ஏமாற்றம்
என்ன நண்பர்களே? இச் சொல்லினைக் கேட்டாலே உங்கள் அனைவரின் மனதில் ஏதோ ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா? ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏமாந்து போனவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கின்றீர்களா? இல்லை என்று கூறமுடியாது அல்லவா!
மனிதனின் வாழ்க்கையில் ஏமாற்றம் என்பது வந்து வந்து போகின்றது. ஏன், எதற்காக ஏமாற்றம் என்பது நிகழ்ந்து வருகின்றது? மனிதன் என்பவன் எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பதினால் அவனுக்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது. ஆனால் எதிர்பார்ப்பு இல்லாவிடின் வாழமுடியுமா?
எது இலகுவான விடயம்? எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்வதா அல்லது ஏமாந்துபோவதா?
இறைவனிடம் கேட்டது கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம். பிள்ளைகள் தங்கள் கடமையிலிருந்து தவறினால் ஏமாற்றம். வேலைவாய்ப்பு சரியாக அமையவில்லை என்றால் ஏமாற்றம். கல்வியில் பட்டம் பெறவில்லையென்றால் ஏமாற்றம். பணம் வாங்கி திரும்பி கொடுக்காவிடின் ஏமாற்றம். நண்பர்கள் உண்மையாக இருக்க முடியவில்லை என்றால் ஏமாற்றம். காதல் கைகூடவில்லை என்றால் ஏமாற்றம். மற்றும் திருமணங்களிலும் ஏமாற்றம். அன்பு, பாசம், காதல், விருப்பு, நன்றி, நம்பிக்கை அனைத்தும் அழகியவை. ஆனால் ஏமாற்றம் என்பது வந்து இவையனைத்தையும் அழித்து விடுகிறது.
இவ்வுணர்வுகளை அழித்தபின் இவ்வேதனைகளைத் தாங்கும் வலிமை எல்லோருக்கும் இருக்காதல்லவா! மன அழுத்தம் ஏற்பட்டு துன்பநிலைக்குள் உள்ளாகிவிடுகிறார்கள். கோபம், சண்டை, பொறாமை மற்றும் வெறுப்பு போன்ற தீய எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஏன்? நம்பிக்கைகள் கொடுத்து நம்பவைத்ததனாலேயா!?
பெற்றோர்களுக்கு சிறுவயதில் பிள்ளைகள் கூறியிருப்பார்கள், நாங்கள் இருக்கிறோம் என்று. அதேபோல் வளர்ந்த பின்னும் நாம் பெற்றோரைக் கவனிக்க வேண்டும் ஏமாற்றிவிடக்கூடாது. கல்வி,வேலை. நம் சொந்தக்காலில் நிற்பதற்கும் மற்றவர்களை நம்பி ஏமாறாது இருப்பதற்கும், இவ்விரண்டும் அவசியமானவை.
காதலிக்கும் போது கூறிய விடயங்கள் அனைத்தும் திருமணம் செய்தபின்னும் கடைப்பிடித்தால் தான் திருமண வாழ்க்கையும் நன்றாக அமையும். அதேபோல் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களை ஏமாற்றியோ அல்லது பொய்கள் கூறியோ செய்துவைத்தும் வாழ்க்கையினை அழித்துவிடாதீர்கள்.
காதல்! காதல் இல்லாமல் இவ்வுலகில் யார்? ஆணோ பெண்ணோ மற்றவர் மீது உள்ள காதலினாலும் நம்பிக்கையினாலும் எங்கோ பிறந்த இருவர் ஒன்று சேருகின்றனர். ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு ஆழமானது. அவ்வன்பு உள்ளவர்களை நாம் ஏமாற்றி விடலாமா? நம்பிக்கை கொடுத்தால் இறுதி வரை காக்கவேண்டும். தவறுகள் செய்வது மனித இயல்பு. இவற்றை சரி செய்து திரித்திக் கொண்டு ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும். நடுபாதையில் விட்டுச் செல்வதல்ல காதல்! தன்னைவிட தான் விரும்புவரை அதிகமாக நேசிப்பவர் ஏமாற்ற மாட்டார். சுயநலமாகச் சிந்திப்பவர் ஏமாற்றிவிடுவார். உண்மையாகக் காதலிப்பவர் ஒருநாளும் ஏமாற்ற மாட்டார்கள்.
காதல் என்றாலே! அது உண்மையின் வடிவமே! ஆனால் அது இன்று உண்மைக் காதல் பொய்க் காதல் என சொல்லும்படியாயிற்று. ஏமாற்றப் பட்டவர்களின் கவலை தாங்கிக்கொள்ளமுடியாதது. அதனாலே சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். காதல் என்பது புனிதமானது. காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு: நீங்கள் காதலுக்கு மரியாதை கொடுப்பவர்கள், அதனால் கவலைப் படாதீர்கள்! எவரையும் ஏமாற்றாத உங்கள் தூய காதல் ஏதோ ஒருவழியில் உங்களை சிறப்பாக வாழவைக்கும்.
ஒரு திரைப்படம் பார்க்கப்போகும் பொழுது எவ்வளவோ எதிர்பார்ப்புடன் செல்கின்றோம். நம் வாழ்க்கைமீது அதனைவிட அதிகமான எதிர்பார்ப்பு இருக்காதா?
நாம் ஏதோ ஒரு வகையில் ஏமாந்திருப்போம், அதேபோல் நாம் யாரையாவது ஏமாற்றியிருப்போமா? சின்ன சின்ன பொய்கள் கூறி? அப்படி செய்திருந்தால் அடுத்த நிமிடமே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டால் எப்படி இருக்கும்? கோபம் உள்ளவர்கள் கூட மன்னித்து விடுவார்கள். நாம் இவ்வுலகில் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? நம் நினைவுகளை மட்டுமே!
ஏமாற்றம் என்ற சொல்லில் “ஏ” என்ற எழுத்தினை அகற்றினால் வரும் சொல் மாற்றம். இந்த மாற்றம் வாழ்வில் பல வடிவங்களில் வந்ததும். மனிதன் அதற்கு அடிமையாகி பலரை ஏமாற்றி விடுகின்றான். ஆனால் ஏமாந்தவர்கள் தங்கள் தன்னம்பிக்கையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்க்கை யைக் காதலியுங்கள், வாழ்வை வண்ணமாக்குங்கள்.
ஏமாற்றவும் கூடாது, ஏமாறவும் கூடாது. தடுமாற்றம் கூடவே கூடாது.
— றஜினா தருமராஜா
1,887 total views, 1 views today
2 thoughts on “ஏமாற்றம்”