புல்லினங்காள்…

கறுப்பு, என்பதும் அழகுதான், கறுவலும் அழகிய
வெள்ளைப் பெட்டைகளைக் கவரும்!!!

சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம்,
எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம்,
2.0?” ரஜினிகாந்த் “2.0 வந்து சுபாஸ்கரனின் படம்”

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளிற்கு மேலாக கலக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பட்டாளம் அளப்பரியது, அட்டகாசமானது. ரசிகர் பட்டாளம் என்று இங்கு குறிப்பிடுவது ரஜினிகாந்தின் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிப்பைத் திரையில் கண்டு ரசித்து, மகிழ்ந்து ஆரவாரித்து, அதைப் பற்றி காலமெல்லாம் அலட்டிக் கொண்டிருப்பவர்களை மட்டும் தான், ரஜினிகாந்தின் அரசியலை இதில் கலக்கத் தேவையில்லை, கலக்கவும் கூடாது.

ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்களை எந்தவொரு பெட்டிக்குள்ளோ வட்டத்திற்குள்ளோ அடக்க முடியாது. வயது வேறுபாட்டில்லாது, சமூக அந்தஸ்து பார்க்காது, பால் வேறுபாடுகள் களைந்து, கல்வி தராதரத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, ரஜினிகாந்த் ரசிகன் என்ற ஒற்றைப் புள்ளியில் ரஜினிகாந்த் எனும் காந்த சக்தியால் ஈர்க்கப்படுபவன் தான் ரஜினிகாந்த் ரசிகன்.

ரஜினிகாந்த் ரசிகனாக ஒருவன் எப்போது ஆகிறான், ஏன் இப்படி ஆனான், எதற்காக அப்படி ஆகிவிட்டான் என்று யாருக்குமே தெரியாது, ரஜினிகாந்த் ரசிகனுக்கும் தெரியாது. முதல் முதலாக பாட்ஷா படத்தை பார்த்து வளர்ந்தவனும் பொல்லாதவன் படத்தை பற்றி கதைப்பான். இந்த நூற்றாண்டில் பிறந்து கோச்சடையான் பார்த்த குழந்தையும் அண்ணாமலை படத்தை ஆறு தரமாவது பார்த்திருக்கும்.

சிவாஜி, MGR பிறகு சிவக்குமார், கமல்ஹாசன் என்று வெள்ளைத் தோல் நாயகர்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் சினிமாவில் தோன்றிய முதலாவது கறுப்பு ஹீரோ ரஜினிகாந்த் என்பதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடும் விடயங்களில் ஒன்று. தமிழனின் தனிநிறம் கறுப்பு, கறுப்பு என்பதும் அழகுதான், கறுவலிலும் அழகிய வெள்ளைப் பெட்டைகளைக் கவரும் கவர்ச்சி இருக்கிறது என்று படத்திற்கு படம் நிரூபித்துக் காட்டியதும் ரஜினிகாந்தின் தனித்துவம் தான்.

தர்மயுத்தத்திலும் ஜானியிலும் வெள்ளை சேலையில் தேவதையாகத் தோன்றும் ஸ்ரீதேவியோடு, கண்களாலும் தனக்கேயுரித்தான உடலசைவுளாலும் ரஜினிகாந்த் காதல் செய்யும் காட்சிகளை யாராலும் மறக்க முடியுமா? கபாலியில் கூட குமுதவல்லியைக் காண காத்திருக்கும் அந்த நீண்ட நெடிய இரவுக் காட்சியிலும், காலாவில் தனது முன்னாள் காதல் கண்ணம்மாவோடு இரவுணவு உண்ணும் காட்சியிலும் ரஜினிகாந்த் முகத்திலும் உடலசைவுகளிலும் வெளிக்கொணரும் காதல் உணர்வை ரசிக்கலாம் தான் யாராலும் இருக்க முடியுமா?

ரஜினிகாந்த் படங்கள் என்றால் ரஜினிகாந்திற்கேயுரிய சில விசேட அம்சங்கள் இருக்க வேண்டும், அதை எதிர்பார்த்தே ரஜினிகாந்தின் ரசிகர்கள் “தலைவர் தரிசினத்திற்காக” வெள்ளித்திரைக்கு முன்பாக முதல் நாள் காட்சி காண ஓடோடி வருவார்கள்.

கபாலி, காலா என்ற இரு படங்களிலும் இயக்குனர் ரஞ்சித், வேண்டுமென்றே ரஜினிகாந்தின் தனித்துவங்களை தவிர்த்துவிட்டதாகவோ இல்லை அடக்கி வாசித்து விட்டதாகவோ இன்றும் ரஜினிகாந்த் ரசிகன் மனதுக்குள் கறுவிக் கொண்டு தான் திரிகிறான்.

