புகை பிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
புகை பிடிப்பதால் மனித உடலுக்குக் கேடு, குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், இருதய நோய், அதிகமான கொலஸ்டிரால், பக்கவாதம், கண், தோல், பற்களில் பிரச்சனைகள் என்று எண்ணற்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், புகைபிடிக்கும் பழக்கம் ஒரு சராசரி மனிதனின் ஆயுளைக் குறைக்கின்றது. ஆனால் இதில் உள்ள ஆச்சரியம் என்ன தெரியுமா? பல வருஷங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் இன்று கூட புகை பிடிப்பதை நிறுத்தி விட்டால், உங்களால் நீண்ட காலம் உயிருடன் வாழ முடியும். அது ஏன் என்று அறிய விரும்பினால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
புகை பிடிப்பதால் ஆபத்து என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை மட்டும் அல்லாமல், இது மேலும் பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகைபிடிப்பவர்கள் இப்பழக்கத்தை நிறுத்த யோசித்தால், அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள், ஏனென்றால் இந்தப் பழக்கத்தை தாமதமாகக் கைவிட்டாலும் கூட, அவர்கள் தங்களின் ஆயுளை நீடிக்க இயலும் என்பது ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்சு, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிப்பவர்கள், 3 முதல் 50 ஆண்டுகள் வரைக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் அறுபது வயதைத் தாண்டி புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களின் ஆயுள் காலம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் புகைப் பழக்கத்தை விட்ட உடனே உங்கள் உடலில் என்ன நடைபெறும் தெரியுமா? வெறும் 20 நிமிடங்களில் மட்டுமே உங்கள் இருதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் நோர்மலுக்கு வந்து விட ஆரம்பித்து விடும். எட்டில் இருந்து 12 மணி நேரங்களுக்குள், புகை பிடிப்பதால் உங்கள் இரத்தத்தில் கலந்த கார்பன் ஓராக்சைடு (carbon monoxide) கொஞ்சம் கொஞ்சமாக நீங்கத் தொடங்கும். புகை பிடிப்பதால் பொதுவாக மாரடைப்பு அதாவது Heart attack வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். வெறும் 24 மணி நேரம் புகை பிடிப்பதை விட்டாலே போதும், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையத் தொடங்கிவிடும். இது மட்டும் இல்லை, இன்னும் இருக்கிறது கேளுங்கள்!
மூன்றே மூன்று நாட்களுக்குப் பின்பே உங்கள் உடம்பில் உள்ள அனைத்து நிகோடினும் (nicotine) வெளியேற்றப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து உங்களுக்குச் சுவாசிப்பது கூட இலகுவாக இருக்கும். ஒரு சில வாரங்களில் இருந்து மாதங்களுக்குள் உங்கள் நுரையீரல் வழக்கம் போல் செயற்பட ஆரம்பித்து விடும். புகை பிடிப்பதை விட்டு வெறும் 1 வருடத்திற்குப பின்பு, புகை பிடிப்பதால் ஏற்பட இருக்கும் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதத்திற்குக் குறைந்துவிடும் என்றால் நம்ப முடிகின்றதா? இப்படியே ஆண்டுகள் போகப் போக மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே போகும்.
எனவே புகைபிடிப்பவர்களில் பலர் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” என்று கேட்பது போல், இவ்வளவு காலம் புகைத்த நாம் இனி இதனைக் கைவிட்டால் ஒரு பலனும் கிடையாது என்கிற கருத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்தக் கருத்து தான் தவறானது என்பது இன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். எனவே நண்பர்களே, புகைபிடிப்பதைக் கை விடுவதற்கு நேர காலம் ஒன்றுமே இல்லை! நீங்கள் புகைக்கும் பழக்கத்தை இன்று கூட கைவிட்டாலும், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது நிச்சயம்!
–DR. Niroshan Thillainathan
1,030 total views, 1 views today
1 thought on “புகை பிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?”