இந்தக் கடல் இப்படித்தான்!

எனக்கு
ஒரு விருப்புண்டு,
கௌதமா!
வெட்டுக்கிளிகள் பற்றிக்
கதைகள் சொல்லும்
ஓர் ஆதிவாசி
தேநீர்க் காலங்களோடு
அடிவான வர்ணங்களைக்
குலைத்து விளையாட
ஒரு சித்திரக்காரன்
தொலை பயணங்களில்
பிரபஞ்சத்து வெளிகளோடு
கண்களில் சிறகணியும்
கந்தர்வன்
இடிந்த அரண்மனைகளதும்
உடைந்த சிற்பத்தினதும்
கதைகளைப் பேசித்திரியும்
ஆதி உயிர்
பின் நவீனத்துவத்திற்குப் பின்
என்ன என்பதைப் பேசி
முரண்பட்டு ஓயுமொரு
தோழமைக்காரன்
சுதந்திரம் நிறைந்த வாழ்க்கையில்
காதலோ
அல்லால்
காதல் செழித்த வாழ்க்கையில்
சுதந்திரம் காண்
வாழ்வுப் பெருங்கலைஞன்
கண்ணியங்களையும்
மரியாதை நிமித்தங்களையும்
கடந்து
மனத்துகள்களில்
பேரண்டம் செய்யவும்
மென் அம்பெய்து கொல்லவும்
உரிமைக்காரன்!
மாறன்.
வேண்டும்!
இவையெல்லாம்
பேராசைச் சொப்பனங்கள்
என்றால்..
அதற்கென்ன?
இந்தக் கடல்
இப்படித்தான்!
140 total views, 4 views today