50 வது பிறந்த நாள் கொண்டாடிய உலக கார் ஓட்டவீரன்
உலகத்தின் கார் ஓட்ட வீரரான யேர்மனியைச் சேர்ந்த மைக்கல் சூமாக்கர் கடந்த 3.1.2019 அன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் இந்தப் பிறந்தநாள் பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது. 2013ம் ஆண்டு நிகழ்ந்த பனிச்சறுக்கு விபத்து ஒன்றில் சிக்கியதால் இன்றுவரை அவர் ஹோமா நிலையிலேயே இருந்து வருகின்றார். உலகத்தின் வீரனுக்கு அதாவது பல்லாயிரம் கார் ஓட்ட ரசிகர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்ற வீரனுக்கு இப்படி ஒரு நிலை வந்ததா?…எனப் பலரை வேதனைக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி இருக்கின்றது.
மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher பிறப்பு ஜனவரி 3, 1969 ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 (Formula-1) ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக கிண்ணப் பட்டத்தை வென்றுள்ளார்.
எக்காலத்துக்கும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார் பெராரி அணிக்காக போட்டியிட்ட இவர், 91 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர். பார்முலா 1 பந்தயங்களில் மிக கூடுதலான போட்டிகளில் வென்றமை, மிக விரைவான சுற்றுக்கள், மிகக் கூடுதலான முன்னணி நிலைகள், ஒரே பருவத்தில் பல போட்டிகளில் வென்றமை (2004ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் வென்றார்) என பல சாதனைகளுக்கு உரிமையாளர்.
2002ஆம் ஆண்டில் அப்பருவத்தின் ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது பார்முலா 1 வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தாததாகும். அடுத்தடுத்து வாகை சூடிய வகையிலும் சாதனை புரிந்துள்ளார். பார்முலா 1 வலைத்தளத்தின்படி இந்த விளையாட்டில் புள்ளிவிவரப்படி கண்ட மிகச் சிறந்த ஓட்டுநர் இவரேயாம்.
2013 பனிச்சறுக்கு விபத்து
டிசம்பர் 29, 2013 அன்று சூமாக்கர் தமது மகனுடன் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சரிவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந் தபோது விழுந்து கல்லில் தலை மோதியது. அப்போது அவர் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இல்லாது அதற்கு வெளியே இருந்தார். விபத்து நடந்த பதினைந்து நிமிடங்களுக்கு உள்ளாகவே இரு பனிச்சறுக்கு கண்காணிப்பாளர்களால் கவனிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வான்வழியே கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரனோபிள் நகரில் மூளைக் காயங்களுக்கு சிறப்பு வைத்தியம் வழங்கும் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சூமாக்கர் புறவழி மூளைக் காயத்தினால் மருந்துகளால் தூண்டப்பட்ட ஆழ்மயக்கத்தில் இருப்பதாகவும் பெருமூளை நசுங்கிஇருப்பதை மருத்துவ வரைவிகள் காட்டியதால் மூளை அழுத்தத்தை குறைக்க அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை
வெளியிட்டது.பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது மருத்துவர்கள் அவர் தலைகவசம் அணிந்திருந்தமையாலேயே உயிர்தப்பினார் எனக் கூறினர். அறுவை சிகிச்சைக்குப் பின்னதான வரைவுகள் “பரவலான குருதிக்கசிவு கோளாறுகள்” மூளையின் இருபக்கத்திலும் காணப்படுவதாகக் கூறிய மருத்துவர்களுக்கு அதன் விளைவுகளை கூற இயலவில்லை. அவரது நெருங்கிய நண்பரும் மூளை மற்றும் தண்டுவட காய நிபுணருமான மருத்துவர் கெரார்டு சையாந்த் சிகிச்சை அளித்து வருகிறார். இன்றுவரை 2019 தைமாதம் 5 வருடங்களாகக் (ஹோமா) சுயநினைவு இழந்த நிலையிலேயே இருந்து வருகிறார்.
மகன் Mick Schumacher
சூமாக்கரின் மனைவி பெயர் Corinna Betsch. 1995ம் ஆண்டு திருமணம் செய்த இவருக்கு ஒரு ஆண் Mick Schumacher ஒரு பெண் Gina-Maria Schumacher என இரு பிள்ளைகள். அவரது மகன் தற்போது ஐரோப்பா ரீதியான போட்டிகளில் பங்குபற்றி வருகிறார். சில போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தந்தையைப் போல் தனயனும் வெற்றிகள் பல குவிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
சூமாக்கரின் வெற்றிகள் பற்றிய சிறுகுறிப்பைப் பார்ப்போம்.
-முதல் பந்தயம் – 1991 பெல்ஜியம்
-முதல் வெற்றி 1992 பெல்ஜியம்
-கடைசி வெற்றி 2006 சீனா
-கடைசிப் பந்தயம் – 2011 யேர்மனி
-சர்வதேச பெரு வெற்றிகள் – 7
-பெற்ற வெற்றிகள் – 91
-2வது இரண்டாவது பரிசு வெற்றிகள் – 43
-ஒரே நாட்டில் (பிரான்ஸ்) பெற்ற வெற்றிகள் – 8
-மிக வேகமாக ஓடிமுடித்த போட்டிகள் – 77
-ஒரே ஆண்டில் பெற்ற வெற்றிகள் – 13
-போட்டிகளில் ஓடிய தூரம் – 24.148 முஆ
-உலக நட்சத்திரமாகத் திகழ்ந்த நாட்கள் – 7.763
இப்படியாகப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், உலக கார் ஓட்ட ரசிகர்களின் ஒப்பற்ற வீரன், ரசிகன் இன்று படுத்த படுக்கையாகக் கிடந்து கொண்டே தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அடுத்த பிறந்தநாளுக்கு முன்பாக அவர் உடல் சுகநலம் பெற்றுவர எல்லோரும் மன்றாடுவோம்.
— வ.சிவராஜா
704 total views, 1 views today
1 thought on “50 வது பிறந்த நாள் கொண்டாடிய உலக கார் ஓட்டவீரன்”