பூமியிலிருந்து நட்சத்திரங்கள் வரை: விண்வெளியை ஆளப்போகும் மனிதர்கள்

னுச.நிரோஷன் தில்லைநாதன்.(யேர்மனி)

நீங்கள் ஒருபோதும் பிற கிரகங்களுக்குப் பயணம் செய்வது, விண்வெளியில் வாழ்வது, அல்லது சூரியனின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவது போன்ற கனவுகளைக் கண்டு இருப்பீர்களா? இது சினிமா சூப்பர் ஹீரோக்களின் கற்பனையாகத் தோன்றலாம். ஆனால், விஞ்ஞானிகள் இதைச் சாத்தியமானதென நம்புகின்றனர்! நம் நாகரிகத்தின் முன்னேற்றத்தை அளவிட உதவும் ஒரு விசேஷமான அளவுகோல் உள்ளது. இதை கார்டஷெவ் அளவுகோல் என்று அழைக்கின்றனர். இது நாம் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறோம் என்பதை மட்டும் அல்லாமல், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை வெளிப்படுத்துகிறது. மனிதகுலம் உண்மையான விண்வெளி சூப்பர் ஹீரோக்களாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.

நாம் வசிக்கும் பூமி, நம் தொழில்நுட்பத்தின் மற்றும் நாகரிகத்தின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால், நம் நிலைதான் கார்டஷெவ் அளவுகோலில் பூஜ்ஜிய நிலை (Level 0) என்ற துவக்கப் பகுதி. இன்றும் நாம் நிலக்கரி, எண்ணெய், மற்றும் வாயு போன்ற இயற்கை வளங்களை எரிக்கின்றோம், அவை நம் வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆற்றலை வழங்குகின்றன. சில இடங்களில் காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துகிறோம், ஆனால் நம்மால் இதை முழுமையாகக் கையாள முடிவதாக இல்லை.

முதலாம் நிலைக்கு (Level 1) செல்வதற்கு, பூமியில் கிடைக்கும் அனைத்து இயற்கை ஆற்றல்களையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும் அளவுக்கு நாங்கள் வளர வேண்டும். இதற்கான சவால்கள் மிகப்பெரியது: மாசுபாட்டை எதிர்கொள்வது, மற்றும் ஒட்டுமொத்தமாக ஒரு கிரகமாகச் செயல்படுவது. விஞ்ஞானிகள் இதை அடைய எங்களால் இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் எனக் கருதுகின்றனர்.

Level1 நிலையை அடையும்போது, ஒரு கிரகம் முழுவதும் ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியும். காற்றழுத்தத்தைத் திருத்துதல், புயல்களைத் தடுக்குதல், அல்லது வெப்பமான பகுதிகளில் மழையை உருவாக்குதல் போன்ற விஷயங்களைக் கையாளலாம். மேலும், ஆற்றலைச் சமமான முறையில் பகிர்ந்து, ஒவ்வொருவருக்கும் தேவையான அளவுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது: நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். யுத்தங்களை நிறுத்தி, வளங்களை வீணாக்காமல், மற்றும் கிரகத்தைக் காப்பாற்ற வேண்டும். பள்ளியின் குழு முயற்சியைப் போல, அனைவரும் ஒன்றாகச் செயல்படும்போது மட்டுமே வெற்றி பெற முடியும்.

சரி அடுத்து இரண்டாம் நிலையை (Level2) நோக்கி முன்னேறுவோம். இப்போது நாம் சூரியனின் முழு ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியும். சூரியனின் ஆற்றல் 10²⁶ வாட்ஸ் என்ற அளவில் உள்ளது. இங்கு டைசன் ஸ்பியர் (Dyson Sphere) என்ற கற்பனை அமைப்பு அறிமுகமாகிறது. இது சூரியனைச் சுற்றி ஒரு பெரும் கட்டமைப்பை உருவாக்கும் மூலம் அதில் இருந்து முழு ஆற்றலையும் பிடிக்கும் கற்பனையாகும்.

இந்த டைசன் ஸ்பியரை உருவாக்கினால் என்ன செய்யலாம் தெரியுமா? மனிதர்கள் பிற கிரகங்களுக்கு எளிதில் பயணம் செய்யலாம், விண்வெளி வாழ்விடம் கட்டலாம், அல்லது ஆற்றல் தட்டுப்பாடுள்ள கிரகங்களில் புதிய சக்தியை உருவாக்கலாம். ஆனால் இதைப் படைக்கும் செயல்முறை மிகப்பெரிய பணியுடன் கூடியதாயிருக்கும். இதை உருவாக்குவது LEGO மூலம் ஒரு நகரத்தின் அளவுக்குக் கட்டடத்தைக் கட்டுவதற்குத் திரிந்தது போல இருக்கும்!

மூன்றாம் நிலை (Level 3) என்பது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இந்நிலையில், நமது விண்மீன் பேரடையின் (Galaxy) அனைத்து நட்சத்திரங்களின் ஆற்றலையும் கட்டுப்படுத்த முடியும். விண்மீன் பேரடைகளுக்குள் நடமாடுதல், புதிய கிரகங்களை உருவாக்குதல், மற்றும் வேற்றுலக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவை சாத்தியமாகிறது.

Level 3 நிலை உயிர்கள் இந்த விண்வெளியில் உள்ளது என்று எடுத்துக்கொள்வோம். அவர்களுக்கு நாம் எப்படி தெரிவோம் தெரியுமா? நாம் எறும்புகளைப் பார்க்கும்போது நாம் என்ன நினைப்போமோ, அதே போன்று தான் அந்த Level 3 நிலை உயிரினங்களுக்கு நம்மைப் பார்க்கும்போது தோன்றும். அவர்கள் நம்மை கவனிக்கவே கூட வாய்ப்பு இருக்காது!
Level 1 நிலை முதல் Level 3 நிலை வரை முன்னேறுவது ஒரு வீடியோ கேம் போன்றது. நிலை உயரத்துடன் சிக்கல்களும் அதிகரிக்கின்றன. Level 0 முதல் Level 1 செல்ல, நாம் கிரகத்தைக் காக்க வேண்டும் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். Level 2 இற்கு செல்ல, விண்வெளியில் கட்டுமானங்களை உருவாக்கவும், அதில் வாழ்வதற்கும் திட்டமிட வேண்டும்.

சில விஞ்ஞானிகள் கருதுவது என்னவென்றால், பல நாகரிகங்கள் Level 0 நிலையைவிட மேலே செல்வதற்கு முன்னே, யுத்தம் அல்லது மாசுபாட்டால் தங்களை அழித்து விடுகின்றன என்று. இந்த எண்ணம் கொஞ்சம் பயமூட்டுவது போல் தான் இருக்கிறது. இருந்தும் இது நமக்கு நமது பூமியைக் காப்பாற்றுவதின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

நண்பர்களே, நாம் இன்னும் ஆரம்பத்தில் தான் இருக்கிறோம். நாம் சூரியனின் முழு ஆற்றலை ஒரே ஒரு நொடிக்குப் பிடித்தாலே போதும், அது பூமியில் வாழும் நமக்கு 500,000 ஆண்டுகளுக்குப் போதுமானது. நாம் முதல் பெரிய படியை எடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இதை வெற்றியாக்க, முதலில் நமது பூமியை நாம் காக்க முயற்சிக்கவேண்டும்.

44 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *