பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !
குழந்தையின் மனதில் மகிழ்ச்சிப் பொங்கல், இளையோரின் மனதில் இன்பப் பொங்கல்,பெரியோரின் மனதில் பூரிப்புப் பொங்கல்.
இன்று தாய்த் தமிழ் உறவுகளின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். உலகில் உள்ள ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் உணவு உண்டு, ஆனால் உணவுக்காக மட்டும் கொண்டாடும் ஒரு கொண்டாட்டம் இந்தப் பொங்கல். விவசாயியின் விமரிசையான திருவிழா. “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச், சான்றோன் எனக்கேட்ட தாய்.” என்பதை போன்று தான் பயிரிட்ட பயிரை பார்த்து கொலுவிடும் கொண்டாட்டம்.
உலகில் கோடிக்கணக்கான பிள்ளைகளை பெற்ற ஒரே தந்தை ஒரே தாய் எங்கள் விவசாயி மட்டுமே. அவனின் ஆனந்தத்தை எவராலும் உணரமுடியாது. ஒரு தாய் பிள்ளை ஈன்றெடுக்கும் போது இருக்கும் வலியையும் சுகத்தையும் அவள் மட்டுமே உணர்வாள். அதே போன்ற உணர்வை, விவசாயியின் அந்த உணர்வை நாமும் உணரவே இந்த பொங்கல் திருவிழா. ஆனால் அந்த விவசாயி அவன் இன்பத்தை மட்டுமே எம்மோடு பகிர்கின்றான் அவன் பட்ட துன்பத்தை அவனுள் போட்டு மறைகின்றான். அப்படிப்பட்ட விவசாயியை வணங்கி, இந்தப் பொங்கலின் காரணத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
விவசாயி பொங்கலிடும் அழகே தனி, விவசாயம் செய்வதைப் போலவே பொங்கலிடுவான். ஆம் விவசாயம் செய்வது எப்படித் தெரியுமா? இயற்கை உரத்தை மண்ணிற்கிட்டு அங்கு பூச்சி புழுக்களை வரவளைத்து மண்ணைப் பதப்படுத்துவான். அதே போல வீட்டின் முற்றத்தில் அரிசிமாவால் கோலமிட்டு, தான் உண்ணமுன் தன் உணவு தயாராகும் முன்பே மண்ணில் உள்ள சிற்றுயிர்களுக்கு உணவளித்து நன்றி சொல்லிவிட்டு அந்த கோலத்தின் மத்தியில் மண்பானையில் பொங்கலிடுவான்.
ஏன் அந்த மண்பானை என்றால், விவசாயத்திற்கு முதலில் முக்கியமானது வயல் நிலம், அந்த வளமான வயலைத் தரும் பூமாதேவியை மறக்காமல் நன்றி சொல்லவே மண்ணில் பானை செய்கின்றான். அந்த விவசாய நிலத்தில் உழுவதற்காக நீரை பாச்சுவது போல மண்பானையுள் தண்ணீர் விட்டு சமையலைத் தொடங்குகின்றான். இப்போது ஒரு சந்தேகம் இயல்பாக வரும்,
தாயான பூமியில் தீயாலே சுடுவதேன் என்று, தாயின் மார்பில் பால் குடிக்கும் குழந்தை தாயை எட்டி உதைப்பது போல், மார்பை வெட்டிக் கடிப்பது போல், மனிதன் தான் வாழத் தீ மூட்டுவான். அதை தாய் பொறுத்துத் தாங்கிக் கொள்வாள். இதில் விவசாய உவமையும் உண்டு, விளைநிலத்தை வளப்படுத்தவும், அதில் தீமைதரும் மண்மேல் வாழ் நுண்ணுயிர்கள் அழிந்திடவும், வைக்கோற்ப்பற்று என்று ஒரு விவசாய முறையும் உண்டு. வயலில்த் தீ மூட்டி நிலத்தைப் பண்படுத்தும் முறை. அதை உவமிக்கும் வண்ணம் பானையின் அடியில் தீமூட்டுவான் விவசாயி.
அடுத்து பானையில் பாலை ஊற்றுகின்றான். பால் விதை நெல்லை போன்று தூய்மையானது. மண்ணில் விதையைப் போடுவதைப் போல மண்பானையில் பாலையிட்டு பணிவாகக் காத்திருப்பான், பால் பொங்கி மேல்சாயும், எப்படித் தெரியுமா? பயிரிட்ட விதைகளில் பயிருண்டாகி கதிர்வந்து வளைந்து நிக்குமே அதேபோல பாலும் பானையில் வளைந்து வழியும், அந்த அழகைப் பார்த்த விவசாயி சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் அண்ணாந்து பார்த்து பொங்கலோ பொங்கல் என்று கத்தி மகிழ்வான்.
இப்போது அவனின் சொத்து அந்த நெற்கதிராகி வரும் அரிசி, அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் எண்ணற்ற மகிழ்ச்சி பூரிப்பு இன்பம் என்று அனைத்தையும் உவமிக்கும் விதமாக பொங்கிய பொங்கல்ப் பானையில் அரிசியிட்டு அவியவிட்டு அதைத் தொடர்ந்து சர்க்கரை இனிப்பு பருப்பு என்று அனைத்தையும் இட்டு சமைத்து எடுத்து தன் இன்பத்திற்குக் காரணமானவன் சூரியன், சூரியனின் கதிர்களில் தான் இந்த இயற்கையே உருவானது என்று நன்றி சொல்லும் விதமாக சூரியனைப் பார்த்து படைத்து குடும்ப உறவுகள் அனைவரோடும் சேர்ந்து வீழ்ந்து வணங்கி கொண்டாடும் கொண்டாட்டமே இந்தப் பொங்கல்க் கொண்டாட்டம் ஆகும்.
பானை இல்லாமலும் பொங்கலாம். – நெருப்பைப் பற்ற வைக்காமலும் பொங்கலாம். – நெல் ஆலை இல்லாமல்ப் பொங்குமோ? – நல்அரிசி இல்லாமல்ப் பொங்குமோ?
— – சிந்தனை சிவவினோபன்
765 total views, 2 views today
1 thought on “பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !”