போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம்!

ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைன்னு பேச ஆரம்பிக்காதீங்க, சில விதி விலக்குகள் உண்டு.

ரஜினியின் வெற்றிப்படங்களைக் கூட்டிக் கழித்து அலசிப் பார்த்தால் ‘பழிவாங்குடா’ எனும் ஒற்றை வரியில் அடங்கிவிடுபவை தான் பெரும்பாலானவை. அதை எப்படி திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ரஜினியிசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பதை வைத்தே படம் பாக்ஸ் ஆபீஸில் நிலைப்பதா, பாக்ஸ்லேயே நிலைப்பதா என்பது முடிவாகிறது. அந்த வகையில் ரஜினியின் அத்தனை பலங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து, பிரேமுக்கு பிரேம் அலங்காரப்படுத்தியிருக்கும் படம் தான் பேட்ட.
“வயசானாலும் உன் அழகும் இளமையும் இன்னும் போகல” என படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பில்டப் கொடுப்பார். அந்த படம் வந்தே இருபது வருடங்கள் ஆகி விட்டது. அந்த வசனத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தலாம் எனுமளவுக்கு, மேக்கப்பும், ஆடைகளும் கேமராவும் ரஜினியை அழகுபடுத்தியிருக்கின்றன.
அட இந்த சீன் பாஷா மாதிரி, அட இது நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைல், ஆஹா இது தளபதி காட்சி என ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி சிலாகிக்கிறார்கள். பழைய படங்களையெல்லாம் நினைவுபடுத்தி இதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.
அனிருத்தின் இசை கூட ரஜினியின் பிரபல பின்னணி இசைகளின் கோர்வையாய் இருப்பது ஒரு தனி ரசனை. அதை தனது ஸ்பெஷல் முத்திரைகளுடிடன் கலந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக அனிருத் இசையை ம்யூட் போட்டுக் கேட்டால் கூட காதில் இரத்தம் வடியும். இதில் அந்த சத்தங்களில் சண்டை இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.

கதாபாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் உடல் மொழியும் நடிப்பும் ஆஹா ரகம் என்றால், வெறும் கண்களாலேயே நடித்து முடித்து விடும் நவாசுதீன் சித்திக் ஆஹாஹா ரகம். ஆனால் பெரிய வாழையிலையில் வைத்த ஒரு தேக்கரண்டி பிரியாணி போல அவர்களுடைய பார்ட் சட்டென முடிந்து விடுகிறது. என்ன தான் இருந்தாலும் அந்த அக்மார்க் மதுரைக்கார பாம்படப் பாட்டியின் வீட்டில் மகேந்திரனின் ஒரு மகனாக நவாசுதீனையும் இன்னொரு மகனாக

அருவா ஆறுமுக மீசையையும் பார்ப்பது உறுத்துகிறது. மகளின் முகத்திலும் மதுரை சாயல் இல்லை. சரி, குடும்பத்துல எதுக்கு பிரச்சினை கிளப்பிகிட்டு… வேண்டாம் விட்டுடுவோம்.

ஓ.. சொல்ல மறந்து விட்டேன் சிம்ரன், திரிஷா இருவரையும் பார்த்த ஞாபகம். அட, சசிகுமாரைக் கூட பார்த்தேனே, ஓ பாபி சிம்ஹா கூட வந்தாரே.. இப்படித் தான் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. காளியை திரையுலகில் அறிமுகப் படுத்திய மகேந்திரனையே ரெண்டு காட்சியோடு மட்டையாக்கியிருக்கிறார் சுப்புராஜ்ன்னா பாத்துக்கோங்க.

தொன்னூறுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களில் கடைசியில் ஒரு வரி சேர்ப்பார்கள். “பாட்டு பைட்டு சூப்பர்”. அதை இதிலும் சேர்க்கலாம், ரசிக்க வைக்கிறார்கள்.

ரஜினிக்கு வயசாயிடுச்சு, அந்த நிஜத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை முடிந்தவரை ஸ்டாக மாற்ற கேமரா கோணங்களையும், அரையிருட்டுக் காட்சிகளையும், மெல்லிய புகைமண்டலப் போர்வைகளையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பு.

முதல் பாதி அழகான இயற்கைக் காட்சிகளுடனும், சுவாரஸ்யங்களுடனும், பில்டப்களுடனும் பிரமாதப்படுத்துகிறது. பாஷாவைப் போல ! இரண்டாவது பாதி, அந்த பாஷாவின் பில்டப்பை ஈடு செய்யவில்லை என்பது தான் நிஜம். ஆனாலும் பரபரக்கிறது. ஒருவகையில் இரண்டு வில்லன் குரூப், இரண்டு கதைக் களம் என கடைசியில் இரண்டு ரஜினி படங்கள் பார்த்த உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இது எதிர்பார்த்த டுவிஸ்ட் தான் என சினிமா ஜாம்பவான்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என இன்னொரு டுவிஸ்ட் கொடுத்து பீட்ஸா பரந்தாமன் கார்த்திக் சுப்புராஜ் வியக்க வைக்கிறார்.

ஆங்காங்கே வைத்திருக்கும அரசியல் பொடிகள் விசிலடிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு காட்சியையும் ரஜினியின் அறிமுகக் காட்சியைப் போல செதுக்கியிருப்பது இயக்குனரின் உள்ளே ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகருக்கானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவனிடமிருந்து வழிந்த ஒரு படம் இது.

காலா படத்தின் ஆழமான சமூகப் பார்வையை இதில் பார்க்க முடியாது. ஆனால் ரஜினியிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை இதில் நிச்சயம் பார்க்கலாம்.

போர்வரும்போது சொல்கின்றேன் இரசிகர்களே தயாராக இருங்கள் என தன் அரசியல் வரவுகுறித்து ஒருவருடங்களுக்கு முன் ரஜினி சொன்னவர்.

அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம். வெற்றி சர்வ நிச்சயம் என்பது இந்தப் படம் ரஜினிக்குச் சொல்லும் பாடம்.

-வெற்றிமைந்தன்

729 total views, 2 views today

1 thought on “போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *