குமரி கண்ட குமரன்

நம் பண்பாடு நெறியை வாழ்விலில் பதித்த இசையனுபவம்
ரசனைப் பகிர்வு : கானா பிரபா (அவுஸ்திரேலியா)

தன் நிலத்தை,தன் மக்களை நேசிப்பவனே உண்மையான கடவுள் என்றும், அவ்விதம் காவல் தெய்வமாக விளங்கிய முருகனையே தெய்வமாக வழிபட்டதாகவும் சங்க இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. முருகனைத் தலை சிறந்த வீரனாகவும், மன்னர்களின் வீரத்தையும், போர்த்திறத்தையும் ஒப்பிடும் போது அவனே ஒரு முன்மாதிரியாகவும் எடுத்தாளப்பட்டிருக்கிறான். “கொற்றவைக் குழவி” என்ற பெயரால் அழைக்கப்பட்டதன் பின்னணியில் கொற்றவைத் தாயின் மகனாக விளங்கிய இந்த முருகக் கடவுள், பஃறுளி ஆற்றின் பன்மலை அடுக்கங்களில் வாழ்ந்த மன்னனாக வாழ்ந்தவன் முருகன் என்றும், நடுகல் வழிபாட்டின் மாண்பையும் கவிஞர் அறிவுமதி தன் “தமிழ் முருகன்” என்ற நூலில் சங்க இலக்கிய வரலாற்றுத் தேடலின் ஆய்வு ரீதியான நூலாகப் பகிர்ந்திருக்கிறார்.

இரு தசாப்தங்களுக்கு முன்னர் நமது மண்ணின் எழுச்சிப் பாடல்களில் ஒன்றான…… பாடலில் நித்யஸ்ரீ மகாதேவன் “அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்” என்று அறிவுமதி அவர்கள் எழுதிய போது எப்படி எங்கள் கடவுளை “அண்ணனுக்கு” ஒப்பிடலாம் என்று கண்டனக் குரல்கள் எழுந்தன.அந்த நேரத்தில் அவர் தன் ஆராய்ச்சிப் பகிர்வின் வழியாகத் தக்க பதிலடியும் கொடுத்தார். ஆனால் வேதனை என்னவென்றால் இப்படியாக நம் வரலாறு தெரியாமல் மெய் வரலாறு கூறுபவர்களையே இழித்துப் பேசுவது நம் மரபு.

ஈழத்தின் நம்பிக்கை தரும் ஒரு இசை இளவல் மதீசன்,
மக்கள் படைப்பாக “குமரி கண்ட குமரன்” என்ற
இசைப் பெட்டகத்தை ஆக்கியளித்துள்ளார்.

இது காலம் அவருக்குக் கொடுத்த பணியோ தெரியவில்லை. ஆச்சரியமாக, மதீசனே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த முருகக் கடவுளின் தாய் “கொற்றவை” பெயர் கொண்ட இசை வட்டை முன்னர் வழங்கியுமிருக்கிறார். ஈழத்தின் இசை, நாடகங்கள் அவை மரபு வழி புராண இதிகாசக் கதைகளாகவோ அன்றி சமூகப் பிரச்சனைகளின் பிரதிபலிப்பாகவோ, தேச விடுதலை கொண்ட கருப்பொருளிலோ எழுந்த போது ஒவ்வொரு படைப்புக்கும் புதிது புதிதாகப் பாடல்கள் ஆக்கப்பட்டு அவை இசை வடிவம் கொடுக்கப்பட்டு மேடையேறி முடிந்ததும் கரைந்து போய்விடும் அவல நிலையே பெரும்பாலும் நிகழ்ந்து வருகிறது.

‪தேச விடுதலைக்க்காகப் போராடும் களத்தில் எழுந்த பாடல்கள், போராட்டம் அழித்தொழிக்கப்பட்ட பின்னரும் தன் தாய்மண்ணின் மீதும், அதன் சமூக பொருளாதார மற்றங்களின் மீதும் கரிசனை கொண்டு எழும் பாடல்கள் என்று இரண்டு விதமான பண்பினைக் கொண்ட பாடல்களை நம் ஈழத்தவர் சமைத்திருக்கிறார்கள். பின்னையது நடப்புக் காலம். ‬‬“குமரி கண்ட குமரன்” பாடல்களும் அத்தகையதொரு பிரிவுக்குள் வருகிறது. குறியீட்டையும், இந்தப் பாடல் தொகுப்பின் பின்னால், தசாப்தத்துக்கு முன் நம் இனம் கண்டதொரு வீழ்ச்சியின் படிமங்களைக் குறியீட்டாகக் காட்டி நிற்கின்றது. ஒவ்வொரு பாடல்களும் இசை, பயன்படுத்தப்பட்ட வாத்திய அலங்காரங்கள், குரல்கள், தாளக்கட்டு என்று வெவ்வேறு வகையினதாகத் தனித்து நிற்கின்றன. ஆனால் அவை கூட்டாகச் சேரும் போது பக்தியும், வீரமும், வீழ்ச்சியும், நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கின்றது.

