி என நான் சந்தோசப்படுகிறேன். எத்தனையோ புத்தகங்கள் சொல்லாத கதைகளை ஒரு நாடகத்தால் சொல்லிவிட முடியும் என்று நான் அன்று உணர்ந்துகொண்டேன்.
இரண்டாம் மொழியாக தமிழைக் கற்றுக்கொடுக்கும் நாம், இவ்வாறான நாடகக் கலைஞர்களுடனும் நாடகப் பயிலகங்களுடனும் எமது பிள்ளைகளைப் பயணிக்க வைப்பதால் எங்கள் கலையும் தமிழும் உச்சத்தைத் தொடும் அல்லவா? இந்த நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு தமிழக் கல்வி எவ்வளவு அவசியம் என்று உணர்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு இவ்வாறான அரங்கக் கலைகளும் மிக அவசியம் என்பதை ஒரு தமிழாசிரியையாக நான் இங்கு அடிக்கோடிட்டுக் கொள்கிறேன். அவரது நாடகப் பயிலகத்தின் சிறுவர்களுக்கான சில உத்திகளையும் நான் அவதானித்திருக்கிறேன்.
புலம்பெயர் தமிழ் சிறார்களுக்கு இவர்களைப் போன்ற பன்முக ஆளுமை கொண்டவர்கள் ஒரு சிறந்த கொடையே.
என்றுமே உங்கள் கலையும் தமிழும் வாழட்டும் சாம்பிரதீபன்.
119 total views, 2 views today