ரஜினிகாந்தின் படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளில் உழஅநனல நடிகர்களிற்கு இணையாக ரஜினிகாந்த் பூந்து விளையாடும் போது, ரஜினிகாந்த் ரசிகன் கவலை மறந்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டேயிருப்பான். அந்தக் காலத்து தில்லுமுல்லுவில் தேங்காயோடும் சுருளியோடும், பின்னர் தொண்ணூறுகளில் மன்னன் படத்தில் கவுண்டமணியோடும், பத்தாண்டுகளிற்கு முன்பு சந்திரமுகியில் வடிவேலோடும் ரஜினிகாந்த் நடித்த நகைச்சுவை காட்சிகளை திரும்ப திரும்ப நூறு முறை பார்த்தும் ரஜினிகாந்த் ரசிகன் சிரித்துக் கொண்டேயிருப்பான்.

திரைப்பாடல்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பூ, மீனா, உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தோன்றி ரஜினிகாந்தோடு ஆட்டம் போட்டாலும், ரஜினிகாந்த் ரசிகனின் கவனம் மட்டும் சிதறாமல் ரஜினாகாந்தின் நடன அசைவுகளை ரசித்துக் கொண்டிருக்கும். ஆகாய கங்கை பாட்டில் கண்ணாடியை சுழற்சிக் கொண்டு வரும் ரஜினிகாந்திலிருந்து காதல் அணுக்கள் பாட்டில் கிட்டாரோடு உலாவும் ரஜினிகாந்த் வரை இந்த கருதுகோளிற்கு ஆதாரமாக காட்டலாம்.

ஒரு ஹீரோவாக, அதற்கு மேலே போய் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திரையில் நடித்திருந்தாலும், ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்ததாலோ என்னவோ Anti-hero கதாபாத்திரங்களில் ரஜினிகாந்தின் நடிப்பு அபாரமாக இருக்கும். மூன்று முடிச்சு படத்தில் வசந்த கால ஓடங்கள் பாட்டுக் காட்சியிலிருந்து, எந்திரனில் வரும் சிட்டியின் “வசீ.. மே” காட்சிவரை ரஜினிகாந்த் யவெi-hநசழ வாக கலக்குவார்.

எழுபதுகளில் Black&white படத்தில் அறிமுகமாகி, நினைத்தாலே இனிக்கும் எனும் அற்புதமான ஊழடழரச படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்து, பிறகு இந்தியாவின் முதலாவது animation படமான கோச்சடையானிலும் தோன்றிய ரஜினிகாந்த், நேற்று இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பொருட் செலவில் தயாரான 2.0 எனும் 3D படத்தில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று கலக்கியிருப்பார்.

2.0 திரைப்படம் பார்த்ததே ஒரு அழகான அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். 3D கண்ணாடி அணிந்து “தலைவர் தரிசனம்” காண போனால், கைக்கெட்டும் தூரத்தில் ரஜினிகாந்தைக் காண சில்லிட்டது. ஒரு பக்கத்தில் ரஹ்மானின் பின்னனி இசை திரைக் கதைக்குப் பலம் சேர்க்க, ரஜினிகாந்த் படங்களுக்கேயுரிய வேகத்தில் படம் பறக்கத் தொடங்குகிறது.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் நேர்த்தியாக செதுக்கப்பட்ட திரைப்படத்தில், ஆங்காங்கே வெளிப்படும் logic பிழைகளைக் கூட 3D கண்ணாடி மறைத்துவிடுகிறது. சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராத எமி ஜாக்சன் இந்த படத்திற்கு ஏன் ஷங்கர் தெரிவு செய்தார் என்ற மர்மத்தை நீங்கள் திரையில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்.

எந்திரன் படத்தில் வரும் வசீகரனை விட, 2.0ல் வரும் வசீகரன் நிறையவே வசீகரிக்கிறார். சிட்டி மீண்டும் வரும் காட்சிகளும் கெட்ட சிட்டியின் பஞ்ச் வசனங்களும் என்று ரஜினிகாந்த்தின் அனைத்து அவதாரங்களிற்கும் 2.0 ஆங்காங்கே களம் அமைத்து தந்திருக்கிறது.

2.0 படத்தில் மிகவும் அதிசயக்க வைத்த விடயம் அக்‌ஷய் குமாரின் இயல்பான ஆனால் மிரட்டும் நடிப்பு தான். ரஜினிகாந்திற்காக ஒருமுறை 2.0 பார்க்கலாம் என்றால், அக்‌ஷய் குமாரிற்காக இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

திரைக்கதைக்கு வலுச்சேர்க்கும் வலிய வசனம் எழுத சுஜாதா மட்டும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற கேள்வி எழுவதை மட்டும் ஷங்கராலும் ஜெயமோகனாலும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் நடிப்பாற்றலையும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தையும் மிஞ்சி, பிரவாகம் எடுத்து நிற்பது இயக்குனர் ஷங்கரின் கற்பனையும், அந்தக் கற்பனைக்கு திரைவடிவம் கொடுக்க அவர் செலவழித்திருக்கும் மனிதர்களின் உழைப்பும் Lycaவின் முதலீடும் தான்.