ஈழத்துப் போர்க்காலத்து இசைப் பாடல்களில் ஒருவகையினதான துன்பியல் பாடல்களின் சாயலில் தளர் நடையோடும் இசைக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் விடியாத் துயரோடு இருக்கும் தமிழ் மண்ணின் ஏக்கக் குரலாய்த் தொனிக்கின்றது. வரிகளைக் கொணர்ந்த பாடலாசிரியரோடு, பாடகர்கள், ஓலிச்சமப்படுத்தலைக் கையாண்டோர், உப இசை வாத்தியக்காரர்கள் என்று எல்லோருமே இசையமைப்பாளர் மதீசனின் “குமரி கண்ட குமரன்” பாடல்களின் வெற்றிக்கு ஒத்திசைவோடு உதவியிருப்பதைப் பாடல்களைக் கேட்கும் போது புரிகிறது.

இன்றைக்குச் சாமியறையில் இருக்கும் சுவாமிப் படங்களில் இருந்து, ஒரு அரசர் காலத்துப் படம் வரை ஏராளம் நகை நட்டுகள் அணிந்து, பட்டுப் பீதாம்பரங்கள் கொண்டதொரு அமைப்பிலேயே எங்கள் வழிபாட்டு முறை வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் தமிழர் பண்பாட்டுக்கும், வாழ்வியலுக்கும் முற்றும் முரணானதொரு கலாசாரப் படிமத்துடனேயே வாழ்ந்து பழகி விட்டோம் என்ற உண்மையை ஓவியர் ட்ராஸ்கி மருது. அன்றைய காலத்தில் அரசனும் சரி, குடி மக்களும் சரி மிகவும் எளிமையானதொரு தோற்றத்தில் வெற்றுடலும், இடுப்பில் அரைத் துண்டுமாகவே தம் தோற்ற வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதனையே நாடு காண் பயணி மார்க்கோ போலோவும் இந்தியாவில் இம்மாதிரியானதொரு வாழ்வு முறையைக் கண்டு அதிசயத்து மன்னனும் மக்களும் ஒருவர் ஆயினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஓவியர் மருதுவின் ஓவியங்களிலும் மன்னராட்சியையோ, அல்லது அரசனையோ சித்தரிக்கும் போது இந்த எளிமையை உணரலாம். அவரின் பேச்சு முடிந்ததும் இந்தத் தாக்கத்தில் தானா மருது பணி புரிந்த தமிழ்ப் படமான தேவதையில் மன்னராட்சியின் காட்சிப் புலத்தை எளிமைப்படுத்தியதை உதாரணம் காட்டலாம். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கலை இயக்குநர் சந்தானம். இந்தப் படம் பேசப்பட்ட அளவுக்கு யதார்த்த பூர்வமாக அணுகிய அந்த அரசர் காலத்துக் காட்சித் திறன் அதிகம் பேசப்படவில்லை. இந்த இடத்தில் இயக்குநர் செல்வராகவனின் நேர்த்தியான உழைப்பைப் போற்றாமல் இருக்க முடியாது.

தேவதை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தமிழனின் அடையாளத்தை இன்னது இன்னதாகக் காட்டி வர்த்தக ரீதியில் தோல்வி கண்டவை. நிஜம் தோல்வி கண்டு கற்பனை உலகமும் நமக்கு அந்நியமான பண்பாடும் தான் நெருக்கமாக இருக்கிறது. ‪ஈழத்துக் கூத்து மரபில் எழும் மேடை முயற்சிகளில் பண்டைய பாரம்பரிய ஆடை, அணிகளுக்கே முக்கியம் கொடுப்பதையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். ‬‬‪தலைமுறையாய்க் கொண்டாடிய கிராமத்துக் காவல் தெய்வங்கள் மங்கிவிட்டன.‬‬‬இங்கே காட்சிப்படுத்தலில் அந்த வரலாற்றை மீள நிறுவியிருக்கிறார்கள். மலையை ஆண்ட மன்னன் முருகன்,கடல்கோள் காவு கொண்ட இனத்தின் எச்சமாய் நாம், குமரி முனைக்குத் தெற்கே முருகனுடைய மலை என்று அறிவுமதி ஏக்கத்தோடு பதிவு செய்ததன் வரலாற்று இசைப் பதிவாய் இப்படைப்பு மின்னுகிறது. இன்றும் தென் ஈழத்தில் மலை தோறும் வழிபடப்படுப்படும் எம்பெருமானையும் இப் பெட்டகம் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சிறு குறை மட்டுமே இப்படைப்பில். ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்தின் கண்ணாடியாகத் திகழ வேண்டும் என்பதை மதீசன் மீண்டும் தன் இசைப் படையணியோடு மெய்ப்பித்திருக்கின்றார். இசையமைப்பாளர் மதீசனுக்கும்,, “குமரி கண்ட குமரன்” இசை ஆக்கத்தில் பங்கெடுத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். பாடலைக் கேட்க hவவிள:ஃஃறறற.லழரவரடிந.உழஅஃறயவஉh?எஸ்ரீ7றnறுஐனப–சரு

143 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *