திருமந்திரத்தில் அட்ட வீரட்டம்

“கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலம்கைக் கொண்டுகொன் றானே”
குருடனைப் போன்ற அசுரன் (அந்தகாசுரன்) தான் பெற்ற வரத்தின் வலிமையால், உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்துகின்றான் என்று தேவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசனும் தன் மூவிலைச் சூலத்தால் (திரிசூலம்) அசுரனைக் கொன்றான். ஆணவம் ஒழிந்த இடம் ஆணவம் அழிய இறை அருள் வேண்டும் எனக்கூறும் பாடல் எண் 340
“கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி இட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே”
தட்சாயிணியாகப் பிறந்த பார்வதி தேவிக்குத் தகப்பனான மன்னன் தட்சன் ஒரு யாகம் செய்தான். அதற்கு முதல் பூசை பெற ஈசனை அழைக்காது அவமதித்தான். இது கொலைக் குற்றம் போன்றது. எனவே சிவபெருமான் சினம் கொண்டு யாகம் நடக்கும் இடம் சென்று தட்சனின் தலையை வெட்டி யாகத் தீயில் போட்டார். பின்பு பார்வதி தேவியும், மற்றவர்களும் வேண்ட அங்கிருந்த ஓர் ஆட்டின் தலையை தட்சனின் உடலில் பொருத்தி, இவன் சில காலம் இப்படியே இருக்கட்டும் என்று அருளிச் செய்தான். அகந்தை மறைந்த இடம் அகந்தை அழிய இறை அருள் வேண்டும் எனக்கூறும் பாடல் எண் 341
“எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்(கு) அச்சுதனை உதிரம்கொண் டானே”
எல்லா இடங்களிலும் பரவி, அகன்று, பரந்த இந்தப் பெரிய உலகை தாங்குவதற்கும், எல்லா உலகங்களும், உயிர்களும் ஒடுங்குவதற்கும் இடமாக உள்ள, சிவன் திருவடிகளை நினைத்து வணங்கும் தேவர்கள், கல்விச் செருக்கில் இருக்கும் பிரமனைக் கண்டு சினம் கொண்டனர். எனவே தேவர்கள் சினம் தணியச் சிவன் பிரமனின் ஐந்தாவது தலை அறச் செய்தான். அத்தலையின் குருதியைத் திருமாலை ஏற்கச் செய்தான். குரோதம் ஒழிந்த இடம்குரோதம் அழிய இறை அருள் வேண்டும் எனக்கூறும் பாடல் எண் 342
“எங்கும் கலந்தும் என்உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்(து) ஆழிசெய் தானே”
எங்கும் நிறைந்து கலந்திருக்கிற சிவபெருமான் என் உள்ளத்துள்ளும் எழுந்தருளியிருக்கின்றான். இப்பெருமான் ஆறு சமயங்களாகிய அங்கங் களுக்கு முதலானவன். அரிய வேதங்களை அருளிய வேத நாயகன். இப்படிப்பட்ட பரம்பொருளுடன் சினம் கொண்டு சலந்திராசுரன் போர் செய்ய வந்தான். சிவபெருமான் தரையில் தன் திருவடி விரலால் சக்கராயுதப் படை தோன்றச் செய்து, அது கொண்டு அவனை அழித்தான். மும்மலம் ஒழிந்த இடம்மும்மலங்களும் நீங்க இறை அருள் வேண்டும் எனக் கூறும் பாடல் எண் 343
“அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே”
கங்கையையும், சிவந்த பொன்போலப் பொலியும் விரி சடையையும் தனதாகக் கொண்ட எல்லாவற்றிற்கும் மூலமாயும், பழைமையாகவும் இருக்கும் சிவபெருமான் முப்புரங்களையும் எரித்தார் என்று சொல்பவர்கள் மூடர்கள். முப்புரம், திரிபுரம் என்று சொல்லப்படுபவை ஆணவம், கன்மம், மாயை என்னும் மன அழுக்குகளையே. இறைவன் இக்கோட்டைகளை அழித்ததை யார் பார்த்தார்கள்? சினத்தை அழித்த இடம்சினம் அழிய இறை அருள் வேண்டும் எனக்கூறும் பாடல் எண் 344
“முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர(ன்) ஆவ(து) அறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந்(து) அன்று கொலையே”
மந்திரம் ஒலிக்க ஓமத் தீ, வேள்வித் தீ, யாகத் தீ ஆகிய மூன்று தீக்களை வளர்த்து, செய்கின்ற வேள்வியுள் யானை போன்ற காரிருளைக் கிழித்துக் கொண்டு ஒளி உருவாய் வெளிப்படுவான் இறைவன் என்பதை வேள்வியைச் செய்தவர்கள் அறியவில்லை. அவர்கள் அத்தீயில் விழுந்து மடிந்தார்கள்.
1 thought on “திருமந்திரத்தில் அட்ட வீரட்டம்”