ZEE TVயிற்கு அளித்த பேட்டியில் “சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம், எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம், அப்படியென்றால் 2.0?” என்று அர்ச்சனா கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் “2.0 வந்து சுபாஸ்கரனின் படம்” என்பார்.

500 கோடி இந்திய ரூபாய்களிற்கு மேல் 2.0 என்ற திரைப்படத்தில் முதலீடு செய்து, இந்திய திரைத்துறையில் மைல்கல் பதித்த lyca நிறுவன உரிமையாளர் ஒரு ஈழத்தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை தான்.

அதேவேளை, இந்தியாவில் தயாராகும் ஒரு தமிழ் திரைப்படத்தில், risk எடுத்து, 500 கோடிக்கு மேல் முதலீடு செய்ய முன்வந்த ஒரு ஈழத்தமிழ் முதலீட்டாளனை, நமது தாயகத்தில் தொழில்வாய்ப்புக்களை வழங்கவில்ல ஒரு வியாபார முயற்சியில் முதலீடு செய்து, நமது மக்களின் வாழ்வை மேம்படுத்த நம்மால் இன்னும் முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

Lycaவைப் போல், புலத்தில் இன்று நம்மவர் நிறுவனங்களும் தனிநபர்களும் தங்கள் தங்கள் துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இவர்களில் அநேகமானோர் 1983ற்கு பின்னர், இனக் கலவரங்களாலும் யுத்தத்தாலும் புலம்பெயர்ந்தவர்கள்.

தாய் மண்ணின் மணம் மறவாதவதவர்கள், விடுதலை வேண்டி வேள்வி செய்த தன்னினத்திற்கு தானும் ஏதாவது செய்து விட வேண்டும் என்ற தீராத அவா உடையவர்கள், ஆயுதப் போராட்டத்திற்கு நிதியாதாரமும் moral ஆதரவும் அள்ளி அள்ளி அளித்தவர்கள், தங்களது தாய் மண்ணின் மகத்துவத்தை மீண்டும் கொண்டுவர தாங்களும் பங்காற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஆவலோடு காத்திருக்கிருப்பவர்கள்.

யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும், கடந்த நான்காண்டுகளில் நாமே நமது வடமாகாண சபையை நடாத்தியும், 2015ல் தெற்கில் ஒரு புதிய ஆட்சியை நிறுவ பக்க பலமாக நின்றும், வந்த அந்த நல்லாட்சி ஆட்டம் காணும் போதெல்லாம் முண்டு கொடுத்தது நின்றும், ஏன் நேற்றுக் கூட ரணிலின் ஐதேக கட்சி ஆட்சிக்கு வர சத்தியக் கடதாசியில் ஆதரவளித்து நிற்கின்ற போதும், புலத்தில் இருக்கும் நமது புலம்பெயர் மக்களின் நிதி மற்றும் மனித வளங்களை நமது தாயகத்தில் அல்லல்படும் தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வல்ல ஒரு பொறிமுறையை (mechanism) ஏற்படுத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

புல்லினங்காள் படும்பாட்டை படமாக்க ஐந்நூறு கோடி இந்திய ரூபாய்கள் முதலீடு செய்ய முன்வந்த நம்மினத்தவன், போரின் சிதைவுகளில் துவண்டு போய் இருக்கும் தன்னினத்தவனின் வாழ்வை மேம்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கினால் பறந்து வராமலா போய் விடுவான்?

“பொற்கால கதிரொளியை
சிறகசைத்து வரவேற்பாய்
பெண் மானின் மரக் கிளையை
தொட்டணைத்து தூங்க வைப்பாய்
சிறு காலின் மென் நடையில்
பெருங் கோலம் போட்டு வைப்பாய்
உனைப் போல பறப்பதற்கு
எனை இன்று ஏங்க வைப்பாய்
புல்லினங்காள் ஓ புல்லினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்”

என்ற காலஞ்சென்ற கவிஞர் நா. முத்துக்குமாரின் வரிகள் தாயக உறவுகளிற்கும் புலம்பெயர் தமிழர்களிற்குமிடையிலான ஒரு உரையாடலைப் போலவும் இருக்கிறதல்லவா?

—  யூட் பிரகாஷ்.

 

745 total views, 1 views today

1 thought on “புல்லினங்காள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *